திருமண வரம் தரும் கேரளத்து திருமணஞ்சேரி


உமா மகேசுவர சுவாமி; கோவில் தோற்றம்
x
உமா மகேசுவர சுவாமி; கோவில் தோற்றம்
தினத்தந்தி 2 April 2019 7:14 AM GMT (Updated: 2 April 2019 7:14 AM GMT)

திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப் பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.

தல வரலாறு

கயிலாயத்தில் இருந்து சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதியில் இருக்கும் அகத்திய மலைக்கு வான்வழியாக வந்து கொண்டிருந்தனர். பூவுலகை ரசித்துக் கொண்டே வந்த இறைவி, வழியில் ஓரிடத்தில் இருந்த இயற்கையின் அழகைக் கண்டு மனம் மயங்கினாள். பார்வதிதேவிக்கு சிறிது நேரமாவது, அங்கு தங்கிச் செல்ல வேண்டுமென்று தோன்றியது. இறைவியின் விருப்பத்தை அறிந்த சிவபெருமான், அவளோடு வானில் இருந்து கீழே இறங்கினார். இருவரும் அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் தங்கினர்.

பிற்காலத்தில் அந்த இடத்தின் அருகே சிற்பி ஒருவர் குடியிருந்தார். அவரது கனவில் தோன்றிய இறைவன், ஆலமரத்தடியில் தானும் இறைவியும் இருப்பதாக தெரிவித்து, அங்கு இருவருக்கும் சிலை அமைத்து கோவில் கட்டி வழிபடும்படி கூறினார்.

மறுநாள் காலையில் அரண்மனைக்குச் சென்ற சிற்பி, தான் இரவில் கண்ட கனவை அரசரிடம் தெரிவித்தார். கோவில் கட்டுவதற்காக மன்னரின் அனுமதியைப் பெற்று, அவரது கனவில் இறைவன் சொன்ன ஆலமரத்தின் அடியில் ஒரு பீடம் அமைத்து, அதன் மேல் களிமண்ணால் செய்யப்பெற்ற சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிலைகளை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார்.

காலப்போக்கில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, கோவிலில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. கருவறையில் இருந்து சிலைகளும் கருங்கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் முன்பகுதி தமிழகக் கட்டுமான முறையிலும், கோவிலின் உள்பகுதி அனைத்தும் கேரளக் கட்டுமான முறையிலும் கட்டப்பட்டிருக்கிறது. கோவில் கருவறையில் ஒரே பீடத்தில் இறைவன் சிவபெருமானும், அவருக்கு இடது புறத்தில் இறைவி பார்வதி தேவியும் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘உமா’ என்றும், இறைவன் ‘மகேசுவர சுவாமி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆலய முகப்புப் பகுதியில் கணபதி, முருகன் மற்றும் நந்திகேசன் ஆகியோருக்கான சன்னிதிகள் உள்ளன. கோவிலுக்குள் நாகர்களுக்கும், காவல் தெய்வமான மாடன் தம்புரானுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

இங்கு தினசரி வழிபாடாக, கணபதி வேள்வி, உமாமகேசுவர பூஜை, ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமை - பாக்யசூக்திர பூஜை, திங்கட்கிழமை சுமங்கலி பூஜை, சுயம்வர பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை, செவ்வாய்க்கிழமை முருகன் மற்றும் மாடன் தம்புரான் ஆகியோருக்குச் சிறப்புப் பூஜை, புதன்கிழமை சரஸ்வதி பூஜை, வியாழக்கிழமை மாங்கல்ய பூஜை, சுயம்வர அர்ச்சனை, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ராகு கால பூஜை, சனிக்கிழமை நீராஞ்சனம் என்று ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருவாதிரைத் திருவிழா, மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி, சித்திரை மாதத்தில் வரும் அட்சயதிருதியை போன்றவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்களிலும், மகரவிளக்கு நாளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்தக் கோவிலில் ஜாதக வழியாக சில தோஷங்களால் தடைபட்டிருக்கும் திருமணத் தடையை நீக்குவதற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு சிறப்பு வழிபாடு செய்பவர் களுக்கு உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண வாய்ப்பு அமையப் பெற்றவர்கள், தங்கள் திருமண அழைப்பிதழை கோவிலில் வைத்திருக்கும் சிறப்பு அறிவிப்புப் பலகையில் பார்வைக்காக வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தை கேரளாவின் திருமணஞ்சேரி என்றும் அழைக்கிறார்கள்.

கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் சேர்வதற்காக, ‘சம்வத சூக்த மந்திர புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கும் பகுதி ‘உமாமகேசுவரம் சந்திப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Next Story