“ஆற்றலைத் தருபவன் அல்லாஹ்...”


“ஆற்றலைத் தருபவன் அல்லாஹ்...”
x
தினத்தந்தி 16 Oct 2018 10:47 AM GMT (Updated: 16 Oct 2018 10:47 AM GMT)

ஆற்றல்கள் அனைத்தையும் தருபவன் அல்லாஹ் ஒருவன் தான்.

எல்லாம் வல்ல அல்லாஹ், ஒவ்வொரு நபிகளுக்கும் ஒவ்வொரு விசேஷமான தன்மையைக் கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கின்றான். அந்த வரிசையில் சுலைமான் நபிகளுக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்தான். அதன் மூலம், நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அதோடு பறவைகளின் மொழியை அறியும் ஆற்றலையும் அவருக்கு அல்லாஹ் கொடுத்திருந்தான். இது தவிர ஜின்களை அடக்கியாளும் சக்தியும் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆற்றல்கள் அனைத்தையும் தருபவன் அல்லாஹ் ஒருவன் தான்.

ஒரு முறை யுத்த களத்திற்கு தனது படைகளுடன் சுலைமான் நபி புறப்பட்டார். அந்தப்படை, எறும்பு புற்றுகள் நிறைந்திருக்கும் ஓர் ஓடையை நெருங்கிய போது, அங்கிருந்த ஒரு எறும்பு, மற்ற எறும்புகளை நோக்கி இவ்வாறு கூறியதாக திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:

“எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. (திருக்குர்ஆன் 27:18)

எறும்பின் பரிபாஷை அறிந்திருந்த சுலைமான் நபிகள் இதைக்கேட்டு புன்னகைப் பூத்தவர் களாக தன் ராணுவத்தினரை நோக்கி, “நீங்கள் அப்படியே நிற்பீர்களாக, அருகே எறும்பு புற்று ஒன்று உள்ளது. அதனை நீங்கள் மிதித்து சேதப்படுத்தி விடாதீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்ல இத்தனை அரிய சக்தி வாய்ந்த அறிவு ஞானத்தை வழங்கிய அல்லாஹ்விற்கு உடனே தன் நன்றியைத் தெரிவித்து பிரார்த்தனை செய்தார். அந்த சம்பவம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“என் இறைவனே! நீ என் மீதும் என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக. உனக்கு திருப்தியளிக்க கூடிய நற்செயல்களையும் நான் செய்யக்கூடிய பாக்கியத்தை எனக்கு அருள் புரிந்து உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக” என்று பிரார்த்தனை செய்தார். (திருக்குர்ஆன் 27:19)

ஒவ்வொரு நபிகளும் கேட்ட சிறந்த துஆக்களை திருமறையில் பதிவு செய்த அல்லாஹ். சுலைமான் நபிகளின் சிறந்த துஆவாக இதனைக் குறிப்பிடுகின்றான்.

திருக்குர்ஆனின் 27-வது அத்தியாயமான ‘சூரத்துல் நம்லி’ (எறும்புகள்) என்பதில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கிய படிப்பினையை இங்கே காண்போம்.

பறவைகள் அனைத்தும் சுலைமான் நபியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு முறையும் அதனை கணக்கெடுப்பது அவரது வழக்கமாய் இருந்தது. அப்படி ஒரு முறை பரிசோதித்த போது “ஹூத் ஹூத்” என்ற பறவையை காணவில்லை. அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ அது வந்து சேர்ந்தது.

“ஏன் வருவதற்கு இத்தனை தாமதம்?” என்று வினவிய போது, அது சொன்னது: “ஸபா நாட்டைப் பற்றி நீங்கள் அறியாததை நான் அறிந்து, உண்மைச் செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தான அரசு கட்டிலும் அவளுக்கு இருக்கிறது. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன்” என்று கூறியது. (திருக்குர்ஆன் 27:22-24)

“ஹூத் ஹூத் பறவையே நீ உண்மை சொல்வதாய் இருந்தால் நிச்சயமாக நாம் அவளுக்கு ஏக இறைவனின் சக்தியை எடுத்துச் சொல்ல வேண்டும். சூரியனை இறைவனுக்கு இணை வைக்கும் பாவச்செயலிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்” என்று சுலைமான் நபிகள் கூறினார்.

பின்னர் அந்த அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘அல்லாஹ் தான் வணக்கத்திற்குரிய இறைவன். அவனுக்கு இணையாக உலகில் எந்த பொருளுக்கும் எந்த வித சக்தியும் இல்லை. எனவே அல்லாஹ்வை ஏக இறை வனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டு இருந்தார்.

பின்னர் அதை ஹூத் ஹூத் பறவையிடம் கொடுத்து, ‘பல்கீஸ் அரசியின் முன்பு அந்த கடிதத்தை எறிந்துவிட்டு, அங்கு என்ன நடக்கிறது என்று மறைந்திருந்து பார்த்து தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

பறவையும் அவ்வாறே செய்தது. கடிதத்தை படித்த அரசி தன் மந்திரிகளிடம் இவ்வாறு கூறினார்:

“தலைவர்களே! மிக்க கண்ணியமான கடிதம் என்முன் எறியப்பட்டுள்ளது. மெய்யாகவே அது சுலைமானிடம் இருந்து வந்துள்ளது. நிச்சயமாக அதன் ஆரம்பத்தில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்றெழுதியுள்ளது” என்றார்.

“அக்கடிதத்தில் சுலைமான் சூரியனை வணங்குவதை தவிர்த்து அல்லாஹ்வை வணங்க கட்டளையிட்டுள்ளார். இதற்கு உங்கள் அபிப்பிராயம், ஆலோசனை என்ன?” என்று வினவினார்.

அதற்கு அவர்கள் “அரசியே! நாம் மிக பலம் பொருந்திய ராணுவம் கொண்டுள்ளோம், நீங்கள் ஆணையிட்டால் நாம் போர் முரசு கொட்டலாம்” என்றார்கள்.

ஆனால் அரசியோ, “இங்கே நாம் பலம்-பலவீனம் பற்றி சிந்திக்க தேவையில்லை. அதில் சொல்லப்பட்டுள்ள சத்தியம், அசத்தியம் பற்றி மட்டுமே நாம் முடிவு எடுக்க வேண்டும். போர் என்று வந்துவிட்டால் இருசாரருக்கும் உயிர்பலி என்பதும், இழப்பும் தவிர்க்க முடியாததாகி விடும். எனவே அவரிடம் சமாதானமாகவே போய் விடலாம். அவரை சென்று சந்தித்து அவர் சொல்வதில் உள்ள நியாய, அநியாயங்களை சீர்தூக்கி முடிவு செய்யலாம்” என்று சொன்னார்.

அரசியார் சமாதானம் பேச வருகிறார், என்றதுமே சுலைமான் நபிகள், தன் அரசவையில் இருந்த ஜின்களை நோக்கி, ‘அரசி என்னிடம் வந்து சேருவதற்கு முன்பாகவே அவருடைய அரியணையை என்னிடம் யாராவது கொண்டு வந்து சேர்க்க முடியுமா?’ என்று வினவினார்.

“அதற்கு ஜின்கள் கூட்டத்தைச்சேர்ந்த இப்ரீத் என்னும் ஒரு வீரன், ‘நீர் இந்த சபையை முடித்துக் கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன்’ என்றார்.

“எனினும் அவர்களில் வேத ஞானம் பெற்ற ஒருவர் இருந்தார். அவர் சுலைமான் நபியை நோக்கி, ‘உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்குள் அதை நாம் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன்’ என்று கூறினார். அவ்வாறே கொண்டு வந்தும் சேர்த்தார்”.

பல்கீஸ் அரசியாரும் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு முன்பு அந்த சிம்மாசனம் போடப்பட்டது. அது தன்னுடைய அரியணை தான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. தன் நாடு அத்தனை தூரம் இருக்கும் போது கண் சிமிட்டும் நேரத்தில் எப்படி அதை கொண்டு வருவது சாத்தியம்? என்று ஆச்சரியப்பட்டார். சுலைமான் நபிகளுக்கு அல்லாஹ் அருளிய ஆற்றல் மூலமே அது சாத்தியமானது என்பதையும் புரிந்து கொண்டார்.

பின்னர், சுலைமான் நபிகள் எடுத்துச் சொன்ன அல்லாஹ்வின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்டு, அவரும் அவரைச்சேர்ந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். சுலைமான் நபிகள், பல்கீஸ் அரசியை மணமுடித்து நீண்ட காலம் வாழ்ந்தார்.

சுலைமான் நபிகள் தன் வயது முதிர்ந்த நிலையில் பாலஸ்தீனத்தில் இறையில்லம் ஒன்றை கட்ட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அவரது அடிமைகளாய் இருந்த ஜின்களைக் கொண்டு “மஸ்ஜிதே அக்ஸா” என்று அழைக்கப்பட்டு வருகின்ற அந்த பள்ளிவாசலை கட்டினார்கள். அந்த பள்ளிவாசலின் மிக்ராபில் (நடுப்பகுதி) நின்றவாரே, கைத்தடியை ஊன்றி அதில் சாய்ந்தவர்களாக ஜின்களை வேலை ஏவி வந்தார்கள். அந்த நிலையிலேயே அவருக்கு மரணமும் ஏற்பட்டது. ஆனால் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படும் வரையில் சுலைமான் நபிகள் தடியில் சாய்ந்த சடலமாக நின்று கொண்டிருந்தார்கள்.

“சுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்த போது, அவர் இறந்து விட்டார் என்பதை அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர மற்ற எவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் சாய்ந்திருந்த தடியை கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே அதன் மீது சாய்ந்திருந்த சுலைமான் கீழே விழுந்து விட்டார். அவர் கீழே விழவே வேலை செய்து கொண்டிருந்த அந்த ஜின்களுக்கு, தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் இரவு பகலாக உழைக்க வேண்டிய இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாக தெரிந்தது” (திருக்குர்ஆன் 34:14)

இந்த வசனத்தின் மூலம் நாம் அறிவது, சுலைமான் நபி மரணித்த பின்னும் மஸ்ஜித் அக்ஸாவை கட்டி முடித்தார்கள். இன்று வரை அது நிலை பெற்று நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் ஜின்கள், சைத்தான்களுக்கு மறைவான விஷயம் பற்றி எந்த ஞானமும் கிடையாது என்பதும் இங்கே நிரூபணம் ஆகிறது.

எனவே எதிர்காலம் பற்றி குறி சொல்லுதல், ஜோதிடம் பார்த்தல் போன்றவற்றின் மூலம் எந்த உண்மைத் தன்மையையும் அறிய முடியாது. அல்லாஹ் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும். அதை தடுப்பதற்கு எந்த சக்தியும் கிடையாது. விதியை மாற்றுவதற்கும் யாராலும் முடியாது என்பதே யதார்த்தம். இதை உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்விடம் சரணடைவோம்.

Next Story