கல்யாண வரம் தரும் காளகஸ்தீஸ்வரர்


கல்யாண வரம் தரும் காளகஸ்தீஸ்வரர்
x
தினத்தந்தி 31 Jan 2019 12:25 PM GMT (Updated: 31 Jan 2019 12:25 PM GMT)

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை.

ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.

இதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.

மாமன்னன் ராஜராஜசோழன் தன் ஆட்சி காலத்தில், சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல கூற்றங்களையும், நாடுகளையும் பெற்று திகழ்ந்தன. அப்படி பகுக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக, சிங்க வளநாடு திகழ்ந்தது. இந்த சிங்க வளநாட்டில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. இந்த கிராமங்களுக்கு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பலிபீடமும், நந்தியும் இருக்க முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகையின் சன்னிதி உள்ளது. முகப்பில் துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலை காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவி ஞானாம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. அதையடுத்த கருவறையில் இறைவன் காளகஸ்தீஸ்வரர், லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் கன்னி மூலை கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் காலபைரவர், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் ஆலய தேவக்கோட்டத்தில் வைஷ்ணவி, பிரமணி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.

இத்தலம் ராகு - கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது.

ஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள் ஆகும். பழங்காலம் முதற்கொண்டு இக்கோவில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.

இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பலநூறு பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மார்கழி 30 நாட்கள், கார்த்திகை சோம வாரங்கள், சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பொங்கல் அன்று ஆலயம் சார்பில் திருச்சுற்றில் பொங்கல் வைத்து படைக்கின்றனர். பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர். கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றுவதும் இங்கு வழக்கமே. தைப்பூசத்தன்று இங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, புன்னைநல்லூர் சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெறும்.

இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

விரைந்து திருமணம் நடக்கவும் தடைபட்ட விவாகம் விரைந்து நடக்கவும், குழந்தை பேறு வேண்டியும் வரும் பக்தர்களின் குறைகளை நீங்கவும் காளகஸ்தீஸ்வரரை நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.

அமைவிடம்

தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.

- ஜெயவண்ணன்

Next Story