கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவனய்யா சித்தர்


கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவனய்யா சித்தர்
x
தினத்தந்தி 10 July 2018 7:01 AM GMT (Updated: 10 July 2018 7:01 AM GMT)

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. பவுர்ணமி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி அடைந்துள்ளார். அடக்கமாகி பல வருடங்கள் கழித்து பூமியில் அவரைத் தோண்டியப் போது, அவரது உடல் எந்த சேதமும் இன்றி அப்படியே இருந்தது அதிசயத்திலும் அதிசயம் என்கிறார்கள். அவரின் வரலாறு.. நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத வரலாறு.

சங்கரன்கோவில் அருகில் உள்ள அரியூரைச் சேர்ந்தவர் சிவனய்யா. இவர் மிகப்பெரிய அந்தஸ்து கொண்டவர். மாவீரன் பூலித்தேவனுக்கு ராஜகுருவாக இருந்தவர். பூலித்தேவனுக்கு பல நேரங்களில் நல்லத் திட்டங்கள் வகுத்து கொடுத்து, அவரைப் போரில் வெல்ல வைத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் கேட்காமல் பூலித்தேவன் எங்கும் செல்லமாட்டார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.

அரியூரே மிகப்பெரிய ஆன்மிக கிராமம்தான். அரியூர் மலை மிகவும் பிரசித்திப் பெற்றது. பாம்பாட்டி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு அமர்ந்து தவம் இயற்றியுள்ளார்கள். சிவனய்யா சித்தரும் இங்கு அமர்ந்து தவமேற்றியுள்ளார். சிவனய்யா அனைத்து ஜீவ ராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பாராம். இவர் தனது பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும்போது, கண்ணை மூடி தியானத்தில் ஈடுபடுவார். திடீரென்று ‘நல்லவனே வா' என்றால், எங்கிருந்தாலும் நாகப்பாம்பு அவர் முன் வந்து படமெடுத்து ஆடி நிற்குமாம். அவர் கண்ணைத் திறந்து நாகத்தினைப் பார்த்து ‘நல்லவனே போ' என்று கூறினால் பாம்பு அங்கிருந்து அகன்று விடும் அளவுக்கு தவவலிமை பெற்றவராம்.

அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சிவனய்யா சித்தருக்கு நல்லபெயர். மக்களுக்கு எந்தத் தீங்கு என்றாலும் தனது தவவலிமையால் அதனைத் தீர்த்து வைப்பார்.

இவர் பேரும் புகழுடன் வாழ்ந்து வருவதை சகிக்க முடியாத மோகினி பெண்ணொருத்தி, இவர் புகழை அழித்து விட திட்டமிட்டாள். அதனை செயல்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.

சிவனய்யா சித்தர் நெல்கட்டும் செவலில் இருந்து சங்கரன்கோவிலுக்கு தினமும் நடந்து சென்றே, சிவபெருமானை வணங்கி வருவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் சித்தரை பழிவாங்க பயன்படுத்த நினைத்தாள் மோகினி.

ஒரு நாள், சித்தர் வரும் வழியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தக் குழந்தையை கிடத்தினாள். குழந்தை மோகினியால் உருவாக்கப்பட்ட தீயச் சக்தி. அதற்கு உயிர் கொடுத்தால், அந்த சக்தி மூலம் இந்த உலகத்தினையே தீயச் செயலில் ஈடுபடுத்தி விடும். அதே நேரம் சித்தர்தான் அந்த சக்தி உருவாக காரணம் என்ற கெட்டப்பெயரையும் உருவாக்கி விடலாம் என்று கணக்கு போட்டாள் மோகினி.

சித்தர் வந்த வழியில், சாதாரண பெண் போன்ற உருவம் கொண்டு, குழந்தையை காப்பாற்றித் தரும்படி வேண்டினாள் மோகினி. ஆனால் அனைத்தையும் தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட சித்தர், கையில் இருந்தக் கம்பை மோகினி மீது போட்டார். அந்தக் கம்பு ஒளிப்பிளம்பாக மாறி அவளை நோக்கிப் பாய்ந்தது. மோகினி தப்பித்தால் போதும் என அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். இதனால் சித்தரின் புகழ் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவத் தொடங்கியது.

பாறைப்பட்டி கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதை வழியாக சென்று அரியூர் மலை அடிவாரத்தை அடையலாம். அங்கு தரையோடு தரையாக ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் வட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அந்த வட்ட எழுத்துக்கள் எல்லாம் சிவனய்யா தம் கைப்பட எழுதினது என அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்தப் பகுதியில் நிறைய புதையல் இருப்பதாகவும், அதன் குறிப்பே, சிவனய்யா எழுதி வைத்த வட்ட எழுத்துகள் என்று சில கதைகளும் சொல்லப்படுகிறது.

சிவனய்யா சித்தர் எப்போது, எப்படி, எந்த ஆண்டு சமாதி அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது சமாதி இடத்தை யாரும் அறியமுடியவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஒருவரது கனவில், சித்தர் சமாதி அடைந்த இடம் தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தோண்டினர். அவரது உடல் தென்பட்டது.

அனைவருக்கும் ஆச்சரியம். சித்தரின் உடல் கெடாமல் அப் படியே இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அடங்கிய சித்தரின் உடல் கெடாமல் இருப்பதையும், அவரது தவ வலிமையையும் எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மூன்று நாள் அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பின்னர் 4 அடியில் சுவர் எழுப்பி அதன் மீது தளம் போட்டு மூடினார்கள். சமாதி கோவிலை அமைத்து 44 நாள் பூஜை செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. பவுர்ணமி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவரும் பக்தர்கள், சிவனய்யா சித்தர் சமாதியை 21 தடவை சுற்றி வந்து நல்ல பலன்களைப் பெறுகிறார்கள்.

சிவனய்யா சித்தர் புதையலைக் காப்பவர் என்பதால், இங்கு வந்து வணங்கினால் கடன் பிரச்சினை தீருகிறது. சித்தர் பீடத்தினை வலம் வருபவர்களுக்கு திருமணம் நடந்தேறுகிறது. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

சிவனய்யா சித்தரை வணங்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வர வேண்டும். சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும் செவல் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் பாறைப்பட்டி இருக்கிறது. இங்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி கிடையாது என்பதால், ஆட்டோவில் வந்து செல்வதே வசதியாக இருக்கும். 

பசுவை மானாக மாற்றிய சித்தர்

ஒரு முறை அரியூர் மலையில், அரண்மனை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வேடன் ஒருவன் மலையில் உள்ள காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அங்கு நின்ற மானை வேட்டையாட அம்பை எய்தான். அம்போ தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்து, அதன் உயிரைப் பறித்தது. அரண்மனை பசுவைக் கொன்றால், அவர்களுக்கு மிகப்பெரியத் தண்டனை உண்டு. எனவே பதறிப்போன வேடன், சிவனய்யா சித்தரிடம் ஓடி வந்தான்.

ஆனால் அவரைக் காணவில்லை. அவர்தான் சித்தராயிற்றே. அரண்மனைப் பணியில் இருந்தாலும், அவரது போக்கில்தான் சென்று கொண்டிருப்பார். அப்படி எங்கோ சென்றிருந்த நேரத்தில்தான் வேடன் வந்து நின்றான். அங்கு.. இங்கு.. என்று அலைந்து திரிந்து, இறுதியாக குளத்து கரையில் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த சித்தரைக் கண்டான்.

அவர் காலில் விழுந்து, ‘சுவாமி! நான் மானை வேட்டையாட அம்பு எய்தேன். அது தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்துவிட்டது. அரண்மனை தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.

‘பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன சித்தர், அங்கிருந்து அசையவில்லை.

வேடனுக்கோ பயம் அதிகரித்தது. ‘காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், அரண்மனைக்கு வராமல், இப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரே’ என்று நினைத்தான்.

ஆனால் அவர் தன் தவத்தின் மூலமாக வேடனுக்கு உதவிக்கொண்டிருந்தார் என்பது வேடனுக்கு புலப்படவில்லை. ஆம்.. அரண்மனை பசு அம்படிப்பட்டு இறந்து விட்ட செய்தி கேட்டு, அரண்மனை காவலர்கள் மலை பகுதிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உண்மையிலேயே மான் தான் இறந்து கிடந்தது. தன் தவ வலிமையால், பசுவை மானாக மாற்றி வேடனைக் காப்பாற்றியிருந்தார் சிவனய்யா சித்தர். வேடன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி அங்கிருந்து புறப்பட்டான். 

Next Story