மாண்டவி


மாண்டவி
x
தினத்தந்தி 19 Feb 2019 11:26 AM GMT (Updated: 19 Feb 2019 11:26 AM GMT)

இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வரு கிறோம். அந்த வகையில் இந்த வாரம் பரதனின் மனைவியான மாண்டவியைப் பற்றிப் பார்ப்போம்.

கணவன் மேல் மரியாதை இருந்தாலும்
இதமாக அவனுக்கு தர்மத்தைப் போதித்தவள்.
அன்பும், சேவையும் மட்டுமே
ராமனுக்குப் பிடித்த விஷயங்கள்,
யாரையும் வெறுக்க மாட்டார் என்று உணர்ந்தவள்

“தாங்கள் செய்வது தங்கள் தமையனாருக்குப் பிரியமானதா அரசே?”

ஸ்ரீ ராமனின் பாதுகைகளுக்கு பூஜை செய்து விட்டு, அதன் கீழ் அமர்ந்த பரதன் தன் மனைவியை வியப்போடு பார்த்தான்.

தன்னுடன் இயல்பாகப் பேசும் மாண்டவியின் குரலில் இன்று சில மாற்றம்.

திருமணம் முடிந்த அன்றே பரதன் தன் மனைவி மாண்டவியிடம் சொல்லி விட்டான். “மாண்டவி! நமக்குள் கணவன் - மனைவி என்பதை விட, நாம் நல்ல நண்பர்கள். நட்பைப் பகிர்ந்து கொள்வோம். ஒரு நண்பனுடன் பேசுவது போல் நீ தாராளமாக என்னுடன் பேசலாம். மரியாதை என்பதை விட அன்பே நமக்குள் நிறைந்து இருக்க வேண்டும். நீ என் தோழி.”

அந்த நிமிடமே, மாண்டவி தன் கணவனை தன் மனம் முழுவதும் நிறைத்துக் கொண்டு விட்டாள். ‘மனைவியைத் தோழியாக நினைப்பவன், எந்தக் காலத்திலும் அவளை மரியாதைக் குறைவாக நினைக்கவோ, நடத்தவோ மாட்டான். அவள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவான்’ என்று நம்பினாள்.

அரச பதவியை உதறி, அண்ணன் ராமனை அயோத்தி அழைத்து வர புறப்பட்டான் பரதன். அப்போது கூட தன் மனைவிடம் அதை தெரிவிக்கவே செய்தான்.

“தேவி! நான் அண்ணனை அழைத்து வரச் செல் கிறேன். இந்த அரச பதவிக்குத் தகுதியானவர் அவர் தான். சிங்கம் இருக்கும் இடத்தில் சிறு முயல் இருக்கக் கூடாது. அண்ணன் இல்லாமல் நான் அயோத்தி திரும்ப மாட்டேன். என் மனைவி நீ. என் இன்ப துன்பங்கள் அனைத்திலும் சம பங்கு உடையவள் நீ. உன் கருத்தை அறியவும் விரும்பு கிறேன்.” பரதன் தன்னை மதித்து கேட்டதே மாண்டவிக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

“அரசே! நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் உடன்படுகிறேன். முன்பை விடவும் இன்னும் நெருக்கமாகி விட்டீர்கள் என் இதயத்திற்கு” மகிழ்ச்சியுடன் கூறினாள் மாண்டவி.

ஆனால் ‘தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, வனவாசம் சென்றே தீருவேன்’ என்று ராமன் அயோத்தி வர மறுத்து விட்டார். எனவே அவரின் பாதுகைகளைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ராமனின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய் கிறான் பரதன்.

“ராமன் இல்லாமல் அயோத்திக்குள் நுழைய மாட்டேன்” என்ற உறுதியுடன், அதன் எல்லையில் நந்தி கிராமத்தில் அமர்ந்து நிர்வாகத்தைக் கவனிக்கிறான் பரதன். தமையன் மீதான பக்தியும், சத்தியம், நேர்மை என்று அறவழியில் தர்மம் மீறாமல் நடக்கும் தன் கணவன் குறித்து ஒரு ரகசிய கர்வமும், பெருமிதமும் மாண்டவியிடம் உண்டு.

எல்லா விஷயங்களிலும் உயர்ந்து நிற்கும் தன் கணவன், இன்னும் சில விஷயங்களில் தன் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

“சொல் மாண்டவி” பிரியமுடன் கேட்டான் பரதன்.

‘எப்படிச் சொல்வது?, “நீங்கள் உங்கள் தாயை வெறுப்பது தவறு” என்று இவரிடம் எப்படிச் சொல்வது?.’ கை கேயியை தன் அன்னை இல்லை என்று கூறி இந்த நிமிடம் வரை பரதன் ஏற்கவில்லை. மகனின் வெறுப்பில் மனம் நொந்து போய் இருக்கும் அவரின் வேதனையைத் தீர்க்க வேண்டியது தன் கடமை என்று நினைத்தாள் மாண்டவி.

“அரசே தங்களின் கருத்துக்கு மாறாக நான் பேசுவதை மன்னிக்கவும். தங்கள் தாயை நீங்கள் வெறுப்பது சரியா?”

பரதன் அமைதியானான். மனம் கைகேயியின் செயலால் நடந்த விபரீதங்களை எண்ணிப் பார்த்தது. தந்தை இறந்து, தமையன் காட்டுக்குச் செல்ல காரணமான அவளை வெறுத்தான். “நான் உன் மகனே அல்ல” என்று வெளியேறி, இன்று வரை அவளைச் சந்திக்கவில்லை. பரதனின் நினைவலைகளை மாண்டவியின் குரல் மீட்டெடுத்தது.

“நீங்கள் ஸ்ரீராமரின் தம்பி. அந்த உத்தமமான மகான், மற்றவர்களை வெறுப்பதை விரும்புவாரா? அன்பு, கருணை, கனிவுக்கு இருப்பிடமான அவர், தாயை வெறுக்கும் உங்கள் செயலை ஏற்றுக்கொள்வாரா? யோசியுங்கள். அனைத்து ஜீவன்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறார். அப்படியானால் அன்னையை வெறுப்பது, அந்த இறைவனையே வெறுப்பது போல் ஆகாதா?. எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கான காரணம் என்ன என்று யோசியுங்கள் அரசே.”

“எனில் என் தாய் கேட்ட வரம் நியாயம் என்கிறாயா?” பரதனின் வார்த்தையில் கொஞ்சம் கடுமையும் கலந்திருந்தது.

“அல்ல. அதன் பின்னணியில் ஏதேனும் காரணம் உண்டா என்று ஆலோசியுங்கள் என்கிறேன். ஒரு தாய் என்ற முறையில், தன் மகன் அரசாள வேண்டும் என்ற அவரது ஆசை நியாயமானது. ஆனால் ராமனை, உங்களை விடவும் மேலாகப் போற்றி வளர்த்தவர் அவர். உங்களுக்கு, ராமனை தந்தையின் ஸ்தானத்தில் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர். தமையன் மேல் மதிப்பும், மரியாதையும் செலுத்தி அவரின் அடிச்சுவடாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தவர். அந்த தாய் தான் உங்களின் முதல் ஆசிரியர். அவர் இப்படி நடப்பாரா?, அப்படி நடந்து கொண்டார் என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசிப்பதை விட்டு விட்டு, அவரை இப்படி வெறுத்து ஒதுக்கி, விலகி இருப்பது நியாயமா? என்று தான் கேட்கிறேன்.”

பரதன் அவளை உற்று நோக்கினான்.

“அரசே! சமீபத்தில் ஒரு மகரிஷியைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கூறியது, ‘நம் அயோத்தியின் நிலை சரியில்லை. இதைச் சுற்றிச் சூழ்ந்துள்ள கிரகங்கள் தீமை செய்யும் விதத்தில் அமைந்துள்ளன. இப்போது அதன் சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் மரணம் நேரும்’ என்று தெரிவித்தார்.

அதை உணர்ந்து கூட, தங்களின் தாயார் இப்படியொரு வரம் கேட்டிருக்கலாம் அல்லவா? தன் கணவர் இறந்தாலும் பரவாயில்லை, ஸ்ரீராமன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டிருக்கலாம் அல்லவா?. கற்றறிந்த மாமேதை. கலைவாணியின் அம்சம். ஸ்ரீராமரின் மேல் அளவற்ற பிரியம் வைத்திருப்பவர். அவர் தவறுதலாக நடப்பார் என்று நம்புகிறீர்களா?”

இதமாகப் பேசிய மனைவியை வியப்புடன் பார்த்தான் பரதன்.

“உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் தாய் என்பவள், இறைவனை விட மேலானவள். தன் உதிரம் தந்து, உயிர் சுமந்து நம்மைப் பெற் றெடுக்கும் தெய்வம். அவள் மனம் நோக நடப்பவர்களுக்கு எந்தப் பிறவியிலும் மன்னிப்பு கிடையாது. தாயின் பாதமே சொர்க்கம் என்று வேதங்கள் சொல்கிறது.”

“மிகச் சரியாகச் சொன்னாய் மாண்டவி. என் அண்ணன் ராமனும் கூட, என் தாயாரை ‘அன்னையே’ என்று தான் அழைத்து வணங்கினார். அவர் மனதில் யார் மீதும், வெறுப்பும், வருத்தமும் இருந்தது இல்லை. நானும் அதையே தான் பின்பற்றுகிறேன். அண்ணன் திரும்பும் வரை அயோத்திக்குள் வர மாட்டேன் என்று சபதம் செய்திருப்பதால், நான் இப்போது அமைதி காக்கிறேன். அண்ணனின் நலம் கருதியே அந்த இரண்டு வரங்கள் கேட்கப்பட்டது என்று நான் அறிவேன். இந்த அவதாரத்திற்கான நோக்கம் பூர்த்தியாகி, அண்ணன் அயோத்தி திரும்பியதும் நான் அன்னையைக் கண்டு வணங்குவேன். அன்னையே தெய்வம் என்று நான் அறிவேன்.”

மிக்க நன்றி அரசே. எனில் தங்கள் அன்னைக்குப் பணிவிடை செய்ய தங்கள் அனுமதி வேண்டும்.”

“நல்லது செய்ய என் அனுமதி என்றும் உண்டு மாண்டவி. செல்! என் அன்னையர் மூவருக்கும் நீ பணிவிடை செய்.” உத்தரவு தந்தான் பரதன்.

மகிழ்ச்சியுடன் அவனை வணங்கி அயோத்தி செல்லும் மாண்டவி, முகம் கோணாமல் தன் மாமியார்கள் மூவரையும் அன்னையாகப் பாவித்துப் பணிவிடை செய்கிறாள்.

“மாமியார் என்பதை விட, மகனைப் பிரிந்து வேதனையில் தவிக்கும் அந்த உள்ளத்திற்கு ஆறுதல் தர வேண்டியது என் கடமை. எந்த ஒரு மனித உறவிற்கும் அத்தியாவசியத் தேவை மனிதாபிமானம்” என்று நினைத்த மாண்டவி, பெண்களுக்கு ஒரு உதாரணம்.

-தொடரும்

Next Story