பாவம் போக்கும் பரிகாரி


பாவம் போக்கும் பரிகாரி
x
தினத்தந்தி 29 Nov 2018 9:15 PM GMT (Updated: 29 Nov 2018 10:26 AM GMT)

ஆசைகள் மிகுந்த இந்த உலகில் வாழும் மனிதர்கள் கூட்டத்தில் பாவம் செய்யாத நபரே இல்லையென்று கூறினால் அது மிகையாகாது.

கடவுள் சிருஷ்டித்த முதல் மனிதன் ஆதாம் முதல், இந்த நிமிடம் வாழும் மனிதன் வரையும், இனி உலகம் இருக்க போகும் கடைசி நிமிடம் வரையுள்ள மனிதர்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு வகையில் பாவம் செய்கின்றனர்.

பாவம் செய்யும் பொழுது சந்தோஷமாக இருக்கும், அதை செய்து முடித்தவுடன் நம் மனசாட்சியே நம்மை வாதிக்கும். ஆகவேதான் அந்த வேதனை தாங்காமல், மனசாட்சி நாளுக்கு நாள் வாதிப்பதினால், அநேகர் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர்.

அநேகர் இந்த பாவம் போக்க பல புண்ணிய தேவாலயங்களுக்கும், புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கும் போகிறது உண்டு. காரணம், ‘எங்கள் பாவம் மாற வேண்டும், பாவ தோஷம் நீங்க வேண்டும்’ என்பது தான்.

‘மனுக்குலத்தின் பாவங்களை போக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் பலியானார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்’ (1 யோவான் 1:7) என்று வேதம் கூறுகிறது.

ஒரு புகழ் பெற்ற ஓவியருக்கு ஒரு முறை ஒரு ஆசை வந்தது. இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பன்னிரண்டு சீடர்களையும் ஓவியம் தீட்ட வேண்டும் என்று.

இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் பலியாவதற்கு முன்னர் தன் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு மேல்வீட்டறையில் இராப்போஜனம் பண்ணினார் என்று வேதம் கூறுகிறது.

இந்த சம்பவத்தை ஓவியமாய் வரைய அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து, யூகித்து, ஒவ்வொரு மனிதனாய் தேடிப்பிடித்து அவனை அமரவைத்து ஓவியம் தீட்டினார்.

முதலாவது சீடரை தீர்மானித்து வரைந்தார். பதினோரு சீடர்களை வரைந்து முடித்தார். கடைசியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்படி காட்டிக் கொடுத்த யூதாசை வரைய வேண்டி இருந்தது.

பல நபர்களை தேர்ந்தெடுத்து பார்த்தார் அவருக்கு திருப்தியே வரவில்லை. இறுதியாக அவர் அந்த ஊரின் சிறைச்சாலைக்குச் சென்று கொலை, திருட்டு, கொள்ளை, போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஒரு சிறை கைதியை தேர்ந்தெடுத்து வரைய எத்தனித்தார். அப்படியே வரைந்து முடித்தார். அவருக்கு மிகுந்த சந்தோஷம். மிகவும் நன்றாக பொருத்தமாக அந்த கைதியின் முகம் இருந்தது.

இறுதியாக அவர் ஏசு கிறிஸ்துவை வரைய, அதற்கேற்ற நபரை தேடி அலைய ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன, யாரை அவர் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. இயேசு கிறிஸ்துவைப் போல வரைய அவர் நபர்களை தேடித்தேடி அலைந்தார். நாட்கள் உருண்டோடின. எவரும் அவருக்கு தென்படவில்லை. அவரும் திருப்தியாகவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு ஒரு செய்தி வருகிறது. ஒரு பிரசங்கியார், அவர் இருந்த ஊருக்கு அருகாமையில் ஊழியம் செய்ய வந்திருக்கிறார். அவருடைய முகத்தில் அவ்வளவு பிரகாசம், சாந்தம், அன்பு. ஜனங்களெல்லாரும் அவரிடம் பிரார்த்தனை செய்ய போகின்றனர் என்று.

இவரும் அவரை காண விரைந்தோடினர். அவரை கண்டவுடன் இவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயேசு கிறிஸ்துவாக வரைவதற்கு இவரே பொருத்தமான நபரென்று எண்ணி தன் ஓவிய திட்டத்தை அவரிடம் விவரித்து அவரை வரையவேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

அந்த ஊழியரும், ‘வரைந்து கொள்ளுங்கள்’ என்று அவருக்கு முன் அமர்ந்தார். அந்த ஓவியர் வரைய ஆரம்பித்தார்.வரைந்து முடித்தவுடன் இவருக்கு மிகுந்த சந்தோஷம். அந்த ஊழியருக்கு சந்தோஷத்தோடே நன்றி கூறும் வேளையில் அந்த ஊழியர் இப்படியாக கேட்டார்: ‘என்னை இதற்கு முன்னால் பார்த்திருக்கின்றீர்களா, என்னை அடையாளம் தெரிகிறதா?’.

‘இல்லையே, நான் இதற்கு முன்பு உங்களை பார்த்தது இல்லையே’ என்று ஓவியர் பதிலளித்தபோது: அந்த ஊழியர் ஒரு புன்முறுவலுடன் கேட்டார், ‘சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரின் சிறைச்சாலைக்கு நீ சென்றிருந்தாயா?’

‘ஆம், சென்றிருக்கிறேன்’ என்று இவர் பதிலளித்திருக்கிறார். ‘அப்பொழுது யூதாசை வரைய கைதிகளைப் பார்த்தாயல்லவா?’ என்றார். ‘ஆம், பார்த்தேன், நான் அதில் ஒரு கைதியை தேர்ந்தெடுத்து யூதாஸாக வரைந்தேன்’ என்றார்.

‘அந்த கைதி வேறு யாரும் இல்லை, நான் தான்’ என்றார் இந்த ஊழியர்.

ஓவியருக்கு பிரமிப்பு வந்தது.

‘நான் சிறைச்சாலையில், இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். என் தண்டனைக் காலம் முடிந்ததும் நான் விடுதலையாகி ஊழியம் செய்து வருகிறேன்’ என்றார்.

ஆம், அவருடைய பாவங்களை நீக்கி இரட்சித்த இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அதுபோல இதை வாசிக்கின்ற அனைவரையும் மன்னித்து, இரட்சித்து, ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. சி சதீஷ், வால்பாறை.

Next Story