தங்கம் தழைக்கச் செய்யும் அம்பிகை
சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்கள், தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. நாகை மாவட்ட கிராமங்களில் இன்றும் சோழர்களின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கும் ஆலயங்கள் ஏராளம்.
திருசொர்ணபுரம் என்ற கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம் உள்ளது.
‘சொர்ணம்’ என்றால் ‘தங்கம்’ என்று பொருள். இந்தப் பெயர் இந்த ஊருக்கு வந்ததற்கு காரணம் உண்டு. இத்தலம் வந்த நால்வரில் ஒருவரான சுந்தரர், பொன் வேண்டி இறைவனை நோக்கி பாடினார். அவரது பாடலைக் கேட்ட இறைவன் சற்றே ஒளிந்து கொண்டார். ஆனால் இத்தல இறைவி சுந்தரருக்கு பொன்னை அள்ளித் தந்தாள்.
சொர்ணத்தை அள்ளி தந்த இடம் என்பதால், இந்த ஊர் ‘திருசொர்ணபுரம்’ எனவும், இறைவி ‘சொர்ணாம்பிகை’ எனவும், இறைவன் ‘சொர்ணபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படலானார்கள்.
சுந்தரரின் பாடல் கேட்டு இறைவன் சற்றே ஒளிந்ததால், இன்றும் கருவறை இறைவன் சற்றே இடதுபுறம் ஒதுங்கி அருள்பாலிக்கிறார்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று சுந்தரருக்கு, நாணயங்களால் கனகாபிஷேகம் நடைபெறும். அந்த நாணயங்களை ஆண்டு முழுவதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். தவிர, அட்சயத் திருதியை அன்று இறைவன் - இறைவிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
இந்த ஊர் பெண்கள் புதிதாக நகைகள் வாங்கினால், அதை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு, பின்னரே எடுத்துச் சென்று அணிகின்றனர். இதனால் அன்னை சொர்ணாம்பிகை, தங்கள் வீட்டில் மேலும் தங்கம் தழைக்கச் செய்வாள் என்பது அவர்களது நம்பிக்கை.
இந்த ஊருக்கு ‘காத்திருப்பு’ என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்தப் பெயர் வரக் காரணமான புராணக் கதையும் ஒன்று உண்டு.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் காத்யாயன என்ற முனிவர், மனைவியோடு இங்கு வசித்து வந்தார். அவருக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகள் இறைவனை நோக்கி தவமிருந்தார். இறைவன் மனம் இரங்கினார். பார்வதி தேவியே அவருக்கு மகளாக அவதரித்தார். தவமாய் தவமிருந்து பெற்ற மகளை, கண் இமை காப்பது போல் காத்து, வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு ‘காத்யாயினி’ என்று பெயரிட்டார்.
காத்யாயினிக்கு திருமண வயது வந்தது. மணமகனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் தேவி. இறைவன், அம்பிகையை திருவீழிமிழலைக்கு வரச்சொல்லி அங்கேயே அவளை மணந்து கொண்டார். பின்னர் இறைவனுடன் இறைவி பிறந்தகமான இத்தலம் வந்தபோது, தங்களுடன் மழலை குறும்பர் என்ற அடியார் கொடுத்த விளாங்கனியையும் எடுத்து வந்தாள். அந்தக் கனியே இங்கு மரமாகி, இன்றும் ஆலய தலவிருட்சமாக தழைத்தோங்கி நிற்கிறது. இங்கு காத்யாயினி இறைவனுக்காக காத்திருந்ததால் இத்தலம் ‘காத்திருப்பு’ என அழைக்கப்படலாயிற்று. இன்றும் வழக்கத்தில் இந்தப் பெயரே நிலவுகிறது.
ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம், பலிபீடம், கொடிமரம் உள்ளது. கொடிமரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். நந்தியும், பலி பீடமும் நடுவே இருக்க, உள்ளே கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இடதுபுறம் அன்னை சொர்ணாம்பிகை தனிக் கோவிலில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னை இறைவனுக்கு இடது புறம் அமர்ந்து கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், உத்ராட்ச மாலையையும் சுமந்தும், கீழ் இரு கரங்கள் அபய ஊரு ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அம்பிகை நின்ற கோலத்தில் இன் முகம் மலர அருள்பாலிக்கிறாள். அன்னை தன் கீழ் இரண்டு கரங்களில் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து, சொர்ண லட்சுமியாக காட்சி தருகிறாள்.
கவுதம முனிவர் ஒரு முறை சந்திரனுக்கு சாபமிட்டார். அந்த சாபம் நீங்க, சந்திரன் இங்கு வந்து அன்னையிடம் முறையிட்டான். அன்னை சந்திரனின் சாபத்தை விலக்கி அருள் புரிந்தாள். இதனால், சந்திரனின் பிறை வடிவம் அன்னையின் சிரசில் காணப்படுகிறது. மேலும், அன்னைக்கு இங்கு கிரீடம் இல்லை. மாறாக, தலைமுடியே கிரிடமாக அமைந்துள்ளது.
ஆலயத்தின் தல விருட்சம், மூன்று. வன்னி, வேம்பு, மாதுளை என இந்த மூன்று விருட்சங்களும் ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளன. ஆலய ஈசானிய பாகத்தில் உள்ள சொர்ண புஷ்கரணியே ஆலய தீர்த்தமாகும். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கிறார்கள். இந்த துர்க்கைக்கு எட்டு கைகள். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், வீணா தட்சிணாமூர்த்தி, வாசுகி, சப்த மாதர்கள், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் பைரவர், சண்டிகேஸ்வரர், கிழக்கில் சனீஸ்வரன், சூரியன், காத்யாயி லிங்கம் ஆகியவை உள்ளன.
இத்தலத்தில் வன்னி, வேம்பு ஆகிய இரண்டு தல விருட்சங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னி வளர்ந்துள்ளன. பவுர்ணமி அன்று 27 விளக்கு ஏற்றி, இத்தல விருட்சங்களை வலம்வர திருமண தடை நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் திருமணம் விரைந்து நடந்தேற இறைவன் சன்னிதியில் சுயம்வர கலா பார்வதி யாகம் நடத்தினால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
வைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் கொடியேற்றத்துடன் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவம் விசேஷமானது. கார்த்திகை சோம வாரங்களில் இறைவன் இறைவிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை, யாகதோஷம் போன்ற நாட்களில் ஆலயம் பக்தர்களால் நிரம்பி நிற்கும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகை மாவட்டம் சீர்காழி- காரைக்கால் பேருந்து சாலையில், சீர்காழியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது காத்திருப்பு கிராமம்.
Related Tags :
Next Story