உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது


உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-08T01:29:34+05:30)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி நடக்கிறது.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தை பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

13-ந் தேதி காலை சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, யானை மீது கொடிபட்டம் ஊர்வலம், கொடியேற்றம் நடக்கிறது. இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதி உலா, சமய சொற்பொழிவு நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ந் திருநாளான 21-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தேரோட்டம் நடக்கிறது. பின்னர் தீர்த்தவாரியும், சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Next Story