மலைக்கோவிலில் திசைமாறிய தெய்வங்கள்
மலைமீதுள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் புதுக்கோட்டை அருகே உள்ளது மலையக்கோவில்.
‘மலையில் கோவில்’ என்ற பெயரே தற்போது ‘மலையக்கோவில்’ என மருவி வழங்கப்படுகிறது. இவ்வூர் முன்பு ‘ஒருக்கொம்பு மலை’, ‘குறிஞ்சி கொத்த நாவல் குறிச்சி’, ‘திருநாவலங்கிரி’, ‘திருவோதிக்கால்’ என்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
மலையின் மீது ஒரே சுற்று மதிலுக்குள் முருகப்பெருமானுக்கும், முருகனது இணையடி பற்றி நின்ற இடும்பனுக்கும் எழுப்பப்பட்ட கோவில்கள், ஒரு குறுக்குச்சுவரால் தனித்தனிக் கோவில்களாகக் காட்சியளிக்கின்றன. மலையின் மீதுள்ள கோவில் ‘மேற்கோவில்’ என்றும், மலையின் கீழுள்ள கோவில் ‘கீழ்க்கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கோவிலுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோவில்களும், தெற்குக் குடவரை கோவிலுக்கு எதிரில் ஆடவல்லானான சிவபெருமானின் தேவியாகிய உமையவளுக்கு கற்கோவிலும் அமைந்திருக்கிறது.
மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு குடவரைக் கோவில்களில் கிழக்கு குடவரைக் கோவில் ஒரே கருவறையையும், கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத்தையும் கொண்டதாகும். இக்கோவிலுள்ள சிவலிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. தெற்கு குடவரைக் கோவில் கருவறையையும், கருவறைக்கு முன்பாக முன் மண்டபத்தையும், அதை ஒட்டி மகா மண்டபத்தையும் கொண்டிருக்கிறது.
கிழக்கு குடவரை ஆலயத்தில் உள்ள லிங்கத்திற்கு முன்பாக கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகர் உருவம் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விநாயகர் பிள்ளையார்பட்டி விநாயகரின் வடிமைப்புக்கு இணையானதாக சொல்லப்படுகிறது. கிழக்குக் குடவரைக்கோவிலின் வாயிற்படிக்கு தென்புறத்தில் பல்லவ கிரந்த எழுத்தமையில் ஒரு கல்வெட்டும் வாயிற்படிக்கு வடக்கில் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது. தெற்குக் கல்வெட்டு பரிவாதினி என்ற வீணையைப்பற்றிய சிறு குறிப்பை காட்டுகிறது. இது போன்று கல்வெட்டு குறிப்பு குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குடவரையின் அமைப்பு, லிங்கத்தின் வடிவமைப்பு, குடவரை மண்டபத்தூணின் அமைவு, பல்லவ கிரந்த எழுத்தமையில் கல்வெட்டு முதலியவைகளை பார்க்கும்போது இக்குடவரை கி.பி. 7 அல்லது 8-ம் நூற்றாண்டிற்குரியனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்குடவரையை பற்றி ஆராய்ச்சியாளர்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இவ்விரு குடவரையிலுள்ள குலசேகரபாண்டியன், இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில் இருந்து மலையக்கோவில் கானாட்டிற்கும் கோனாட்டிற்கும் பொது எல்லையில் அமைந்திருந்தது என்பதை அறியமுடிகிறது. இக்காரணத்தால் தான், கிழக்கு குடவரை கானாட்டை நோக்கியவாறு கிழக்கு நோக்கியும், தெற்குக் குடவரை கோனாட்டை நோக்கியவாறு, மேற்கு நோக்கியும், லிங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசையில் இருக்கும் சிவனை வேண்டினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அதைவிட ஒவ்வொரு பிரதோஷம் நாளில் அந்த சிவனையும் அதற்கு எதிரே உள்ள வலம்புரி விநாயகரையும் வேண்டினால், தடைபடும் காரியங்கள் சுமுகமாக முடியும் என்பது நம்பிக்கை. இந்த இறைவன் திருவேங்கை கனலீசுபவர், மலையலிங்கம் என்று அழைக்கப்பட்டு, இன்றைக்கு திருவருட் காளீஸ்வரர் எனப்படுகிறார். அம்மனுக்குரிய கற்கோவில் வடக்கை நோக்கிய நிலையில் பிற்காலச்சோழர்களது கலைப்பாணியில் அமைந்துள்ளது. இவ்வம்மை தம்பிராட்டி, அறம்வளர்த்தநாயகி என்று பெயர் கொண்டு விளங்குகிறாள்.
மலையில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கிழக்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்புரிகிறார். ஜடாமுனீஸ்வரர் தெற்கே பார்த்து இருக்கிறார். இப்படி ஒவ்வொரு தெய்வங்களும் திசைமாறிய தெய்வங்களாக இக்கோவிலில் இருப்பது வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது. சிவன், ஐயனார் போன்ற சைவக்கோவில்களுக்கு நிலத்தை தானமாக அளிக்கும்போது அந்நிலம் கோவில் நிலம் என்பதற்கு அடையாளமாக சூலக்கல் நடுவது மரபாகும்.
மலையக்கோவிலுக்கு அருகாமையில் இளங்கண்மாய் என்ற ஏந்தலின் உள்வாசல் மேட்டில், ‘முக்குடை, குத்துவிளக்கு, பூரணக்கும்பம்’ ஆகிய மங்கலச் சின்னங்கள் வரைகோட்டு உருவங்களாக பொறிக்கப்பட்டு, தரையில் ஊன்றப்பட்ட இரண்டு பலகைக் கற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையக்கோவிலில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. சமணப்பள்ளி இருந்ததற்கு ஆதாமலையக்கோவிலில் சடாமுனி, செம்முனி என்ற ஒரு தெய்வம் மக்களால் வணங்கப்படுவது ஆதாரமாக உள்ளது.
அமைவிடம்
புதுக்கோட்டையில் இருந்து மலையக்கோவிலுக்கு நேரடியாக நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறி மலையக்கோவில் விலக்கில் இறங்கி, 1 கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஆலயத்தை அடையலாம்.
Related Tags :
Next Story