மனக்கவலை போக்கும் திருவான்மியூர் ஈசன்
பிருங்கி முனிவர் ஒருமுறை திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானை மட்டும் வழிபட்டார். அருகில் இருந்த உமையவள் ஈசனோடு உரசியபடி அமர, அப்போதும் வண்டு உருவம் கொண்டு ஈசனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார் பிருங்கி முனிவர்.
கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரின் சக்தியை தன்னுள் கிரகித்துக் கொண்டார். இதனால் முனிவரால் நடக்கக்கூட முடியவில்லை. உடனே சிவபெருமான் அவருக்கு ஊன்றுகோல் வழங்கினார்.
அனைவருக்கும் சக்தியும் சிவனும் ஒன்றே என்று உணர்த்த, சிவனில் சரிபாதியை பெறுவதே சரியானது என்று பார்வதி முடிவு செய்தாள். அதன்படி அம்பாள் மேற்கொண்ட விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘கேதாரம்’ என்பது இமயமலைச் சாரலில் உள்ள சிவ தலம் ஆகும். கவுதம முனிவரின் வழிகாட்டுதல்படி, கேதாரத்தில் உள்ள சிவபெருமானை நினைத்து பார்வதி தேவியாக ‘கவுரி’ இருந்த விரதம் என்பதால் ‘கேதார கவுரி விரதம்’ ஆனது. அதன் வாயிலாக ஈசனின் சரிபாதியைப் பெற்றார் என்பது வரலாறு.
இதையறிந்த பிருங்கி முனிவர், தான் செய்த தவறுக்காக பல சிவ தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை திருவான்மியூராக இருக்கும் பகுதிக்கு வந்து அங்குள்ள அமுதீஸ்வரர், சொக்கநாயகி அம்மன் ஆகியோரை வழிபாடு செய்தார். அப்போது அம்பாள், முனிவருக்கு மீனாட்சி, காமாட்சி, மூகாம்பிகை, காந்திமதி என அத்தனை சக்தி வடிவங்களையும் தன்னுள் காட்டி நின்றாள். இதனால் இத்தல அம்மனை ‘திரிபுரசுந்தரி’ என்றும் அழைக்கிறார்கள். இத்தல அம்மனை வழிபடுவதால் உலகிலுள்ள அனைத்து திருக்கோவில்களிலும் உள்ள அம்பாளை வழிபட்ட பெரும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தலத்தின் மேற்கில் உள்ள சிறுகுன்றில் பிருங்கி மகரிஷி சில காலம் தங்கி, திருவான்மியூர் ஈசனை வழிபட்டு வந்தார். ஆகையால் இத்தல ஈசனும் மேற்கு நோக்கி கோவில் கொண்டுள்ளார். எனவே தான் இத்தல ஈசன் மேற்குநோக்கி கோவில் கொண்டுள்ளார் என்கிறார்கள். அப்பய்ய தீட்சிதரின் பொருட்டும் ஈசன் மேற்குநோக்கி அருளலானார் என்றும் கூறுகிறார்கள். பிருங்கிமுனிவர் தங்கியிருந்து திருவான்மியூர் ஈசனை வழிபட்டுவந்த அந்த சிறுகுன்று ‘பிருங்கி மலை' ஆனது.
பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தால், தேவர்கள் அனைவரும் இத்தல ஈசனை வழிபட்டனர். அதனால் இத்தல இறைவன் அமுதீஸ்வரர் ஆனார். திருவான்மியூர் ஆலயத்தின் மூலவர் கருவறையின் பின்புறம், அதாவது கிழக்குப்பகுதியில் கேதார கவுரி விரதத்தின் நாயகன் கேதாரீஸ்வரரை தனிச்சன்னிதியில் கண்டு தரிசிக்கலாம். இவரை வழிபடுவதால் வறுமை, பிணி அகலும். கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும். திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத் துணை அமையும்.
அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது. எனவே தான் இங்கு சுயம்புவாய் அருளும் ஈசனை ‘மருந்தீஸ்வரர்’ என்கிறோம். இங்கு வழங்கப்படும் ஈசனின் திருநீறு, நம் நோய்களை நீக்கும் வல்லமை உடையது.
இங்கு உள்ள பாவநாசினி தீர்த்தத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடி இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தவறான வழியில் செல்லும் பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். ஆலயத்தில் தினமும் அதிகாலையில் கோ பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் தொடர்ந்து 21 நாட்கள் தவறாமல் கலந்து கொண்டால், நம் கர்மவினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.
பிரம்ம தேவனின் மகனான ரட்சசு, நாரதரின் வழிகாட்டலின் படி இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் நீராடி, மருந்தீஸ்வரரை வழிபாடு செய்தான். இதனால் அவனுடைய பெண்ணுருவம் மறைந்து மீண்டும் ஆண் உருவத்தைப் பெற்றான் என்கிறது தல புராணம். எனவே இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஈசனை வழிபட்டால், மலட்டுத் தன்மை, ஆண்மை குறைபாடு முதலியன நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வால்மீகி முனிவருக்கு ஈசன் இங்கு காட்சி தந்ததால் ‘வான்மீகியூர்’ ஆகி வான்மியூர், திருவான்மியூர் ஆனது. காமதேனு ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டதால் இத்தல மருந்தீஸ்வரரை ‘பால் வண்ண நாதர்’ என்றும் அழைக்கிறார்கள்.
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் மருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
Related Tags :
Next Story