திருவிளையாடல் புராணம்
மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ‘திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த திருவிளையாடல் புராணம் 64 நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதை களாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.
தமிழ் மொழியில் மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப்படுகின்றன. அவை, சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம். இதில் திருவிளையாடல் புராணம், சிவபெருமானின் இடதுகண் என்று போற்றப்படுகிறது.
பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவர் தென்மொழி, வடமொழி, திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்களை கற்றுணர்ந்தவர். தம் தந்தையான மீனாட்சி சுந்தரதேசிகரிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடமும், சிவ னடியாா் களிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்.
பரஞ்சோதி முனிவர், சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையம்பதியில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மை அவருடைய கனவில் தோன்றி, இறைவனின் திருவிளையாடல்களைப் பாட கட்டளையிட்டார். அன்னையின் ஆணைக்கிணங்க ‘சத்தியாய்..’ எனத் தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
திருவிளையாடல் புராணமானது, மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்த நூலில் மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.
இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
Related Tags :
Next Story