ஜோதிடத்தில் மருத்துவம் : சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை-தீமை


ஜோதிடத்தில் மருத்துவம் : சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை-தீமை
x
தினத்தந்தி 22 Jun 2018 12:30 AM GMT (Updated: 21 Jun 2018 8:37 AM GMT)

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவரு டைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.

சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையை கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தருவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும்.

ஏழு தலைமுறைகளுக்காக சொத்து களைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான். அந்த சொத்துகளை கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது. தொழில் அதிபர் என்கிற தகுதியை தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வம்சாவழியாக வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.

மன வைராக்கியத்தை அருள்பவர், பிறரது மரணம் அடையும் கால நேரம் அறியும் சக்தி, மரணத்திற்கு பின் நடக்கும் சம்பவங்களை உணரும் சக்திகளைத் தருபவரும் சனி பகவானே. வக்கீல் தொழில், நீதிபதி பதவி, ரெயில்வே துறையில் பெரிய பதவிகள், காலணி கடை, கசாப்பு கடை, எருமை பண்ணை, மர விறகு கடை போன்றவற்றால் லாபத்தை அருள்பவர் சனீஸ்வரன். தவிர பிண அறையில் காவலாளி வேலை, பிணத்தை அறுத்து ஆய்வு செய்யும் (போஸ்மார்ட்டம்) பணி, சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பது, அவசர உதவி ஆம்புலன்ஸ் வண்டியில் வேலை போன்றவற்றுக்கு சனி பகவானின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது.

சனி தரும் பாதிப்புகள்

நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம் போன்றவற்றுக்கும் சனி பகவான் தான் காரணமாக இருக்கிறார்.

மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த,  தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.

ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபடுவது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன்.

பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு. தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், ஒழுக்க நெறி தவறிய ஆன்மிக மடம், ஆலயங்கள் ஏற்படவும் சனியே காரணமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் ஆயுள் முடியும் அன்றைய தினம் முழுவதும் சனியே அந்த நபரை ஆதிக்கம் செய்கிறார்.

சனி தரும் நோய்கள்

* சனி பகை ராசியான கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளில் நின்று இருந்தால், உடல் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மனம் சங்கடத்தில் இருக்கக்கூடும். நோய்க்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதில் கூட நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். சின்ன காய்ச்சல் வந்தால் கூட மரண பயம் அப்பிக் கொள்ளும்.

* சனி நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

* சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும்,  உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.

* பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் சனி நின்று இருந்தால், எந்த நேரமும் ஏதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். தன் உடலைப் பற்றியோ, நோயை பற்றியோ பெரிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.

* சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6-ம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6-ம் இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.

* சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.

* சனி கிரகம் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகர் மன நோயாளி போல் நடந்து கொள்வார். உடலுக்கு ஆகாது என தெரிந்தும் அந்த உணவுகளையே உண்டு அவதிப்படுவார்.

* சனி கிரகமே லக்னத்திற்கு பாவியாக பாதகாதிபதியாக இருந்தால், சனியின் நிலையை பொறுத்தே பலன் எழுத வேண்டும் என்றாலும் சனி கிரகம் அவ்வப்போது ஏதாவது உடல் உபாதையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

* சனி கிரகத்தின் மீது பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி பார்வை ஏற்பட்டால், அந்த ஜாதகர் மூலிகை எண்ணெய், நோய்க்கு உதவாத மருந்துகள் எடுத்து அவதிப்படுவார். போதை வஸ்துகள் மூலம் நோய்கள் வரக் கூடும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.


சனிக்குரியவை

காரகன்     -     ஆயுள்
தேவதை     -     ஈஸ்வரன்
தானியம்     -     எள்
உலோகம்     -     இரும்பு
நிறம்     -     கருப்பு
குணம்     -     தாமஸம்
சுபாவம்     -     குரூரர்
சுவை     -     கசப்பு
திக்கு     -     மேற்கு
உடல் அங்கம்     -     தொடை
தாது     -     நரம்பு
நோய்     -     வாதம்
பஞ்சபூதம்     -     காற்று
பார்வை நிலை     -     தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10 ஆகிய இடங்களின் மீது முழுமையான பார்வை, 5,9 ஆகிய இடங்களில் அரை பங்கு பார்வை, 4,8 ஆகிய இடங்களில் முக்கால் பங்கு பார்வை.
பாலினம்     -     ஆண்- பெண்  இல்லாத தன்மை
உபகிரகம்     -     குளிகன் (மாந்தி)
ஆட்சி ராசி     -     மகரம், கும்பம்
உச்ச ராசி     -     துலாம்
மூலத்திரிகோண ராசி    -     கும்பம்
நட்பு ராசி     -     ரிஷபம், மிதுனம், கன்னி
சமமான ராசி     -     தனுசு, மீனம்
பகை ராசி     -     கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி    -     மேஷம்
திசை ஆண்டுகள்     -     பத்தொன்பது ஆண்டுகள் ஒரு ராசியில்
சஞ்சரிக்கும் காலம்     -     இரண்டரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள்     -     புதன், சுக்ரன், ராகு, கேது
சமமான கிரகம்     -     குரு
பகையான கிரகங்கள்    - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிக பகையான கிரகம் - சூரியன்
இதர பெயர்கள்     -    கரியவன், அந்தகன்,  காளி, கௌரி, மந்தன்,  முதுமகன், முடவன்
நட்சத்திரங்கள்     -     பூசம், அனுஷம்,  உத்திரட்டாதி

Next Story