ஆயிரம் தீப்பந்தம் ஏந்தும் பொன்காளியம்மன் விழா


ஆயிரம் தீப்பந்தம் ஏந்தும் பொன்காளியம்மன் விழா
x
தினத்தந்தி 19 Feb 2019 10:49 AM GMT (Updated: 19 Feb 2019 10:49 AM GMT)

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள்.

இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பூத மண்டபம், நிருத்த மண்டபம், ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர், மாதேஸ்வரன், வண்ணார கருப்பணன் சாமி, பரிவார மூர்த்திகள், பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு-கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது.

கொங்குநாட்டில் உள்ள கூறைகுல, விளையன் குல, கொங்கு வேளாளர்களின் குலதெய்வமாக இந்த பொன்காளியம்மன் திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி மாதம், அமாவாசை முடிந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது. பொன்காளி அம்மனின் உற்சவரை, சிவகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இருந்து அழைத்து வந்து, உற்சவத் திருவிழா நடத்துவார்கள்.

உற்சவக் காலங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், கிராமத்தை அமைதிப்படுத்துவதே ‘கிராம சாந்தி’ ஆகும். விழா யாவும் மங்களகரமாக, நிறைவுடன் நடப்பதற்காகவும், தெய்வங்கள் கிராமத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டியும் தெய்வங்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் குலகுரு காப்பு அணிவிப்பார்.

காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், பச்சை விரதம், அம்மனை அழைத்து வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். முப்பாட்டு பேழையை அலங்காரம் செய்து பச்சை மாவை விளக்காக வைத்து, பசுநெய் விட்டு திரிபோட்டு தீபம் ஏற்றுவார்கள். இத்தீபத்திற்கு ‘முப்பாட்டு மாவிளக்கு’ என்று பெயர். பேழை மூடியை சிவப்பு வண்ணத்துணி கொண்டு போர்த்தி, இதில் அம்மன் பூஜைக்குத் தேவையான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர், தென்னம்பாளை ஆகியவை வைத்து பூவில் அலங்காரம் செய்வார்கள். இதற்கு ‘படைக்களம்’ என்று பெயர்.

மதுரை பாளையக்காரர் ஆட்சிக்கு முன்பு இருந்தே, இத்திருக்கோவிலின் ஆகம கிரியா பாரம்பரிய மிராசுப்படி, சிவகிரி ஆதீனமாக இருப்பவர்கள் உற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள். அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை சிம்ம வாகனத்தின் பின்புறம், இரண்டு குதிரை துள்ளல் பிடிப்பார்கள். ஒன்று கூறைகுலத்தாரும், மற்றொன்றை விளையன் குலத்தாரும் பிடிப்பார்கள். இரண்டு குதிரையும் தலை அசைத்ததும் தேர்த்திருவிழா தொடங்கும். ‘மூணே முக்கால் நாழிகையில் நாலே முக்கால் தேர்’ என்ற பழமொழியுடன் அமைந்தது தேர்த் திருவிழா. மூணே முக்கால் என்பது கால அளவையும், நாலே முக்கால் என்பது தேரின் உயர அளவையும் குறிக்கும்.

தேர் புறப்படும் முன்னர் லட்சக் கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தம் ஏந்தி தேருடன் பவனி வருவார்கள். தேரில் கூறைகுல, விளையன்குல குலகுரு சிவகிரி ஆதீனம், பொன்காளி அம்மனுடன் தேரில் அமர்ந்து வருவார். குல தெய்வத்தையும், குல குருவையும் ஒருங்கே தரிசனம் செய்யும் வாய்ப்பும் அருளாசியும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும். ஏந்தி செல்லும் தீப்பந்தங்கள், தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் காட்சி தரும். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.

தேர்த் திருவிழா முடிந்தவுடன், காவல்தெய்வம் வண்ணாரக் கருப் பணன் சுவாமிக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். விழா யாவும் மங்கள நிறைவு பெற்றதை முன்னிட்டு பக்தர்கள் மஞ்சள் நீராடல் நடத்துவார்கள். திருவிழாவின் போது மட்டும் அம்மனுக்கு வெண்பட்டு ஆடையை அணிவிப்பார்கள். திருக்கோவிலின் முன்பு பாம்பாட்டி சித்தர் உருவம் உள்ளது. இதில் பல்லி சகுனம் சொல்லும். திருக்கோவிலில் பூச் சகுனம் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. திருவிழா காலங்களில் இந்த சகுனங்கள் பார்ப்பது இல்லை.

பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், திரு மணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குவதில் இந்த அன்னைக்கு நிகர் அவள் தான்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர். ஈரோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் சிவகிரி அமைந்துள்ளது.

- சிவகிரி ஆதீனம்

Next Story