பைபிள் கூறும் வரலாறு: லேவியர்
விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற, அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம்.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு, இந்த நூலிலுள்ள பெரும்பாலான செய்திகள் ஏற்கனவே அரசர்கள் முதல் நூல், அரசர்கள் இரண்டாம் நூல் இவற்றில் வாசித்தவையே.
குறிப்பேடு நூலின் காலம் அரசர்களின் காலத்துக்கு முன்பு தொடங்கி, அரசர்களின் காலத்துக்குப் பின்பு நிறைவடைகிறது. பழைய எபிரேய நூலில் அரசர்கள் நூல் இறைவாக்கினர் வரிசையிலும், குறிப்பேடு நூல் வரலாற்று வரிசையிலும் வருவதால் இரண்டு விதமான பதிவுகள் ஏற்பட்டிருக்கின்றன எனலாம்.
குறிப்பேடுகள் நூல் காலத்தால் பிந்தையது. அரசர்கள், சாமுவேல் நூல்கள் நிகழ்வு களை ஒட்டி எழுதப்பட்டவை. ஆனால் குறிப்பேடுகள் நீண்ட காலத்துக்குப் பின் எழுதப்பட்டவை.
அரசர்கள் நூல் வட நாடான இஸ்ரேலையும், தென் நாடான யூதாவையும் கலந்து பேசியது. ஆனால் குறிப்பேடுகள் தென்நாடான யூதா நாட்டு மன்னர்களின் வரலாற்றையே பேசுகிறது. அதாவது தாவீது மன்னனையும், அவனது வழித்தோன்றல்களையும் தவிர எதையும் குறிப்பேடுகள் குறித்து வைக்கவில்லை. இந்த இரண்டு நூல்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடாய் இதைக் கொள்ளலாம்.
அரசர்கள் மற்றும் சாமுவேல் நூல்களை விட குறிப்பேடுகள் நூல் ஆன்மிகப் பார்வையில் ஆழமாக இருக்கிறது. சிதைந்த நகரைக் கட்டியெழுப்பும் சிந்தனையும், செயல்பாடுகளும் குறிப்பேடுகளின் நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அரசர்கள் நூலின் பார்வை இறைவாக்கினர் பார்வை என்று வைத்துக் கொள்ளலாம். மன்னர்களின் பிழையும் மக்களின் பிழையும் அதனால் விளையும் தண்டனைகளும் என அந்த நூல் பயணிக்கிறது. குறிப்பேடுகளை குருக்களின் பார்வை எனலாம்.
ஆலயம் சார்ந்த, இறை சார்ந்த, குணாதிசயம் சார்ந்த விஷயங்களே இங்கே முக்கியப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, தாவீது மன்னன் கடவுளின் பேழையைக் கொண்டு வருவதையும், மக்களின் உற்சாகத்தையும் இந்த நூல் பேசுகிறது. எப்படி தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்துக்காக திட்டமிட்டார், எப்படியெல்லாம் பொருட்களைச் சேகரித்தார் போன்றவை எல்லாம் இந்த குறிப்பேடுகள் நூலில் தான் எழுதப்பட்டுள்ளன.
தாவீதுக்குப் பின் சாலமோன் மன்னன் ஆலயத்தைக் கட்டுகின்ற நிகழ்வுகளும் குறிப்பேடுகளில் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலமோன் மன்னனைப் பற்றி எழுதப்பட்டுள்ளவற்றில் முக்கால்வாசி பகுதியில் ஆலயம் சார்ந்த விஷயமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.
இன்னொரு சுவாரசியம், குறிப்பேடுகள் அரசர்களின் நல்ல பண்புகளை முன்னிலைப்படுத்த முயல்வது தான். சவுல் மன்னனை குறிப்பேடுகள் அப்படியே ஒதுக்கியிருப்பது இதனால் தான்.
சவுல் மன்னனின் இறப்பு, தாவீது மன்னனின் அறிமுகத்துக்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது மன்னனின் வாழ்க்கையை விரிவாகப் பேசும் குறிப்பேடுகள் அவருடைய எதிர் விஷயங்களை முழுமையாக விலக்கியிருக்கிறது.
உதாரணமாக, சவுல் மன்னனுடனான தாவீதின் போராட்டம் குறிப்பேடுகளில் இல்லை. தாவீது மன்னனின் வாழ்வின் முக்கியமான கறையான பத்சேபாவுடனான நிகழ்வுகள் குறிப்பேட்டில் இல்லை.
இந்த பின்னணி நமக்கு குறிப்பேடு களுக்கும், அரசர்கள் நூலுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்குகிறது. குறிப்பேடுகள் நூல் மொத்தம் எட்டு மன்னர்களைப் பற்றி பேசுகிறது. தாவீது, சாலமோன், ஆசா, யோசபாத்து, யோராம், யோவாஸ், எசேக்கியா மற்றும் யோசியா ஆகியோரே அந்த மன்னர்கள்.
இதில் யோராம் மட்டுமே மோசமான மன்னன். இவர்களைத் தவிர யூதாவில் ஆண்ட மிக மோசமான பன்னிரண்டு மன்னர் களைப் பற்றி குறிப்பேடுகள் கண்டுகொள்ளவில்லை.
‘குறிப்பேடுகள்’ எனும் வார்த்தைக்கு ‘இந்த நாளின் நிகழ்வுகள்’ என்று பொருள். இந்த நூலை எழுதியது இறைவாக்கினர் எஸ்ராவாகவோ, அவரைச் சார்ந்த ஒருவராகவோ இருக்கலாம் என்பது மரபுச் செய்தி.
கி.மு. 450-க்கும் கி.மு. 430-க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். 29 அதிகாரங்களும், 941 வசனங்களும், 20 ஆயிரத்து 369 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.
இந்த நூலும் மூல மொழியான எபிரேயத்தில் ஒரே நூலாக இருந்து கிரேக்க மொழிபெயர்ப்பின் போது இரண்டாகப் பிரிக்கப்பட்டது தான். முதல் ஒன்பது அதிகாரங்களில் உள்ள தலைமுறை அட்டவணை ஆதாம் முதல் தாவீது வரை விரிகிறது. அடுத்த இருபது அதிகாரங்கள் தாவீது மன்னனின் முப்பத்து மூன்று ஆண்டு கால ஆட்சியைப் பேசுகிறது.
பாபிலோனிலிருந்து மக்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பும் நம்பிக்கையின் நூலாக குறிப்பேடுகள் நூல் இருக்கிறது. எஸ்ரா ஒரு கூட்டம் மக்களை கொண்டு வருகிறார். அவர் ஒரு ஆன்மிகத் தலை வராய் மட்டுமின்றி, அரசியல் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்கிறது விவிலியம்.
இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழவேண்டும் எனும் சிந்தனையையும், வாழ்வில் அனைத்திற்கும் முதன்மையாய் இறைவனே இருக்கவேண்டும் எனும் புரிதலையும் இந்த நூல் தருகிறது.
(தொடரும்)
Related Tags :
Next Story