இஸ்லாமிய இறைநம்பிக்கை: மறு உலகை நம்புவது


இஸ்லாமிய  இறைநம்பிக்கை:  மறு உலகை நம்புவது
x
தினத்தந்தி 2 April 2019 7:45 AM GMT (Updated: 2019-04-02T13:15:03+05:30)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மறுஉலகு’ குறித்த தகவல்களை காண்போம்.

மறுஉலகை நம்புவது என்பது மறுமைநாளை ஏற்றுக்கொள்வது.

‘மறுமைநாள்’ என்பது குறிப்பிட்ட இரண்டு நாட்களின் பொதுவான பெயராகும்.

ஒன்று ‘உலகம் அழிக்கப்படும் நாள்’.

மற்றொன்று, ‘மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள்’.

உலகம் அழிக்கப்படும் நாளுக்கும், அழிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து விசாரிக்கப்படும் நாளுக்கும் பொதுவான சொல்லே ‘மறுமைநாள்’ என்பதாகும்.

வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள், மலைகள், கடல்கள், வானில் வாழும் வானவர்கள், இவ்வாறு அனைத்தும் ஒருநாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவார்கள். அவர்கள் விசாரிக்கப்படவும் செய்வார்கள்.

உலகில் தவறு செய்த அனைத்து உயிரினங்களும் அந்நாளில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். ஒரு ஆடோ, மாடோ அல்லது கொம்புள்ள பிராணிகள் தங்களுக்கிடையே சண்டையிடும்போது கொம்பை உடைத்த பிராணியும், உடைக்கப்பட்ட பிராணியும் இறைவனின் சமூகத்திற்கு கொண்டு வரப்பட்டு, நீதி விசாரணை நடத்தப்பட்டு நியாயம் வழங்கப்படும்.

விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்கு பேரின்பம் கிடைக்கும். தீயவர்களுக்கு நோவினை தரும் பல விதமான தண்டனைகள் வழங்கப்படும்.

மறுமை வாழ்விற்கு அழிவே வராது. அது ஒரு நிரந்தரமான உலகம். அந்த நாளுக்கு பல பெயர்கள் கூறப்பட்டு திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் அழைக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

மறுஉலகம், அவ்வுலகம், மறுமை, நியாயத்தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவமுடியாத நாள், திரும்பச்செல்லும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன்தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கை சேதப்படும் நாள், இறைவன் முன்நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள், சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள் போன்ற பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் உலகம் அழிக்கப்படும் நாளுக்கும், அழிக்கப்பட்ட உலகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவாக கூறப்படுகிறது.

இத்தகைய நாள் எப்போது வரும் என்பதை நபி (ஸல்) மற்றும் வானவர்கள் உள்ளிட்ட யாராலும் அறிய முடியாது.

மறைவானவற்றில் இதுவும் ஒன்று என்பதால் இதையும் இறைவிசுவாசிகள் நம்புவார்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :

‘இறையச்சம் உடையோர் மறைவானவற்றை நம்புவார்கள்’. (திருக்குர்ஆன் 2:3)

‘மறைவானவற்றை நம்புதல்’ என்பது ஐம்புலன்களுக்கு எட்டாதவை அனைத்தும் மறைவானவையில் அடங்கும்.

‘மறைவானவற்றை நம்புவது’ என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை குறிக்கும். அவற்றில் இறைவன், வானவர்கள், சொர்க்கம், அதில் கிடைக்கும் பேரின்பம், நரகம் அதில் கிடைக்கும் தண்டனைகள், மறுஉலகம், அந்நாளில் ஏற்படும் அமளிகள் போன்றவற்றைக் கண்களால் காணாமல் இருந்தும் நம்புவதுதான் என்பதை மேற்கூறப்பட்ட இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதில் மறுமை நாளும் ஒன்று என பின்வரும் இறைவசனம் கோடிட்டு காட்டுகிறது.

‘யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு இறைவனிடமே உள்ளது’. (திருக்குர்ஆன் 31:34)

அந்த நாள் வெள்ளிக்கிழமை அன்று ஏற்படும் என ஒரு சிறுதகவல் மட்டுமே நபிமொழியில் காணப்படுகிறது. அது எந்த ஆண்டு?, அது எந்த மாதம்?, அது எந்த காலம்? போன்ற எந்தத் தகவலும் எதிலும் காணப்படவில்லை.

எனினும், அது ஏற்படுவதற்கு முன் நிகழும் பலவிதமான அடையாளங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் விவரமாக கூறப்படுகின்றன.

“நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘மறுமைநாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டார். ‘அதைப் பற்றி கேட்கப்படக்கூடிய நான், கேட்கின்ற உம்மைவிட அறிந்தவரல்லர். வேண்டுமானால் அதன் சில அடையாளங்களைப்பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

அதாவது, குழந்தைகள் தங்களை ஈன்றெடுத்த தாயை அடிமைப்பெண் போன்று நடத்துவதும், வசதியற்றவர்கள் வானளாவிய அளவு கட்டிடங்களை எழுப்பும் அளவுக்கு வசதியாக வாழ்வதும் அதன் அடையாளங்கள் ஆகும்.

இந்த அடையாளங்கள் இன்று தத்ரூபமாக நடந்து கொண்டிருக்கிறது. சூரியன் மிக அருகாமையில் உதிப்பதும் அதன் அடையாளம்.

மேலும், மறுமை நாளில் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும். சிலருக்கு அது எளிதாகவும், வேறு சிலருக்கு அது கடினமானதாகவும் இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் புரிந்த நன்மை, தீமை பதிவு செய்யப்பட்ட ‘பட்டோலை’ வழங்கப்படும். அதை வலது கரத்தில் வழங்கப்பட்டவர் மகிழ்ச்சியடைவார். இடது கரத்தில் கொடுக்கப்பட்டவர் நஷ்டமடைவார்.

‘யாருக்கு வலது கையில் பதிவுப்புத்தகம் கொடுக்கப்படுகிறதோ, அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார். முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான். நரகிலும் கருகுவான்’. (திருக்குர்ஆன் 84:7-12)

“எனவே, தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் ‘வாருங்கள், எனது புத்தகத்தை வாசியுங்கள், நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள், பருகுங்கள். (எனக்கூறப்படும்)”.

“புத்தகம் தனது இடதுகையில் கொடுக்கப்பட்டவன் ‘எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே, (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?, எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே, எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்துவிட்டதே’ எனக்கூறுவான்”.

“அவனைப் பிடியுங்கள். அவனுக்கு விலங்கு மாட்டுங்கள். பின்னர் நரகில் கருகச்செய்யுங்கள். பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள் (எனக்கூறப்படும்)”. (திருக்குர்ஆன் 69:19-32)

‘மறுமைநாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்’. (திருக்குர்ஆன் 39:67)

‘சூர் ஊதப்படும். இறைவன் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒருமுறை, அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்’. (திருக்குர்ஆன் 39:68)

‘மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்’. (திருக்குர்ஆன் 21:47)

இந்த விஷயங்கள் அனைத்தும் மறைவானவை. இது நடக்கும் நாள் மறுமை நாள் ஆகும். அதை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

சொர்க்கம், நரகம், விசாரணை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் அது உருவாக்கப்படுதல், மனிதனின் செயல்கள் நீதியான தராசில் நிறுக்கப்படுதல், நல்லோருக்கு பேரின்ப வாழ்வு, தீயவர்களுக்கு பரிதாபமான வாழ்வு, இவற்றை நம்பவேண்டும்.

‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவனையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரே நன்மை செய்பவர்கள்’. (திருக்குர்ஆன் 2:177)

மறுமை நாளை நம்புவது இறைநம்பிக்கை சார்ந்த செயல் மட்டுமல்ல. அது நன்மையான காரியமும் கூட என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதை மறுப்பது தூரமான வழிகேடாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நம்பிக்கை கொண்டோரே! இறைவனையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்! இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார்’ என்பது திருக்குர்ஆன் (4:136) வசனமாகும்.

(நம்பிக்கை தொடரும்)

Next Story