கண்கண்ட தெய்வம் கதிரவன்


கண்கண்ட தெய்வம் கதிரவன்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:03 AM IST (Updated: 5 Feb 2019 11:03 AM IST)
t-max-icont-min-icon

சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறுவித சமய வழிபாட்டில் சூரியனை கடவுளாக வழிபடுவதற்கு ‘சவுரம்’ என்று பெயர். இந்தியாவில் சூரிய வழிபாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்பட்டு வருகிறது.

சூரியனை உலக முதல்வனாக ‘ஆதித்ய ஹிருதயம்’ நூல் கூறுகிறது. இது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டைப் பற்றி விவரிக்கின்றன. சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் திகழ்வதாக ‘சூரிய அஷ்டகம்’ சொல்கிறது.

காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

உலகெங்கும் சூரியனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும். சிறிய ஆலயம், நவக்கிரகங்களை மட்டுமே தெய்வங்களாகக் கொண்ட கோவில், சூரியனை மூலவராகக் கொண்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு நவக்கிரகங்களும் எட்டு திசைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

காலவ முனிவரை, ஒரு இளம் துறவி சந்தித்தார். அவரிடம் தன் எதிர்காலத்தைக் கேட்டறிந்தார். பின்னர் “அனைவரின் எதிர்காலத்தையும் சொல்லும் நீங்கள், உங்களின் எதிர்காலத்தை எப்போதாவது கணித்ததுண்டா?” என்று கேட்டார்.

திடுக்கிட்ட காலவ முனிவர், “நீ யார்?” என்று கேட்க, வந்தவர் “நான் காலதேவன்” என்று கூறி மறைந்தார். இதனால் தன்னுடைய எதிர்காலத்தை ஆராய்ந்தார் காலவ முனிவர். அதில் முன்வினைப் பயனால், அவருக்கு தொழுநோய் வரும் என்பது தெரிந்தது.

இதையடுத்து முன்வினைப்பயனை தருகின்ற நவக்கிரகங்களை காலவ முனிவர் சரணடைந்தார். விந்தியமலையில் பஞ்சாக்னி வளர்த்து, நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவக்கிரகங்களும் அவரின் முன்பாக தோன்றின. காலவ முனிவர் கேட்ட, தொழுநோய் பீடிக்காத வரத்தையும் அளித்தனர்.

இதையறிந்த பிம்மன், நவக்கிரகங்களை வரவழைத்தார். “சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் செய்த வினைகளின் பயனை அளிக்கவே நீங்கள் என்னால் படைக்கப்பட்டீர்கள். உங்களுக்கு தனித்து இயங்கும் சுதந்திரம் இல்லை. அப்படியிருக்கையில் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் அருளியது தவறு. எனவே நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவு வரை, அதே நோயால் துன்பப்படுவீர்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்டு வருந்திய நவக்கிரகங்களும் பிரம்மனை பணிந்து, விமோசனம் அருள வேண்டி நின்றன. உடனே பிரம்மன், “காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அர்க்க(எருக்கு)வனமான திருமங்கலக்குடி சென்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை, 78 நாட்கள் தவம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதயத்துக்கு முன் எழுந்து, காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட வேண்டும். அன்றைய தினம் ஏழு நாழிகைக்குள் ஒரு எருக்கு இலையை எடுத்து, அதில் பிடி அளவு தயிர் அன்னம் வைத்து உண்ண வேண்டும். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்” என்றார்.

பிரம்மதேவன் சொன்னபடி, அகத்தியரின் வழிகாட்டு தலில், நவக்கிரகங்கள், இறைவன்- இறைவியோடு, விநாயகர் சிலை ஒன்றையும் நிறுவி அந்த வழிபாட்டைச் செய்தனர். 78 நாட்கள் முடிவில் சிவபெருமான் அவர்கள் முன்பாக தோன்றி, “இன்றோடு உங்களின் நோய் முழுவதுமாக குணமடையும். நீங்கள் தவம் இருந்த இடத்தில் உங்களுக்கு தனி ஆலயம் உருவாகும். அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யும் வரத்தை தந்தோம்” என்று அருளினார்.

நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ‘கோள்வினை தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார். தென்னகத்திலேயே சூரியனுக்கென்று தனிக் கோவில் அமைந்த தலம் இது. கருவறை உள்ளே உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் சிவசூரிய பெருமானாக நின்ற கோலத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அங்கிருந்தே குரு பகவானையும தரிசிக்கும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. தவிர தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்ரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.

திருவாவடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 6 மணியில் இருந்து பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

Next Story