கோட்டுக்கல் குடவரைக் கோவில்


கோட்டுக்கல் குடவரைக் கோவில்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:30 AM GMT (Updated: 24 Oct 2018 10:30 AM GMT)

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்காரா வட்டம், சடையமங்கலம் வட்டாரத்தில் இருக்கும் இட்டிவா என்னும் கிராமத்தின் கோட்டுக்கல் பகுதியில் சிவபெருமான், கணபதி மற்றும் அனுமன் சன்னிதிகளைக் கொண்டிருக்கும் குடவரைக் கோயில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

இந்தக் குடவரைக் கோவிலுக்கென்று தனிப்பட்ட தல வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இக்கோவில், கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில், குறிப்பாக, பாண்டிய நாட்டு மன்னன் ஜடில பராந்தக நெடுஞ் சடையன் என்கிற முதலாம் வரகுணன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குச் சான்றாக, இப்பகுதியில் இருக்கும் பெரிய ஊருக்குச் சடையமங்கலம் என்று பெயர் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கோவில் அமைப்பு

வயலின் நடுவே இயற்கையாய் அமைந்துள்ள குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைக் கோவில் தொலைவிலிருந்து பார்க்கும் போது, ஒரு யானை படுத்திருப்பது போன்று சிறிய குன்றாகத் தோற்றமளிக்கிறது.

இந்தச் சிறிய குன்றில், கிழக்கு நோக்கியபடி இரண்டு குடவரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இருக்கும் குடவரையில் சதுர வடிவிலான கருவறையும், செவ்வக வடிவத்தில் முன்மண்டபமும் உள்ளது. குட வரையின் முகப்பில் இரண்டு பெரிய தூண்கள், உத்திரம் அமைக்கப்பட்டு மேற்பகுதியைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கருவறையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், அதன் முன்பகுதியில் நந்தியும் இருக்கிறது.

இரண்டாவது குடவரை நீள்வட்டமான கருவறையைக் கொண்டிருக்கிறது. இங்கு முன்மண்டபம் இல்லை. இக்கருவறையில் அனுமன் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த இரு கருவறைகளுக்கிடையிலான பாறையில் செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட இடத்தினுள் கணபதி அமர்ந்த நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிணற்றில் இருக்கும் நீர் இதுவரை வற்றியதே இல்லை என்கின்றனர்.

கல்லில் செதுக்கிய கோவில் என்பதை, மலையாளத்தில் ‘கொட்டிய கல்லுக் கோவில்’ என்று அழைத்து, பின்னர் ‘கொட்டுக்கல்’ என்றும் அழைத்தனர். நாளடைவில் அதுவே ‘கோட்டுக்கல் கோவில்’ என்றும், ‘கோட்டுக்கல் குடவரைக் கோவில்’ என்றும் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கான பிரதான ஆலயமாக இருக்கிறது. இங்கு சிவபெருமான் தவிர, கணபதி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த ஆலயத்தை மலையாளத்தில் ‘திரிகோவில்' என்றும் அழைக்கின்றனர்.

இக்கோவிலில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் சிவராத்திரி நாளில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சடையமங்கலம் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலை விலும், அஞ்சல் எனும் ஊரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல சடையமங்கலம், அஞ்சல் ஆகிய ஊர்களிலிருந்து உள்ளூர் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கொல்லம், திருவனந்தபுரம் ஊர் களிலிருந்து சடையமங்கலம் வழியாகப் பல நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

- தேனி மு.சுப்பிரமணி

Next Story