மூட நம்பிக்கையை முற்றிலும் தடுத்த நபிகளார்


மூட நம்பிக்கையை முற்றிலும் தடுத்த நபிகளார்
x
தினத்தந்தி 10 July 2018 5:25 AM GMT (Updated: 10 July 2018 5:25 AM GMT)

மக்களின் மூட நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் மிக்க கவலை கொண்டிருந்தார்கள் நபிகள் நாயகம்.

“நபியே! நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம். ஆகவே அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக நீர் உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுத்து வருவீராக. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்” (திருக்குர்ஆன் 108:1-3)

கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தது முதல் தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு பாவச்செயல்களிலும் ஈடுபட்டதே இல்லை. 40-வது வயதில் அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்தது. அந்த 40 ஆண்டு கால வாழ்க்கை, அவர்களின் நல்லொழுக்கத்தை எடுத்துக்காட்டும் சிறந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.

அரபு தேசத்தில் கரடு முரடான குணங்கள் கொண்ட மக்கள் வாழ்ந்த காலத்தில், நபிகளாரின் அமைதியான தோற்றமும், அன்பான பேச்சும் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிறரின் நலனுக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்ட எத்தனையோ நிகழ்வுகள் நபிகளார் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

இளமை காலத்திலேயே ‘அல் அமீன்’ (நம்பிக்கையாளர்) என்ற அடைமொழியிலேயே நபிகள் நாயகம் அழைக்கப்பட்டார்கள். அத்தனை அரேபியரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொறுப்பை (அமானிதம்) அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தனர். அந்த அளவிற்கு அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

தங்கள் சொந்தங்களையே பாதிப்பதாய் இருந்தாலும் உண்மையை எடுத்துச்சொல்வதில் ஒருபோதும் நபிகளார் தயங்கியது இல்லை. இதை அத்தனை அரபு மக்களும் அறிந்திருந்தனர். அதனால் தான் நபிகளார் மீது அரபு மக்கள் அன்பும் பாசமும் கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் மேலாக நபிகளார் மீது பயம் கலந்த மரியாதையும் அந்தக்கால மக்கள் வைத்திருந்தனர்.

நபிப்பட்டம் பெற்ற பிறகு இறைவனின் வசனங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது, அதை ஏற்க அந்த மக்கள் தயங்கினார்கள், மறுத்தார்கள். நபிகளாரை எதிர்க்கவும் துணிந்தனர்.

தங்களது சுகபோக வாழ்க்கை முறையை கண்டிக்கும் வகையில் இறைவசனங்கள் இருந்த தால் அரபு மக்கள் அதை ஏற்க மறுத்தனர். மேலும், அந்த இறை வசனங்களை எடுத்துக் கூறிய நபிகளா ரையும் வெறுத்து ஒதுக்கவும் முன்வந்தனர். எந்த மக்கள் தன்னை கொண்டாடினார் களோ, அந்த மக்களே தன்னை வெறுத்து ஒதுக்கும் தலைகீழான நிலைமையையும் நபிகளார் சந்தித்தார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் இளமைப் பருவத்தில் இருந்தே அறிவிலும் ஆற்றலிலும் திறம் பல பெற்றிருந்தார்கள். அறிவு நுட்பத்தோடு, அதே சமயம் நியாய உணர்வோடு அவர்கள் செய்த வியாபாரம் அரபு தேசத்தில் அவர்களுக்கு தனி அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.

அந்த காலகட்டத்தில் மக்காவில் பெரும் வியாபார சீமாட்டியாக விளங்கிய அன்னை கதீஜா, நபிகள் பெருமானின் குணநலன்கள், வியா பாரத் திறன்கள் பற்றி அறிந் தார்கள். தன் தோழியர் மூலம் செய்தி அனுப்பி, வியாபாரத்தில் தனக்கு உதவுமாறு நபிகளாரைக் கேட்டுக்கொண்டார்கள்.

அன்னையின் அன்பிற்கு மரியாதை கொடுத்து அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு முறை நிறைந்த வியாபார பொருட்களுடன் சிரியா சென்று நல்லதொரு லாபத்தை ஈட்டி வந்தார்கள்.

அருமை நாயகத்தின் அருங்குணங் களை அறிந்த அன்னை கதீஜா, நாயகம் அவர்களைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள். நபிகளாரும் ஏற்றுக்கொள்ளவே, திருமணமும் நல்லபடியாக நடந்தது.

அன்னை கதீஜா, நபிகள் நாயகத்தை விட வயதில் மூத்தவர், கணவனை இழந்த கைம்பெண். இருந்தாலும், அவர்கள் இருவரும் எந்த வித வேறு பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இல்லறத்தை நல்லறமாய் பேணிக்காத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரின் வாரிசாக காஸிம் (ரலி), அப்துல்லா (ரலி) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும், ஜைனப் (ரலி), ருக்கையா (ரலி), உம்மு ஹூல்ஸும் (ரலி), பாத்திமா (ரலி) ஆகிய பெண் குழந்தைகளும் பிறந்தார்கள்.

இதில், பெண் குழந்தைகள் மட்டுமே நீண்ட காலம் உயிருடன் வாழ்ந்தனர். ஆண் குழந்தைகள் இரண்டும் சிறுவயதிலேயே காலமாகி விட்டனர்.

அன்னை கதீஜா மறைவிற்குப் பிறகு மரியா பின்து ஷம்ஊன் (ரலி) அவர்களை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராகிம் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை மீது அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

ஆனால், இளவயதிலேயே மகன் இப்ராகிம் மரணமடைந்தார். இந்த செய்தி கேட்டு பெருமானார் (ஸல்) நிலைகுலைந்து போனார்கள். எத்தனையோ சோகங்களிலும் அழுது அறியாத அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

அப்போது தற்செயலாக சந்திர கிரகணம் ஏற்பட்டது. உடனே சில சஹாபாக்கள் ‘நபிகளின் மகன் மரணித்து விட்ட காரணத்தினால் தான் சந்திர கிரகணம் ஏற்பட்டுவிட்டது’ என்ற செய்தியை மக்களிடையே பரப்பினார்கள்.

இந்த செய்தியைக் கேள்வியுற்ற கண்மணி நாயகம், தன் துக்கத்தையும் மறந்து எல்லா தோழர்களையும் மதினாவில் உள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நபவியில் ஒன்று கூட்டி இவ்வாறு உரை நிகழ்த்தினார்கள்:

“அல்லாஹ் நிகழ்த்தி காட்டும் இயற்கை நிகழ்வுகள்தான் சூரிய, சந்திர கிரகணங்கள். அவைகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி, அது அதற்கென வரையறுக்கப்பட்டுள்ள வட்ட வரைக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் எப்போதாவது ஒரு நேர்கோட்டில் வரும் போது இது போன்ற கிரகணங்கள் ஏற்படுவது இறைவனின் கட்டளை. இயற்கையின் நியதி. சூரா யாஸின் இன்னும் பல இடங்களில் இதனை அல்லாஹ் வசனமாய் அமைத்திருப்பதை நான் உங்களுக்கு ஓதிகாட்டவில்லையா? அப்படிப் பட்ட இயற்கை நிகழ்வுகளுக்கு, யாராயிருந்தாலும் அவர்களின் பிறப்போ, இறப்போ காரணமாக இருக்க முடியாது. அறியாமை காலத்தில் இருந்தது போல நீங்கள் இன்னும் மூட நம்பிக்கையை நம்பி பகுத்தறிவை மறுக்க எத்தனிக்கிறீர்களா?, இது அறியாமை. எனது மகன் இப்ராகிம் இறப்பிற்கும் இந்த கிரகணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்கள்.

தான் துக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் மூட நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும் என்பதில் மிக்க கவலை கொண்டிருந்தார்கள் நபிகள் நாயகம்.

இதே சம்பவத்தைப் பயன்படுத்தி அபூஸூபியானும் அவனைச் சார்ந்த குரைஷி குலத்தின் எதிரிகளும், “இதோ இந்த முகம் மதுக்கு வாரிசே இல்லாமல் போய் விட்டது. இவர் என்னவோ தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்று ஏளனம் செய்தனர். அரேபியரிடையே ஆண் வாரிசு என்பது அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது.

உடனே அல்லாஹ் மேலே சொன்ன வசனத்தை இறக்கி “நபியே! உங்கள் எதிரிகள் தான் சந்ததியற்றவர்கள். உங்களுக்கு சொர்க்கத்தில் கவ்ஸர் என்ற தடாகத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். அதற்கு நீங்கள் நன்றி செலுத்தி குர்பானி கொடுங்கள்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னான்.

திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய மார்க்க அறிஞர்கள் சிலர் குறிப்பிடும் போது, ‘நபிகளுக்கு வாரிசு ஏற்படுத்தலாகாது என்ற எண்ணத்தில் தான் அல்லாஹ் அவர்களுக்கு ஆண் வாரிசை கொடுத்தும் அதை எடுத்துக்கொண்டானோ? அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் நபித்துவம் இல்லவே இல்லை என்பதின் அடையாளமாக கூட இது இருக்கலாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

அறியாமை, மூட பழக்க வழக்கங்கள், தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி இறைவன் வகுத்த வழியில் நாம் அனைவரும் வாழ இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக திகழ்கிறது. 

Next Story