அபூர்வ மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு இன்று களையப்படுகிறது


அபூர்வ மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு இன்று களையப்படுகிறது
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 7:31 PM GMT)

திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு இன்று (சனிக்கிழமை) களையப்படுகிறது.

ராமநாதபுரம்,

வைகை என்னும் பொய்யா குலக்கொடி-வேகவதி-புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோசமங்கை திருத்தலம். இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தர கோசமங்கை, தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன்மை வாய்ந்தது.

இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

தமிழ் வளர்த்த சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவருடைய தெய்வீக பாடல்களில் ‘மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோ’ என்று பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள். இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்றுள்ளன என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரானின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக வேத வரிகளில் காணப்படுகின்றன. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

புராண புகழ்பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டியம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சைக்கல் இயல்பாகவே மென்மையானது. ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க சந்தனக்கலவையை பூசி வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனக்கவசம் களையப்படும்.

இதன்படி ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. காலை 11.30 மணி முதல் அபூர்வ மரகத நடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனாதி தைலம் பூசப்படும். தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு மரகத நடராஜர் வைக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா அன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படும்.

இதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடத்தப்பட்டு அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய வந்து அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story