எதிரிகள் தொல்லை நீக்கும் அம்மா திருவடி ஆலயம்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்யும் ஆலயமாக திகழ்கிறது.
தல வரலாறு
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஊரகம் கிராமத்தைச் சேர்ந்த பூமுள்ளி நம்பூதிரி என்பவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனை வழிபடச் சென்றார். அவரது வழிபாட்டில் மனம் மகிழ்ந்த அம்மன், அவர் கொண்டு வந்திருந்த பனை ஓலைக் குடையில் அமர்ந்து கொண்டு அவருடன் சென்றாள். சொந்த ஊருக்குத் திரும்பிய நம்பூதிரி, அந்தக் குடையைத் தனது வீட்டினுள்ளே தரையில் வைத்தார்.
மறுநாள் அவர் வெளியில் செல்லும் போது, வழக்கமாக எடுத்துச் செல்லும் குடையை எடுக்க முயன்றார். ஆனால் அந்தக் குடை, தரையோடு சேர்ந்து மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றியது. பலமுறை முயற்சித்தும், அவரால் அந்தக் குடையைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அதன் பின்பு, அவர் அதை அப்படியே விட்டுவிட்டார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவி, காஞ்சீபுரத்தில் இருந்து குடையில் அமர்ந்து அவருடன் வந்ததாகத் தெரிவித்தாள். மேலும் அன்னையானவள், அந்தக் குடை இருக்கும் இடத்திலேயேக் கோவில் கொள்ள விரும்புவதாகவும், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் தனது உருவச்சிலை இருப்பதாகவும், அதை எடுத்து வந்து, குடை இருக்கும் இடத்தில் நிறுவி கோவில் அமைக்கும்படியும் உத்தரவிட்டாள்.
நம்பூதிரியும் அம்மன் கனவில் சொன்னபடி, கிணற்றில் தேடியபோது அங்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்து குடை இருந்த இடத்தில் நிறுவி, தனது வீட்டைக் கோவிலாக மாற்றியமைத்தார். தனது சொத்துகள் அனைத்தையும் கோவிலுக்குத் தானமாக வழங்கிய அவர், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொச்சி மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அன்று முதல், இந்த ஆலயத்தில் இருக்கும் இறைவி ‘அம்மாதிருவடி’ என்று அழைக்கப்பட்டார் என்பதாக ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு
கேரளாவில் புகழ்பெற்ற 108 துர்க்கை அம்மன் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் கருவறையில் ‘அம்மாதிருவடி’ நின்ற நிலையில் காட்சி தருகிறாள். இந்த அன்னையை ஊரின் பெயரால் ‘ஊரகத்தம்மன்’ என்றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் சாஸ்தா, கணபதி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை திருநாள், பங்குனி மாதத்தில் பதின்மூன்று நாட்கள் நடைபெறும் பூரம் திருவிழா போன்றவை இங்கு முக்கியத் திருவிழாக்களாக இருக்கின்றன. இதில் கார்த்திகை திருநாள் தான் அன்னையின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ‘இல்லம் நிரா’ மற்றும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ‘வாவரத்’ எனப்படும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தேவமேளா எனப்படும் ஆறாட்டுப்புழா பூரம் விழாவில், திருப்பிரையார் ராமர் முன்னிலையில் அணி வகுத்து நிற்கும் தெய்வங்களில், அம்மாதிருவடி முதன்மை தெய்வமாக இருக்கிறாள். இங்கு வந்து அன்னையை வழிபடுபவர்களுக்கு, எதிரிகளின் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரகம் என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
- தேனி மு.சுப்பிரமணி
Related Tags :
Next Story