சொர்க்கத்திற்கு வழிகாட்டும் நன்மை...
எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். ‘பொய் ஒரு குற்றமே அல்ல’ எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.
ஆட்சியாளர் முதல் அடிமட்டக் குடி மகன் வரை, நாடாளும் தலைவர் முதல் நடைபாதை வியாபாரி வரை, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பொய் நீக்கமற நிறைந்து நிற்கிறது.
‘பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது’ என்பதெல்லாம் பொய்யான தகவல் என்பது போன்றும், இதுபோன்ற சொலவடைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் காலம் தள்ள முடியாது என்பது போன்றும் சமூகம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது.
பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. திரைக்காவிய நாயகர்கள் பொய் சொல்கின்றனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பொய் சொல்கின்றனர். அதிகாரத்தை அடைய விரும்புகின்றவர்களும் பொய் சொல்கின்றனர்.
புன்னகையிலும் பொய் ஒளிந்திருக்கிறது, கண்ணீரிலும் பொய் கலந்திருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. பொய்சூழ் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உண்மை மகத்தானது என்பதைக்கூட பொய்யாகவே கூறிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மை என்பது தந்திரமோ மந்திரமோ அல்ல, அதுதான் வாழ்வின் ஆதாரம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த ஆதாரம் தான் ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை. இந்த இறைநம்பிக்கை எவ்வளவு தூரம் மனதில் வலுவாக உள்ளதோ அவ்வளவு தூரம் ஒருவர் உண்மை பேசுவார். நம்பிக்கையின் சதவீதத்தைப் பொறுத்து வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் அவ்வளவுதான்.
உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.
‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பலராலும் கடைப்பிடிக்க முடியாமல் போன வாசகம் என்றும் இதனைக்கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ என்று அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். இதைப் போன்றே பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்படுவார்”. (புகாரி, முஸ்லிம்)
‘இதயங்களின் மருத்துவர்’ என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்.
ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.
அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாகத் திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டுமே அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)
உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதனைத் தூக்க முயற்சித்தது, முடியவில்லை. மீண்டும் தன் படைகளைக் கூட்டிவரச் சென்றது.
முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கித் திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம் முறையும் அது தனது படையை அழைத்துவரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.
அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்.. அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களைத் துண்டித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்துத் துண்டு துண்டாக உடைத்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கை சேதப்பட்டிருக்கும். ஆயினும் காலம் கடந்துவிட்டது.
உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர் களைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.
அவர் சொன்னார்: “அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பானாக, மீண்டும் இவ்வாறு செய்யாதே. பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன். பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்பு களின் உணர்வில் கலந்துள்ளது”.
எறும்புகளுக்குத் தெரிகிறது பொய் சொல்வது கொலைக்குற்றம் போன்ற பெரும் பாவம் என்று. ஆயினும் மனிதர்கள்..? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
நல்லவேளை எறும்பின் குணம் மனிதர் களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால்.. நம்மில் அனேகமானவர்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்.
‘தப்பித்தோம்’ என்று தற்போது வேண்டுமென்றால் கூறிக்கொள்ளலாம். ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கின்றதே.. பொய்யர்களின் நிலை அங்கு என்னவாகுமோ.. யார் அறிவார்..?
Related Tags :
Next Story