தோஷம் போக்கும் கபாலீஸ்வரர் - 24.10.2018 அன்னாபிஷேகம்


தோஷம் போக்கும் கபாலீஸ்வரர் - 24.10.2018 அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:14 AM GMT (Updated: 24 Oct 2018 11:14 AM GMT)

உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமாக உணவு தேவை. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை.

அதாவது, இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் உண்ணுவதற்கு உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள் என்கிறது.

புராணங்கள் அனைத்திலும், தானங்களில் மிக உயர்ந்த தானமாக அன்னதானமே சொல்லப்பட்டு இருக்கிறது. ஒருவரது சகல தோஷங்களையும், முன் ஜென்ம வினை களையும் அடியோடு நீக்கவல்லது, ஒருவர் உள்ளன்போடு செய்யும் அன்னதானம் மட்டுமே. நாயன்மார்களில் பலரும், அடியவர்களுக்கு அன்னதானம் செய்வித்தே சிவபெரு மானின் அருளாசியைப் பெற்றுள்ளனர்.

மயிலாப்பூர் பூம்பாவை திருமுறைப் பதிகத்தில் ‘கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் அன்னதானம் காணாமல் சென்று விட்டாயே பூம்பாவை’ என்று கூறி இறந்து சாம்பலாகிப் போன பூம்பாவையை உயிருடன் எழுப்பி தருவார், திருஞான சம்பந்தர். இதன் மூலம் சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே மயிலாப்பூர் திருத்தலத்தில் அன்ன தானம் செய்வித்தல் என்பது சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளது என்பதனையும் அறியலாம். எனவே கபாலீஸ்வரர் திருக்கோவிலில் அடியவர்களுக்கு அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு என்கிறார்கள்.

எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள். இத்தலத்தில் கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்து கபாலீஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைந்துள்ளது.

வீட்டில் சமைக்கும் பொழுது, தினமும் சிறு பிடி அரிசியை தனி பாத்திரத்தில் சேமித்து வரவேண்டும். பின்பு சேமித்த அந்த அரிசியை சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்பொழுது அங்குள்ள ‘பிடி அரிசி உண்டியலில்’ சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுவதால், பிடி அரிசி உண்டியலில் கொட்டிய அரிசி அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடுமையான கர்மவினைகளும், தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.

அன்னதானம் செய்வதற்கு சிறப்புப்பெற்ற இத்தலத்தில், ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் அன்னாபிசேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் மூலவருக்கு செய்யப்படும் அன்னாபிசேகத்தை தரிசித்து, கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து கபாலீஸ்வரர்- கற்பகாம்பாளை வழிபடுவதால் வறுமைநிலை, தரித்திரம், பசிப்பிணி அகலும்.

கபாலீஸ்வரம் வர இயலாதவர்கள் இத்தல சம்பந்தர் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து, வீட்டினில் தினமும் சமைக்கும்போது ஒருகைப்பிடி அரிசியினை தனியாக எடுத்துவைத்து தங்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்திட அளிப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும். தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தை வலம் வரலாம் வாருங்கள்.

ஒருமுறை கயிலாய மலையில் பார்வதி தேவிக்கு பஞ்சாட்சர மந்திரப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆனால் பார்வதி அதனைக் கவனிக்காமல் அருகில் இருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் அடைந்தாள். தன் தவறுக்கு வருந்திய பார்வதி தேவி, ஈசனை வேண்டி சாப விமோசனம் கூறும்படி கேட்டாள்.

ஈசன் கூறியபடி, மயில் வடிவிலேயே பூலோகத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் சிவபூஜை செய்துவந்தார். புன்னை மரத்தின் அடியில் ஈசனை பூஜித்து, ஈசனுடன் மீண்டும் ஒன்றானாள். கபாலீஸ்வரர் கோவில் தல மரமான புன்னைமரத்தின் அடியில், மயில் வடிவில் அன்னை பார்வதி பூஜிக்கும் சிவலிங்கம் உள்ளது. உமையவள் ஈசனை மயில் வடிவில் பூஜித்ததால், இத்தலம் ‘மயிலாபுரி, மயிலை, மயிலார்ப்பு’ என்றழைக்கப்பட்டு, தற்போது ‘மயிலாப்பூர்’ என்று வழங்கப்படுகிறது.

சிவபெருமானைப்போலவே, தொடக்க காலத்தில் ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார் பிரம்மன். தனக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் உள்ளதால், தானும் ஈசனுக்கு நிகரே என்ற எண்ணம் பிரம்மனுக்குத் தோன்றியது. பிரம்மனின் கர்வத்தை ஒடுக்க நினைத்த ஈசன், பைரவரை தோற்றுவித்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அப்படி தலையை இழந்து படைக்கும் தொழிலையும் விட்ட பிரம்ம தேவன், ரிஷிகளின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினான். பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாக திருக்காட்சி கொடுத்த ஈசன், பிரம்மனின் பிழையைப் பொறுத்து ஆக்கல் தொழிலையும் மீண்டும் அவருக்கு வழங்கினார். ‘கபாலி’ என்றால் ஈசனின் பைரவ வடிவமே. பைரவரை வழிபடுபவர்களுக்கு அக்காலத்தில் ‘கபாலிகர்கள்’ என்றே பெயர். இத்தல ஈசன், பைரவ சொரூபமே. கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட, அனைத்து செல்வங்களும் நம்மை வந்தடையும்.

இத்தல கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் முதலிய பதினெண் கணங்களும் வழிபடுகின்றனவாம். இதனை சம்பந்தர் தனது இத்தல பூம்பாவை திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.



இத்தலம் பைரவர் உபாசகர்கள் வழிபட வேண்டிய முதன்மை திருத்தலம் ஆகும். கபாலீஸ்வரர் கருவறை முன் மண்டபத்தில் ஈசனின் வலப்புறம் லிங்க சக்தி அருள்கிறாள். ஆலய வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் வள்ளி- தெய் வானையுடனான முருகப்பெருமான், சிங்காரவேலர் எனும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் நேர்எதிரில் அருணகிரிநாதர் சன்னிதி உள்ளது. கபாலீஸ்வரர் ஆலயக் கொடிமரத்தின் அருகில் தனிச்சன்னிதியில் திருஞானசம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளி உள்ளனர். சம்பந்தர் கையில் பொற்றாளத்துடனும், அவரை வணங்கிய நிலையில் பூம்பாவையும் இருக்கிறார்கள்.

இத்தல அன்னையான கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்கலாம். தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் மயிலை கற்பகாம்பாளை, தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்க பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 8 வாரங்கள் வழிபட்டு, கருவறை தீபத்தில் சந்தனாதி தைல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வழிபட்டு வர வீடு வாங்கும் யோகம் கிட்டும் என்கிறார்கள்.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Next Story