ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...


ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...
x
தினத்தந்தி 24 Jan 2019 9:30 PM GMT (Updated: 24 Jan 2019 10:15 AM GMT)

நமது தேசத்தின் அடையாளங்களில் நமது குடும்பமும் ஒன்று. இதர நாடுகளில் பெரும்பாலும் குடும்பம் என்பது சிதைந்து போன நிலையில் தான் இருக்கிறது. அதிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன்... என்பதெல்லாம் தமிழகத்தின் தாரக மந்திரச் சொற்கள்.

இஸ்லாமிய மார்க்கமும், குடும்பம் என்பது என்ன, குடும்பத்துடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபி மொழிகள் மூலமும் தௌிவாக தெரிவிக்கின்றன.

‘மனிதர்களே, உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்)- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)

ஒரு மனிதன் குடும்பம் என்ற வளையத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது. நாம் குடும்பத்தைப் பாதுகாத்தால் நமது குடும்பம் நிச்சயம் நம்மை பாதுகாக்கும்.

இதனால் தான் நீங்கள் உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், உங்கள் உறவுகளை துண்டிக்காதீர்கள். உங்கள் உறவுகளை ஆதரியுங்கள், உங்களது ஆயுள் அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான சகல வாழ்வாதாரங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் சொல்லி, நமது உறவுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

குடும்பம் தான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கிறது. நல்லொழுக்கங்களை கற்றுத்தருகிறது. உறவுகளை மதிக்கச்சொல்கிறது, ஒற்றுமையோடு வாழ வழிகாட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழக் கற்றுக்கொடுக்கிறது என ஏகப்பட்ட நன்மைகள் ஒரு குடும்பத்தில் உண்டு.

“ஒருவர் செலவு செய்யும் தொகைகளிலேயே ஆக மிகச் சிறந்தது அவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதே ஆகும்” என்பது நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம்)

“ஒருவர் தமது குடும்பத்திற்காக செலவு செய்யும் போது இறைவனின் திருப்தியை நாடி செலவு செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செலவும் அது அவருக்கு தர்மமாக ஆகும்” என்பது மற்றொரு நபிமொழியாகும். (நூல்: புகாரி).

இந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது என்ன..? செல்வம் அது சேர்த்து வைக்கப்படுவதற்கல்ல. அது செலவு செய்யப்படுவதற்குத்தான். அதுவும் அவரவர் தமது குடும்பங்களுக்காக செலவு செய்வது தான் சிறந்தது.

அதற்கு இரண்டு விதமான நன்மைகள் உண்டு. ஒன்று குடும்பத்தை கவனித்த நன்மை. மற்றொன்று தர்மம் செய்த நன்மை. இதுதவிர ஒருவன் தன் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றால் அது ஒரு பாவச்செயல். அந்தப் பாவம் ஒன்றே போதும் அவனை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவதற்கு.

குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும். குடும்பம் என்பது கதவும், ஜன்னலும் கொண்ட வெறும் வீடல்ல. அன்பும், இரக்கமும், பாசமும் கொண்ட ஒரு பெரும்கூடு’ என்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனையோ வகை மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி அவர்களது குடும்பம் தான். இதனால் தான் “உங்கள் பிள்ளைகளுக்கு உங்களது குடும்பப் பாரம்பரியத்தை கற்றுக்கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.

உறவு என்பது ஒரு தனிப்பிரிவல்ல. அது ஒரு உயிரின் குடும்ப இணைப்பு. உறவற்ற குடும்பம் உயிரற்ற உடலைப் போன்றது. எனவே நமது குடும்பம் நம்மைப் போலவே உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். “படைப்பினங்கள் யாவும் ஒரே குடும்பம்” என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைக்கத்தக்கது.

இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழும் போது தான் அந்த வாழ்க்கை நிச்சயம் அர்த்தமுள்ளதாய் அமையும்.

என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story