சகல யோகங்களையும் வழங்கும் விகாரி வருடப் பலன்கள்


சகல யோகங்களையும் வழங்கும் விகாரி வருடப் பலன்கள்
x
தினத்தந்தி 1 April 2019 6:34 AM GMT (Updated: 2019-04-01T12:04:52+05:30)

சுபஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு, சர லக்னமான கடக லக்னத்தில், சூரிய ஓரையில், ஆயில்ய நட்சத்திரத்தில், கடக ராசியில் பிறக்கின்றது.

லக்னாதிபதி சந்திரன் பலம்பெற்று லக்னத்திலேயே இருக்கின்றார். தனாதிபதி சூரியன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகின்றார். சகட யோக அமைப்போடும், சந்திரா ராசிக்கு யோகம் தரும் கிரகமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கும்  கிரக நிலையோடும், சகல யோகங்களையும் வழங்கப்போகும் விகாரிப் புத்தாண்டு பிறக்கிறது.

கிரகங்களின் சஞ்சாரங்கள்

இந்த விகாரி ஆண்டில் தொடக்க நாளிலேயே குரு பகவான் அதிசார கதியில் தனுசு ராசியில் சஞ்சரிக்கின்றார். 18.5.2019 முதல் மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து 7.8.2019 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். அதன்பிறகு குருபகவான் வக்ர நிவர்த்தியாகி 27.10.2019 வரை விருச்சிக ராசிக்குள்ளேயே உலா வருகின்றார்.

28.10.2019-ல் முறையான குருப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. அப்பொழுது தனுசு ராசிக்கு செல்லும் குரு பகவான் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று ராசிகளையும் பார்த்துப் புனிதப்படுத்துகின்றார். விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு நன்மையையே வழங்கும்.

விருச்சிகத்தில் குரு வீற்றிருக்கும் பொழுது ரிஷபம், கடகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளையும் பார்க்கின்றார். மேற்கண்ட 7 ராசிக்காரர்களுக்கும் விகாரி ஆண்டு அதிக வெற்றி வாய்ப்புகளை வழங்கும். செல்வ விருத்தியும், செல்வாக்கும் உயரும்.

சனி-செவ்வாய் பார்வை

இந்த விகாரி தமிழ்ப்புத்தாண்டில் 14.4.2019 முதல் 23.6.2019 வரை சனி, செவ்வாய் பார்வை உள்ளது. ரிஷபத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுதும், மிதுனத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுதும் இந்தப் பார்வை உருவாகின்றது.

8.5.2019 முதல் 3.9.2019 வரையிலும் தனுசு ராசியில் சனி வக்ரம் பெறுகின்றார்.

27.3.2020 முதல் 13.4.2020 வரை மகரத்தில் குரு நீச்சம் பெறுகின்றார். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து இந்தப்புத்தகத்தில் ஆண்டு பலன் எழுதப்பட்டுள்ளது.

முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை, கிரக பார்வை காலங்களில் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்பு வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

இந்த ஆண்டு கிரக நிலைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ராஜாவாக சனியும், மந்திரியாக சூரியனும், அர்க்காதிபதியாக சனியும், மேகாதிபதியாக சனியும், ஸஸ்யாதிபதியாக புதனும், சேனாதிபதியாக சனியும், இரஸாதிபதியாக சுக்ரனும், தான்யாதிபதியாக சந்திரனும், நீரஸாதிபதியாக புதனும், பசுநாயகராக கோபாலனுமாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அதைப் பொறுத்து மக்களுக்கு நல்ல வழி பிறக்கும்.

அரசியலில் அதிரடி மாற்றம்

சித்திரை மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய ஓரையில் ராஜகிரகமான சூரியனுடைய ஆதிக்கத்தில் பிறப்பதால் அரசாங்கம் பல நல்ல திட்டங்களை வழங்கும். அதை மக்கள் ஏற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

ராஜாவாக சனியும், மந்திரியாகச் சூரியனும் இருப்பதால் இந்தப் புத்தாண்டில் அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.

அரசியல் களம் சூடுபிடிக்கும். எதையும் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், சேனாதிபதியாகவும் சனி இருப்பதால் மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் உண்டு.

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருக்கின்றதே என்று மக்கள் நினைக்கலாம். இருப்பினும் நல்லாட்சி அமையும் விதம் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் குரு வழி வகுத்துக் கொடுப்பார்.

அரசியல்வாதிகளுக்கு ஒருவித பயஉணர்வு ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய முடியாத சூழ்நிலையும், தொண்டர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டிய நிர்ப்பந்தமும் அதிகரிக்கும்.

இயற்கை சீற்றங்கள்

சனி செவ்வாய் பார்வை காலங்களில் அரசியல் களத்தில் போராட்டங்களும், இயற்கை சீற்றங்களால் கொந் தளிப்புகளும் காணப்படும். நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு நீதிமன்றத் தீர்ப்புகள் கடுமையாக இருக்கும். வன்முறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிகப் பிரயாசை எடுக்கும் சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உஷ்ணாதிக்க நோய்கள், நூதன நோய்கள் ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்த மருத்துவத்துறை எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

பள்ளி, கல்லூரிகளில் புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகமாகும். இதனால் மாணவச் செல்வங்களின் கல்வித்தரம் உயரும். அயல்நாட்டு ஒத்துழைப்புடன் மத்திய அரசு புதிய திட்டங்களைத் தீட்டி மக்களுக்கு நல்ல சேவை செய்யும்.

தங்கம் விலை உயரும்

இரும்பு, இயந்திரப் பொருட்கள், கட்டிட உபயோகப் பொருட்கள் விலை உயரும். தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்லும். பெட்ரோல், டீசல் விலை மற்றும் எரிவாயுவின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பத்திரிகைதுறை, கலைத்துறை, மருத்துவத்துறை போன்ற துறைகள் வெற்றிநடை போடும். மத்திய, மாநில அரசுகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு கடனுதவி கிடைத்து அதன்மூலம் மக்கள் தொழிலை விரிவு செய்து கொள்ள இயலும். மக்களுக்கு பக்திமார்க்க ஈடுபாடு அதிகரிக்கும்.

தான்யாதிபதியாக சந்திரன் இருப்பதால் தானிய அபிவிருத்தி, தாதுப்பொருட்களின் விருத்தி ஏற்படும். மளிகை, காய்கறி, கனிவகை, தானியம் போன்றவற்றின் விலை குறையும். பூக்களின் விலை உயரும்.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலும், திறனும் மக்களுக்கு உருவாகும். தெய்வ வழிபாடுகளின் மூலம் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த ஆண்டு வழிகாட்டும் என்று நம்பலாம்.

சுபம்

விகாரி வருட வெண்பா பாடல்

தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது:

பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்
பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்.

இதன் பொருள்:

விகாரி வருடத்தில் மழை குறைவினால் குளம், கிணறு, ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறையும். அதனால் பயிர் விளைச்சல் குறையும். வேளாண்மை திருப்திகரமாக இருக்காது. நட்புக் குறைவு ஏற்படும். ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதில் பயம் அதிகம் உண்டாகும். பற்றாக்குறை அதிகரிப்பினால் நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தையர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை உருவாகும்.

Next Story