மனைவியை தண்டித்த நாயனார்


மனைவியை தண்டித்த நாயனார்
x
தினத்தந்தி 5 Feb 2019 6:14 AM GMT (Updated: 5 Feb 2019 6:14 AM GMT)

வணிகரான கலிகம்ப நாயனார், சிவனின் திருவடி மறவாத சிந்தனையாளர். ஈசனின் மீது பற்று கொண்டு, திருத்தூங்கானைமடம் என்ற ஆலயத்தில் தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்களை தன் இல்லத்திற்கு அழைத்து உயர்தர உணவுகளை படைத்து உபசரிப்பதிலும் முன் நிற்பவர். சிவன் அடியாளர்கள் விருப்பமுற்று எதனைக் கேட்டாலும், இல்லையென்று சொல்லாமல் வழங்குபவர்.

ஒரு முறை தனது இல்லத்திற்கு பல அடியார்களை உணவருந்த கலிகம்ப நாயனார் அழைத்திருந்தார். அதன்படி பல அடியார்கள் அவர் இல்லத்தில் கூடினர். வந்திருந்த அடியார்களுக்கு கலிகம்ப நாயனாரும், அவரது மனைவியும் பாதபூஜை செய்தனர். மனைவி நீர்வார்த்துக் கொடுக்க, அடியார்களின் பாதங்களை கழுவினார் கலிகம்ப நாயனார்.

அங்கு வந்திருந்த அடியாரில் ஒருவர், ஏற்கனவே கலிகம்பரின் வீட்டில் பணிபுரிந்த பணியாள். இதனால் அவருக்கு பாத பூஜை செய்ய, நாயனாரின் மனைவி சற்று யோசித்தார். அடியாருக்கு பாதபூஜை செய் வதற்கு நீரை வார்க்காமல், மனைவி அப்படியே நிற்பதைக் கண்டார் நாயனார். அவருக்கு தன் மனைவியின் மனதில் ஓடும் எண்ணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

அவர் தன் மனைவிடம், “அடியார்களின் முந்தைய நிலையை நினைக்கக்கூடாது. அது பிழையானது. யாராக இருந்தாலும் அவர்கள் அடியார் என்ற சிந்தனையே இருக்க வேண்டும். அவர் வழிபடத் தகுந்தவரே ஆவார். எனவே நீ, அடியாருக்கு நீர் வார்க்காமல் இருப்பது குற்றம்” என்றார்.

சொன்னவர், தன் மனைவியின் பதிலை எதிர்பார்க்காமல், அவரது இரு கரங்களையும் வாள் கொண்டு துண்டித்தார். பின்னர் தாமே அடியாருக்கு நீரை வார்த்து, அவரது திருவடியை தொட்டு பூஜித்தார். வந்திருந்த அடியார்கள் அனைவரும் உணவருந்து வதற்கு, அனைத்தையும் படைத்து உபசரித்தார்.

அடியாருக்கு நீர்வார்க்க யோசித்தவர் மனைவியே ஆனாலும் அவரை தண்டித்த கலிகம்ப நாயனாரின் முன்பாக, ஈசன் தோன்றினார். அவருக்கும், அவரது மனைவிக்கும் அருள்புரிந்து சிவலோக பதவி வழங்கினார்.

Next Story