நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்


நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:11 PM GMT (Updated: 16 Aug 2018 11:11 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

மதுரை,

விழாவில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை திருவிளையாடலுக்கு, அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் லீலை பற்றிய விவரம் வருமாறு:-
மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் நாரை மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்தில் முனிவர்கள் தினமும் வந்து நீராடினர். அப்போது அவர்கள் மீது குளத்தில் இருந்த மீன்கள் புரண்டு விளையாடின. முனிவர்கள் மீது புரண்டு விளையாடிய மீன்களை உண்ணக்கூடாது எனக்கருதி அந்த மீன்களை நாரை உண்ணாமல் இருந்தது. அப்போது முனிவர்கள் பேசியதை அறிந்த நாரை மதுரையை பற்றி தெரிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது. அங்கு குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்திப் பேறு பெற்றது.

அப்போது அந்த நாரை இறைவனிடம், “பொற்றா மரைக்குளத்தில் இனிமேல் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்வாழ் உயிர்கள் இருந்தால் அவற்றை பறவைகள் உண்ணக்கூடும். இதனால் அந்த பறவைகளுக்கு பாவம் வந்துசேரும். எனவே பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக் கூடாது” என்று வரம் வாங்கியதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால் இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் இல்லை.

ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவு சாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பூக்கடை தெரு, கீழமாரட் வீதி, அம்மன் சன்னதி வழியாக ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Next Story