வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா


வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா
x
தினத்தந்தி 11 Dec 2018 9:35 AM GMT (Updated: 11 Dec 2018 9:35 AM GMT)

இத்தொடரின் வாயிலாக ராமகாவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்களைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இந்த வாரம் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான சீதையின் முற்பிறவியைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒருவரை வீழ்த்துவது மிகச் சுலபம்.

ஆனால் ஒருவரின் இதயத்தை ஜெயிப்பது

மிகக் கடினம். அதற்கு வீரம் தேவையில்லை.

அன்பும், கனிவும், நேசிப்பும், பெருந்தன்மையும்,

சேர்ந்த தெய்வீக குணங்கள் தேவை.

“ஓம் நமோ நாராயணா”

இனிமையான பெண்ணின் குரல், அந்த இமயமலையின் வனப் பகுதி எங்கும் பரவியது. எல்லையற்ற வான்வெளியில் காற்று அந்தக் குரலைச் சுமந்து சென்றது.

தன்னை மறந்து தவத்தில் இருந்த வேதவதியின் மனம், நாராயணனின் பாதத்திலேயே லயித்திருந்தது. பட்டும், பீதாம்பரமும் அணிந்தபடி, கண்ணில் கருணையும், மயக்கும் புன்னகையை உதட்டிலும் தாங்கி, குமிழ்ச் சிரிப்புடன், மகாவிஷ்ணு அவள் மனமெங்கும் நிறைந்து நின்றார்.

அவளைச் சுற்றி அழகும், நறுமணமும் நிறைந்திருந்தது. அழகின் உருவமே நின்று அங்கு தவம் செய்து கொண்டிருந்தது.

அவளது குரல், வான்வெளியில் பரவி காற்றில் கலந்து ராவணன் காதுகளில் மோதியது. பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்த ராவணன் இமயமலையின் அருகில் வரும்போது நாமமும், இனிமையான குரலின் வசீகரமும் அவனை ஈர்த்தது.

“குரலே இவ்வளவு இனிமை என்றால், அவள் எத்தனை அழகாக இருப்பாள்?” எண்ணமிட்டது மனம்.

“வர்ணிக்க முடியாத பேரழகி. அழகின் இலக்கணம் அவள்.”

நாரதரின் குரல் ஒலித்தது. சர்வலோக சஞ்சாரியான அவர் நடக்கப் போவது தாமதமில்லாமல் நடக்க, அங்கே தோன்றினார்.

ராவணன் ஆர்வத்தோடு அவரை நோக்கினான். “நாரதரே, வாரும். யார் இந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரி?. இவள் குரலே என் உணர்வுகளைக் கிளப்புகிறதே. அவளது தோற்றம்...” -அவன் கண்ணில் காமம் வழிந்ததை மிகச் சரியாக கண்டு கொண்டார் நாரதர்.

“ராவணா! இவள் பிரஹஸ்பதியின் மகன் குசத்வஜரின் மகள். குசத்வஜரின் தவத்துக்கு மகிழ்ந்து மகாலட்சுமியே அவருக்கு மகளாக வந்து பிறந்திருக்கிறாள். இவளை மணக்கத் தகுதியானவர் மகாவிஷ்ணு தான் என்று அவளது தந்தை கூறியதால், இங்கு வந்து தவம் இருக்கிறாள்.”

“யார் அந்த மகாவிஷ்ணு? என்னை விட உயர்ந்தவனா? என் வீரம், பராக்கிரமம் அறியாதவள் இவள். இந்த அழகும், வனப்பும் எனக்கே உரிமையாக வேண்டும்.”

“உன் உரிமையாக வேண்டும் என்று அவள் விரும்ப வேண்டும் ராவணா”

“இல்லை.. அதை நான் முடிவு செய்ய வேண்டும்.” - ஆணவத்துடன் பேசினான் ராவணன். அதைக் கேட்டு திருப்தியுடன் புன்னகைத்தார் நாரதர்.

“உண்மைதான் ராவணா! ஈசனைப் பூஜித்து எண்ணற்ற வரங்கள் பெற்றவன் நீ. அனைத்து உலகங்களும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறது. அரிதானவை, சிறப்பானவை என்பதெல்லாம் உனக்கே உரிமையாக வேண்டும். அதோ அங்குதான் வேதவதி தவம் செய்கிறாள், செல்.” கை காட்டினார் நாரதர்.

தனது விதியைத் தேடிச் சென்றான் ராவணன்.

இமயமலைப் பகுதியில் இருந்த அந்த வனம் அடர்த்தியாக இருந்தது. சின்ன அருவி ஒன்று மலைப் பாறைகளின் இடுக்கு வழியாக வழிந்து கொண்டிருந்தது. பூத்து, பறிக்கப்படாமல் மலர்கள் செடிகளில் சிரித்தது. வண்ண, வண்ண மலர்கள் பூத்திருந்த செடிகள், அடர்ந்த கிளைகளுடன் மரங்கள், உயரமான மலைப் பகுதியிலிருந்து வழிந்து இறங்கும் அருவி என்று அந்த இடம் இயற்கையின் அழகை அள்ளி விழுங்கியிருந்தது.

அந்த இயற்கையே பெண் உருவம் எடுத்தது போல், அழகின் மொத்த உருவமாய் வேதவதி கண் மூடி பாறையின் உச்சியில் நின்றிருந்தாள்.

பொன் நிறத்தில் ஜொலித்த மேனி. அழகு தன்னைத் தானே ரசித்து செதுக்கிக் கொண்டிருந்தது. அலை, அலையாய்ப் பரந்த கூந்தல் வானத்தை தொடுவது போல் நீண்டிருந்தது. ராவணன் இமைக்க மறந்து நின்றான். ‘இவ்வளவு அழகா? இது தனக்கல்லவா உரிமையாக வேண்டும்.’

காமம் அவன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து வழிந்தது.

ஆர்வத்துடன் அருகில் சென்று வேதவதியின் கூந்தல் பற்றி இழுத்தான்.

தன்னை மறந்து தவத்தில் ஆழ்ந்திருந்த வேதவதி திடுக்கிட்டு விழித்தாள். அசுர தோற்றத்துடன் மலை போன்று பிரமாண்டமாக நின்ற ராவணனை அச்சத்துடன் நோக்கினாள். அவளின் மருண்ட பார்வையும், தோற்றமும் அவனின் ஆசையை இன்னும் அதிகரித்தது.

“பெண்ணே! அழகின் இலக்கணமாகத் திகழும் நீ, இப்படி தவத்தில் ஈடுபட்டு, இளமையையும், வனப்பையும் வீணடிக்கலாமா? நீ என் போன்ற அரசனை மணந்து சுகமாக வாழ வேண்டியவள். நான் இலங்கை வேந்தன் ராவணன்.” கம்பீரமாக, கர்வத்துடன் கூறிய அவனை துச்சமாகப் பார்த்தாள் வேதவதி.

“ராவணா! நான் வேதங்களின் தொகுப்பு. எனவே என்னை மணக்கும் ஒரே தகுதி விஷ்ணுவுக்கு மட்டுமே உண்டு. என் தந்தை குசத்வஜர், விஷ்ணுவை நோக்கி என்னைத் தவம் செய்யச் சொன்னார். இதனால் என்னை மணக்க முடியாத தைத்ய அரசன் சம்பு, என் தந்தையை நள்ளிரவில் கொன்று விட்டான். என் தாயும் அவருடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். தந்தையின் உத்தரவை ஏற்று மகாவிஷ்ணுவை மணக்க தவம் செய்கிறேன். என்னை அடையும் தகுதி உனக்கு இல்லை.”

“யார் அந்த விஷ்ணு? என்னை விடப் பெரியவனா?” கொக்கரித்தான் ராவணன்.

“உன்னைப் படைத்தவனே அவன்தான்.” சீறினாள் வேதவதி.

“ராவணா! ‘நான்’ என்ற ஆணவத்தில் ஆடாதே. தலைக்கணமே நம்மை வீழ்த்தும் ஆயுதம். உன்னை விரும்பாத ஒன்றை அடைய நீ நினைத்தால், இருப்பதையும் இழந்து விடுவாய். பிற உயிர்களின் உணர்வுகளையும் மதித்து நட. உன் அழிவை நீயே தேடிக் கொள்ளாதே.”

“நம் தகுதிக்கு மீறிய ஒன்றின் மேல் ஆசை வைப்பதும், அதை அடைய வன்முறையில் ஈடுபடுவதும் உனக்கு நீயே தலையில் தீ வைத்துக் கொள்வது போல். உன்னைப் போன்ற அசுரனுக்கு ஏற்றவள் அல்ல நான். பரம்பொருளின் உடமை நான். என்னை வற்புறுத்தாதே.” வேதவதி அமைதியாகச் சொன்னாள்.

ஆனால் அவளின் உபதேசம் ராவணன் காதில் விழவில்லை. “உலகின் அழகான பொருட்கள் எல்லாம் எனக்கே சொந்தம்” என்று கொக்கரித்தவன், அடர்ந்த அவளது கூந்தலைப் பற்றி இழுத்தான்.

“ச்சீ” வேதவதி சீறியபடி தன் வலது கையை உயர்த்தினாள். அது வாளாக மாறியது. “நீ தொட்ட இந்தக் கூந்தல் இனி எனக்கு வேண்டாம்” நீண்ட கூந்தலை வாளால் அறுத்து எறிந்தாள்.

“ராவணா! ஒரு பெண்ணைச் சீண்டுவது, விஷம் நிறைந்த பாம்புடன் விளையாடுவது போல். அவள் அடங்கி, அமைதியாக இருக்கும் வரைதான் உங்கள் வெற்றிகள் எல்லாம். அவள் சீறிப் பொங்கி எழுந்தால் அதை உங்களால் தாங்க முடியாது. அவளை உன்னால் ஜெயிக்கவும் இயலாது. இதோ இந்தப் புல்லை விட அற்பமானவன் நீ. இனி நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்றவள் அங்கேயே தீ மூட்டி இறங்கி விட்டாள்.

“இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. உனக்கு சாபம் தரலாம். அதில் என் தவப் பயன் அழிந்து விடும். நான் மீண்டும் பிறப்பேன். கர்ப்பத்தில் பிறக்காதவளாக வந்து, நானே உன் அழிவுக்குக் காரணம் ஆவேன்.”

சீற்றத்துடன் கூறிய வேதவதி தீயில் புகுந்து விடுகிறாள்.

அவளே சீதையாக, ஜனக மகாராஜா, யாக பூமியை உழும்போது ஒரு பேழையில் குழந்தையாகக் கிடைக்கிறாள்.

ஒருவன் செய்யும் பல தீமைகளில் பிரதானமானது, பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமையே. பெண்ணை மதிக்காமல், அவளை வெறும் போகப் பொருளாகக் கருதுபவன், மிகக் கொடூரமாக வீழ்த்தப் படுவான். அதற்கு சிறந்த உதாரணம் ராவணன். பல பெண்களின் சாபமே சீதையாக வந்து அவன் அழியக் காரணமாகிறது.

-தொடரும்.

Next Story