வருத்தங்கள் போக்கும் வடிவுடையம்மன்


வருத்தங்கள் போக்கும் வடிவுடையம்மன்
x
தினத்தந்தி 12 Feb 2019 12:08 PM GMT (Updated: 12 Feb 2019 12:08 PM GMT)

திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல்.

திருவானைக்காவலில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.

இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.

அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.

கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.

இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.

இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன். கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.

சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது.

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.

இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள். ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது.

-ஜெயவண்ணன் 

Next Story