ஏற்றம் தரும் ஏமூர் பகவதி


ஏற்றம் தரும் ஏமூர் பகவதி
x
தினத்தந்தி 10 July 2018 6:56 AM GMT (Updated: 10 July 2018 6:56 AM GMT)

காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து வழிபடும் அம்மன் வீற்றிருக்கும் ஆலயம், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஏமூர் பகவதியம்மன் கோவிலாகும்.

குரூர் மற்றும் கைமுக நம்பூதிரி ஆகிய இருவர், துர்க்கையம்மன் வழிபாட்டுப் பகுதியாக இருந்த வடமலைக் காட்டுப்பகுதிக்குள் சென்று, அம்மனை நினைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் அம்மனை வழிபட்டுத் திரும்பும்போது, அவர் களுக்கு களைப்பு அதிகமாகத் தோன்றியதால், அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது, அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர், அவர்களுக்குச் சில இனிப்பான பழங்களை வழங்கினார். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட அவர்களுக்கு களைப்பு மறைந்து புத்துணர்ச்சி ஏற்பட்டது.

மறுநாள் அவர்கள் இருவரும் அம்மன் வழிபாட்டிற்குச் சென்ற போது, முதல் நாள் அவர்கள் ஓய்வெடுத்த மரத்தின் அடியில் யானை ஒன்றும், அதன் பின்புறம் தங்க நிறத்திலான அம்மன் உருவம் ஒன்றும் தோன்றி மறைந்தது. அதனைக் கண்ட இருவரும், முதல் நாள் வயதான தோற்றத்தில் வந்து தங்களுக்குப் பழங்களை வழங்கியது அம்மனே என்பதை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு, அம்மன் காட்சியளித்த இடத்தையும் வணங்குவது அவர்களின் வாடிக்கையாகிப் போனது.

இந்நிலையில் வயது முதிர்ந்த குரூருக்கு, காட்டிற்குள் சென்றுவருவது கடினமாக இருந்தது. அதை நினைத்து அவர் வருத்தமடைந்தார். இந்நிலையில், அவரது கனவில் தோன்றிய அம்மன், அருகிலுள்ள குளத்தில் அவருக்குக் காட்சியளிப்பதாகத் தெரிவித்தார். குரூரும் மகிழ்ச்சி யடைந்தார். மறுநாள் அங்கிருந்த குளத்திற்குச் சென்ற அவர் அம்மனைக் காண்பதற்காகக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தக் குளத்தின் நடுவில் இருந்து அம்மனின் கைகள் வெளிப்பட்டன. அதனைக் கண்ட ஆர்வத்தில், குளத்திற்குள் இறங்கிய குரூர் நீந்திச் சென்று அம்மனின் கைகளைப் பற்றிக் கொள்ள, அம்மனின் உருவம் முழுவதும் தெரியாமல் மறைந்து போனது. தெரிந்த கையும் கல்லாய் மாறிப் போனது. தனது செயலுக்காக வருத்தமடைந்த குரூர், அம்மனிடம் மன்னிப்பு கோரினார்.

பின்னர் குரூர், அப்போதைய பாலக்காடு அரசர் சேகரி வர்மா வலிய ராசாவிடம் சென்று, நடந்ததைத் தெரிவித்து அம்மனுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அரசரும் குரூர் வேண்டுகோளை ஏற்று, அங்கு அம்மனின் கைகளையே வழிபாட்டுக் குரியதாகக் கொண்டு கோவிலைக் கட்டுவித்தார் என்று ஆலய தல வரலாறு சொல்கிறது.

ஒரு துறவியின் வேண்டுகோளுக்காக, அங்கிருக்கும் குளத்தில் அவருக்குக் காட்சி தருவதாகச் சொன்ன அம்மன், அவ்வேளையில் அங்கு வேறு யாரும் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் விதித்தாள். மறுநாள் அவருக்குக் காட்சி தருவதற்காக அங்கிருந்த குளத்தில் அம்மன் எழுந்தருளிய போது, முதலில் அம்மனின் கைகள் மட்டும் நீரிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அம்மன் விதித்த கட்டுப்பாட்டை மீறி அங்கு பலரும் கூடியிருப்பதை அறிந்த அம்மன், முழுமையாகக் காட்சி தராமல் மறைந்து விட்டார் என்றும், அதன் பின்னர், அம்மனின் கைகளை மட்டும் வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டது என்று இத்தல வரலாற்றைச் சொல்வதுண்டு.

பாலக்காடு அரச குடும்பத்தினரின் குலக் கோவிலாக இருந்து வரும் இந்த ஆலயத்தை ‘கைப்பதி அம்பலம்’ என்றும் சொல்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மனைப் பக்தர்கள் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகா லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்துத் தங்களுக்குத் தேவையானதை வேண்டி வழிபாடு செய்கின்றனர்.

இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக் காலத்தில் மலையாள மரபு வழியிலான ஓட்டந்துள்ளல், சாக்கியர்கூத்து, கதகளி, கழச்ச சீவேலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதே போல் மீனம் (பங்குனி) மாதத்தில் வரும் அம்மன் நிறுவப்பட்ட நாளில் (பிரதிஷ்டா தினம்) லட்சார்ச்சனையும், கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி திருநாட்களில் சிறப்பு வழி பாடுகளும் செய்யப்படுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் ‘தாரிகா வதம்’ நிகழ்வு சிறப்பாகக் நடக்கிறது.

மேஷம் (சித்திரை) மாதத்தில் வரும் விசு நாள் மற்றும் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கேரளாவில் ராமாயண மாதம் என்று சொல்லப்படும் கரிகடகம் (ஆடி) மாதம் முழுவதிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழி படுவதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆலயத்திற்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். பாலக்காடு - மலம்புழா அல்லது பாலக்காடு - தோணி செல்லும் சாலையில் பயணித்துக் கல்லேக்குளங்கரா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கோவிலுக்குச் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. 

Next Story