குழந்தை வரம் அருளும் கருவளர்சேரி


குழந்தை வரம் அருளும் கருவளர்சேரி
x
தினத்தந்தி 26 March 2019 10:46 AM GMT (Updated: 2019-03-26T16:16:15+05:30)

ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது எங்கு முழுமை பெறுகிறது? கல்வி கற்பதிலா?, செல்வம் சேர்ப்பதிலா?, அல்லது திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கையை நடத்துவதிலா?. இவை எதிலுமே இல்லை.

ஒருவர் தன்னுடைய மண வாழ்க்கையை மேற்கொண்டு அதன் பயனாக குழந்தைச் செல்வத்தைப் பெறும் போதுதான், அவரது வாழ்க்கை முழுமை அடைகிறது.

எவ்வளவு பணம் இருந்தால் என்ன.. ஒரு மழலை விளையாடாத வீடு நிச்சயமாக வெறுமையாகத்தான் இருக்கும். குழந்தைச் செல்வம் என்பது அற்புதமான வரம். இறைவன் அருளும் பாக்கியம். ஆணும் பெண்ணும் திருமணமாகி சந்தான பாக்கியம் பெறும்போது, தாய் தந்தை எனும் பதவியைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் முக்கியமான இடத்தை வந்தடைகின்றனர்.

சில பெண்களுக்கு சில காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் அடையாமல் ஏங்குவோரும் உண்டு. அனைத்து உயிருக்கும் அன்னையாய் இருக்கும் அம்பிகையின் அருளாசி மூலம் அந்த குழந்தை பாக்கியத்தை வழங்கும் அற்புதமான திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளது. அப்படிப்பட்ட திருத்தலங்களில் முதன்மையானது அன்னை அகிலாண்டேஸ்வரி அருளாட்சி செய்யும் கருவளர்ச்சேரி ஆகும்.

சகல உயிர்களுக்கும் அன்னையான அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அகிலாண்டேஸ்வரி’ தாயாக அருள்பாலிக்கிறாள். இங்கு இறைவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் அருள் வழங்குகிறார்.

கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு உடல்ரீதியான தோஷங்கள் விலகும். மேலும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். அதனாலேயே இந்த தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர்.

திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், வளையல் ஆகியவற்றை வேண்டுதல் பொருளாக சமர்ப்பிப்பதையும் காணமுடிகிறது.

கருவின் வளர்ச்சிக்கு அருள் புரியும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து கருவளர்ச்சேரி உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.

அன்னையை வணங்குவோம்.. அழகு மழலை ஒன்றை பெற்று வாழ்வில் குறைகள் நீங்கி வாழ்வோம்.

அறந்தாங்கி சங்கர்

Next Story