வெளிநாடு செல்ல அருளும் இறைவன்
அழகிய கண்கவர் குன்றின் மேல் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சாலையின் ஓரத்திலேயே உள்ளது இந்த ஆலயம். சிறிய மலை. சுமார் 20 அகன்ற படிக்கட்டுகளைக் கடந்தால் ஆலயத்தை அடையலாம்.
இறைவன் அகஸ்தீஸ்வரர். இறைவி வடிவுடைநாயகி. அன்னையின் இன்னொரு பெயர் சவுந்திர நாயகி. சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், குலசேகரமாரவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்ட இந்த பாண்டிய மன்னன், தன் அகத்தில் சதா சர்வகாலமும் ஈஸ்வரனின் நினைவில் இருந்து, அந்த ஈஸ்வரனுக்கு ஓர் ஆலயம் அமைத்து அங்கு அருள்பாலிக்கும் ஈஸ்வரனுக்கு ‘அகஸ்தீஸ்வரர்’ என்று பெயரிட்டதாக செவி வழி வரலாறு.
நாயக்கர் காலத்தில் இந்த ஆலயம் நன்றாக புணரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ராஜகம்பலத்து நாயக்க ஜமீன் வம்சத்தினரால் இன்றும் இந்த ஆலயம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவது வியப்பைத் தரும் தகவலாகும்.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே பலிபீடமும் நந்தியும் இருக்க அடுத்துள்ளது மகாமண்டபம்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை வடிவுடைநாயகியின் சன்னிதி உள்ளது. எதிரே கருவறையில் இறைவன் அகஸ்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் தெற்கில் கன்னி மூலை கணபதி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதியும் சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சன்னிதிகளும் உள்ளன.
பைரவர் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கிழக்கு பிரகாரத்தில் சந்திரன், சூரியன் இருவரும் அருள்பாலிக்கின்றனர். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் மகாவிஷ்ணுவும் வீற்றிருக்கின்றனர்.
இங்கு சூரிய- சந்திரர் இருவரும், ஒரே சன்னிதியில் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. பெற்றோர் நோய் குணமாக இவர்கள் இணைந்து அருள்புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இங்கு பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 1000 பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மொச்சை, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், பயிறுவகை சுண்டல் முதலியன பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று ஆலயம் முன்பு சொக்கபனை தீபம் ஏற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றனர்.
மாத பவுர்ணமி நாட்களில் ஆலயத்தை சுற்றி சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
குழந்தை பாக்கியம், புத்திர தோஷம் போன்றவற்றுக்கு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டாடை சாத்தி, மஞ்சள் நிறப் பூ சூட்டி, கொண்டை கடலை மாலை போட்டு இனிப்பும், தயிர் அன்னமும் நைவேத்தியமாக படைத்து வினியோகம் செய்தால் உரிய பலன் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.
தினசரி இங்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. சுற்றிலும் திருமதிற்சுற்றுடன் உள்ள இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தால் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலயம் பரிகார தலமாகவும் விளங்குகிறது. கன்னிமூலை கணபதி சன்னிதியின் முன் பக்தர்கள் யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்து பலன் பெறுகின்றனர். இந்த குன்றின் மேல் அகத்தியர் தவம் செய்துள்ளார்.
இந்த ஆலயத்திற்கு அருகே உள்ள நல்லாண்டவர் கோவில் திருவிழாவின் போது சுமார் 1000 பேர் பால்குடம் சுமந்து இங்கிருந்துதான் புறப்பட்டு ஊர்வலமாகச் செல்வார்கள்.
தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
வெளிநாடு செல்ல விரும்புவோர் இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அகஸ்தீஸ்வரரையும், இறைவி வடிவுடை நாயகியையும் வேண்டி வணங்க அவர்கள் பிரார்த்தனை பலிப்பது கண்கூடான உண்மையே.
Related Tags :
Next Story