சகல தோஷம் போக்கும் தலைவாயில் ஆலயம்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் நகரில் (சென்னைக்கு அருகில்) அமைந்துள்ள, தொன்மையும் புகழும் வாய்ந்த ஆலயம், கற்பகாம்பாள் சமேத கயிலாயநாதர் கோவில்.
புராண காலத்தில், ‘பிருகுதாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட கதம்ப வனத்தில் சிவ தம்பதிகள் தனித் தனியாக அமர்ந்து தவம் புரிந்தனர். சிவனும் பார்வதியும் தவமிருந்த அந்த புண்ணிய இடத்தில் பின்னாளில் வியாசர் உள்ளிட்ட முனிவர்களும் தவமிருந்து பேரின்பம் அடைந்தனர். சிவபெருமான், ரிஷகளின் தவ பூமியாக விளங்கிய அந்த புண்ணிய தலம் ‘மகாதவபுரம்’ என்றும், ‘ஏகதீர சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே மருவி தற்போது மாதவபுரம் என்று வழங்கப்படுகிறது.
புராணப் பெருமை வாய்ந்த இந்த பூமியில், ஈசனுக்கும், பெருமாளுக்கும் ஆலயம் நிர்மாணிக்கும் பேறு பெற்றவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவன். இந்த மன்னன் மாமல்லபுரம் என்ற சிறப்புமிக்க கோவில்களை தோற்றுவித்த பல்லவ சக்கரவர்த்தியான, நரசிம்மப் பல்லவனின் வழி வந்தவன். அந்த காலத்தில் கொள்ளை கூட்டம் ஒன்று, இந்தப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை அடக்க திக்விஜயம் புறப்பட்டான், இரண்டாம் நந்திவர்மன்.
சோலைவனமாக இருந்த இந்தப் பகுதியில் மன்னன் தங்கினான். அப்போது திறந்த வெளியில் இருந்த ரிஷிகள் வழிபட்ட சிவலிங்கத்தை தானும் பூஜித்து, கொள்ளையர் கூட்டத்தை விரட்டியடித்தான். பின்னர் ரிஷிகள் வழிபட்ட அந்த மரகத லிங்கத்தை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தான். குலதெய்வமாகிய கயிலாயநாதர் கட்டளைப்படியே, மகாதவபுரத்தில் கற்கோவில் கட்டியதாக, இரண்டாம் நந்திவர்மன் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
கல் திருப்பணி ரீதியாக 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். பல்லவர் காலக் கோவில் என்பதற்குச் சான்றாக, அமர்ந்த நிலையில் உள்ள சிங்கங்கள் துவார பாலகர்களாக (குந்து சிங்கம்) கல் தூண்களில் உள்ளன. தற்போதும் இந்த சிங்கமுக துவார பாலகர்களை, ஆலயத்தின் தெற்கு வாசல் அருகே, அம்பாள் சன்னிதி எதிரில் காணலாம். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு வந்தவர்கள் மனித துவார பாலகர்களை அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாதவரம் நகரில் கிழக்கு நோக்கி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூலவராக இருக்கும் மரகத சிவலிங்கம், 4½ அடி உயரமும், 11¼ அடிச் சுற்றளவும் கொண்டதாக வட்ட வடிவ பீடத்துடன் இருக்கிறது. கயிலாயநாதருக்கு இடப்புறம் தெற்கு நோக்கிய சன்னிதியில் எழில் கோலத்துடன் கற்பகாம்பாள் வீற்றிருக்கிறார். இங்கு 12 ஜோதிர்லிங்கங்களும் தனித்தனி சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. காசிவிஸ்வநாதர், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உள்ளன.
இங்கு, பிரதோஷ நாளில் மரகத லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இருந்து ஒரு ஜோதி வெளிப்படுவதாக சொல் கிறார்கள். இதனைக் காணும் ஆவலிலேயே இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். கயிலாயநாதரை பிரதோஷ நாளில் வணங்கினால், காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக அமரும் யோகத்தையும் தரவல்லவர் மாதவரம் கயிலாயநாதர்.
கயிலையம்பதி, தம் மனைவியுடன் தவம்புரிந்த இந்த திருத்தலத்தில் சிவனை வழிபடும் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் விரைந்து கிடைக்கும். பேச்சு இழந்த குழந்தைகளுக்கு பேசும் திறன் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மாதவரம் கயிலாயநாதர் திருத்தலம் ‘தலை வாயில் கோவில்’ எனவும், புழல் பகுதியில் உள்ள சிவாலயம் ‘நடுவாயில் கோவில்’ எனவும், திருமுல்லைவாயிலில் உள்ள சிவாலயம் ‘கடைவாயில் கோவில்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வெகுசிறப்பு.
மாதவரம் கயிலாயநாதர் கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
Related Tags :
Next Story