இறை நம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்


இறை நம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்
x
தினத்தந்தி 22 Jan 2019 7:09 AM GMT (Updated: 22 Jan 2019 7:09 AM GMT)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’, என்ற ஓரிறைக்கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

அதையே மக்களிடமும் வலியுறுத்தினார்கள். இதில் இருந்த உண்மையையும், அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர்.

இதை அரபு தேசத்தில் உள்ள குரைஷி இன மக்கள் எதிர்த்தனர். அதோடு நபிகளாருக்கு எதிராக போர் தொடுத்தனர். பத்ர், உஹது ஆகிய இரு போர்களில் குரைஷிகள் தோல்வியைத் தழுவினார்கள். ஆனாலும் அவர்களின் வெறி தணியவில்லை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில், நபிகளுக்கு எதிராக இருக்கின்ற யூதர்களுடன் அரபுத்தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். அனைவரும் ஒன்று திரண்டு பெரும்படையுடன் மதினாவை தாக்கி அழிப்பதுடன், நபிகளாரை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.

இந்த செய்தி ஒற்றர்கள் மூலமாக நபி பெருமானாருக்கு தெரிய வந்தது. நபிகளார் தமது தோழர்களை அழைத்து, இந்த இக்கட்டான தருணத்தில் நாம் எப்படி போர்த்தந்திரங்களை வடிவமைத்து கொள்வது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, பாரசீக நாட்டைச் சேர்ந்த நபித்தோழர், சல்மான் பாரிஸ் (ரலி) இவ்வாறு கூறினார்:

“மதினாவில் நாம் எண்ணிக்கையில் குறைவாக உள்ளோம். அதன் எல்லைகளும் பாதுகாப்பற்ற நிலையில் விரிந்து உள்ளது. ஒரு சிறு இடைவெளியின் மூலம் கூட மதினாவில் எதிரிகளால் ஊடுருவி விட முடியும். நாம் மதினாவையும் அங்கு இருக்கும் பெண்கள், பெரியவர்களையும் பாதுகாக்க வேண்டும். எதிரிகளை எதிர்த்து போரிடவும் வேண்டும். எனவே முதலில் மதினாவை பாதுகாத்து கொண்டு பின்பு போர் புரியலாம். இது போன்ற சமயங்களில் பாரசீகத்தில் நகரைச் சுற்றி பெரும் அகழிகளைத் தோண்டி விடுவோம். அதனால் எதிரிகள் நகரை நெருங்கி வருவதை தடை செய்து விடுவோம். பின்னர் சற்று தொலைவில் இருந்து அம்பெய்து போரிடுவோம். வாள் வீரர்களை விட அம்பெய்தும் வீரர்களைத் தான் அதிகம் இங்கே பயன்படுத்த வேண்டும். எனவே மதினாவைச்சுற்றி அகழி தோண்ட வேண்டும். அதிக ஆழமும் அகலமும் கொண்டதாக அது அமைய வேண்டும். அப்போது தான் எதிரிகளை கட்டுப்படுத்த முடியும்”.

இவ்வாறு அவர் ஆலோசனை சொன்னார்.

அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். எதிரிகள் மதினா வருவதற்குள் அகழி தோண்ட முடிவு செய்தனர்.

அது கடும் கோடை காலம். நபித்தோழர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். காலையில் வந்து அகழி தோண்ட ஆரம்பித்தால் மாலை வரை அந்த பணியைச் செய்தனர். பசிக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. தங்கள் வீட்டில் இருந்து உணவு எதுவும் கொண்டு வர முடியாத வறுமை நிலை. இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டனர்.

நபிகள் நாயகம் இந்தப்பணியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள். பலர் பசியின் காரணமாக ஒட்டிய வயிற்றில் கற் களைக் கட்டி, முதுகை நிமிர்த்தி வேலை செய்தார்கள்.

அப்போது ஒரு தோழர், நபிகளிடம் தன் வயிற்றுப் பசியைச் சொல்லி, அதை சமாளிக்க தன் வயிற்றில் கற்களை கட்டி இருப்பதை காட்டினார். அப்போது, அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தன் வயிற்றில் இரண்டு கற்களை கட்டி இருப்பதை அந்த தோழரிடம் காட்டினார்கள்.

இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்” (திருக்குர்ஆன் 33:11).

நபிகளார் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்ட தோழர்கள் கூட்டத்தில் சிலர் நம்பிக்கையின்றியும் இருந்தனர். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சதி செய்வதற்காகவே, ‘வெற்றி நமக்கே கிடைக்கும் என்று வாக்களித்தார்கள்’ என்று எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருந்ததோ, அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதை நினைத்துப் பாருங்கள்” (திருக்குர்ஆன் 33:12).

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் அகழி தோண்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். குதிரைகள் தாண்ட முடியாத அளவு அகலமும், குழிக்குள் குதிரைகள் விழுந்தால் எழுந்து வர முடியாத அளவு ஆழமும், 27 ஆயிரம் அடி நீளமும் கொண்ட அகழி மதினாவைச் சுற்றித் தோண்டப்பட்டது. சிறிய இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாய் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது.

இந்த பணியின் போது நபிகள் நாயகம் இரண்டு அதிசயங்கள் நடத்திக்காட்டினார்கள். நபிகளார் பல நாட்கள் உணவருந்த வில்லை என்பதை அறிந்த அர்க்கம் (ரலி) என்ற தோழர், தன் வீட்டில் இருந்த சிறிதளவு உணவை கொண்டுவந்து கொடுத்தார்கள். இறைவன் திருப்பெயரை உச்சரித்து அந்த உணவை தன் கைகளால் கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு தோழருக்கும் நபிகளார் கொடுத் தார்கள். அத்தனை தோழர்களுக்கும் வயிறு நிரம்பும் அளவுக்கு அந்த உணவு இருந்தது.

இரண்டாவதாக, அகழி தோண்டும் போது யாராலும் உடைக்க முடியாத பெரும் பாறை தடையாக இருந்தது. அப்போது, தனி ஒருவராக அதை சம்மட்டியால் மூன்று முறை அடித்து உடைத்தார்கள். முதல் அடியின் போது, ‘ரோம் பேரரசை நாம் கைப்பற்றுவோம்’, இரண்டாவது அடியின்போது, ‘பாரசீகத்தை கைப்பற்றுவோம்’, மூன்றாவது அடியில் ‘சிரியாவை கைப்பற்றுவோம்’ என்று நபிகளார் முன்னறிவிப்பு செய்தார்கள்.

அன்றைய சூழ்நிலையில், பெரும் வல்லரசாக திகழ்ந்த அந்த நகரங்களை பலவீனமான நமது படை வெல்லுமா? என்று பலர் சந்தேகித்த போதும், பின்னாளில் கலிபா உமர் ஹத்தாப் (ரலி) காலத்தில் இந்த மூன்று நாடுகளும் வென்றெடுக்கப்பட்டன, நபிகளாரின் வாக்கும் உண்மையானது.

அகழி போர் ஆரம்பம் ஆனது. அபுசுபியான் தலைமையில் யூதர்களும், அத்தனை அரபு குல கோத்திரங்களும் இணைந்த 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட கூட்டு படை மக்கா நகரில் இருந்து புறப்பட்டது. அவர்களை எதிர்க்க நபிகளாரின் தலைமையில் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறிய படை மதினாவில் திரண்டது.

மதினத்து எல்லையை அடைந்ததும் அரபு படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆழமான, அகலமான அகழிகளைப் பார்த்ததும் திகைத்து நின்றனர். மதினத்து எல்லையைக் கூட அவர்கள் நெருங்க முடியவில்லை. துணிந்து நெருங்கினாலும் நபிகளார் தலைமையில் உள்ள படைகள் எய்த அம்பு மழையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

இருந்தாலும் மதினத்துப் படையை பலவீனப்படுத்தும் வகையில் அரேபியர்கள் முற்றுகையை மாதக் கணக்கில் தொடர்ந்தனர். பசியினால் ஏற்பட்ட சோர்வு, போர் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை மதினத்து படையினர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அப்போது இறைவன் இந்த திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்:

“எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகிய முன்மாதிரி உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் அவரைப் பின்பற்றி நடந்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்” (திருக்குர்ஆன் 33:21)

யுத்தம் பல நாட்கள் தொடர்ந்தது. எதிரிப்படைகளிடம் உணவுப் பொருள் தீர்ந்தது. அவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது அல்லாஹ்வின் சோதனையும் இறங்கியது.

பெரும் புயல் காற்றும், மழையும் அவர்களது கூடாரங்களை அழித்து புரட்டிப் போட்டது. காற்று பலமாக வீசியதால், போர் வீரர்கள் நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தனர். திரும்பிச் செல்வதை தவிர வழியில்லை என்ற நிலை உருவானது. அதேநேரத்தில், நபிகளாரின் தலைமையிலான படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரபு படை தோற்று சிதறி ஓடியது. நபிகளார் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.

அந்த நிலைமையை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:

“நம்பிக்கையாளர்களே, உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது எதிரிகளின் படைகள் அணி அணியாக வந்த சமயத்தில் புயல் காற்றையும், உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். அச்சமயம் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்” (33:9).

அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

Next Story