வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது


வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:51 PM GMT (Updated: 8 Nov 2018 10:51 PM GMT)

திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் பால், தயிர், நெய், பன்னீர், கரும்பு சாறு, இளநீர் உள்பட 16 வகையான திரவியங்களால் கல்யாணசுப்பிரமணியருக்கு அபிஷேககபூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாணசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். கோவில் குருக்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினார்கள். இவர்கள் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருப்பார்கள். வருகிற 13-ந்தேதி கல்யாணசுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்தவுடன் விதத்தை முடித்துக்கொள்வார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இதில் காப்பு கட்டி உள்ள பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி காலை 10 மணிக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு விசேஷ அபிஷேகபூஜையும் மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.

பிறகு இரவு 7 மணிக்கு வாலிபாளையத்தில் உள்ள முக்கிய விதிகளில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி காலை 10.30-மணிக்கு திருக்கல்யாணம், 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரசாமி கோவிலில் உள்ள முருகன் சன்னதி, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.

Next Story