ஆன்மிகம்

மனிதநேயம் வளர்ப்போம்... + "||" + Develop humanity

மனிதநேயம் வளர்ப்போம்...

மனிதநேயம் வளர்ப்போம்...
கடவுளின் படைப்பில் இந்த மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான். அதுவும் என்றும் மாறா முகம். ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்?
வீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்... என ஒரே முகத்தில் வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்த மனிதர்களை, மனித முகங்களை அன்றாடம் நாம் கண்டு கொண்டிருக்கிறோம், காட்டிக்கொண்டும் இருக்கிறோம்.

உண்மையில் மனிதனின் நிஜமான முகம் எது?

அன்பான முகம் தான் மனிதனின் உண்மையான முகம்.

‘நண்பனை புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்றார்கள் நபிகள் நாயகம்.

இன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கவேண்டிய அந்த அன்பும், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், நேயமும் இருக்கிறதா?

எங்கு பார்த்தாலும் மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்களே நடக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி நற்செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? மனிதனை மனிதனே அழிப்பதற்கு முயற்சிப்பது என்றைக்கும் ஏற்க முடியாத ஒன்று. இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

“எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் ஒரு முகத்துடனும் இருந்தாரோ அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இருநாக்குகளுடன் இருப்பார்” என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி)

எனவே, ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் செய்வதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அந்த இறைவனை நாம் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியுமா என்ன?

‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 2:115)

‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’. (திருக்குர்ஆன் 55:27)

இறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும். எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன..

நாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகிற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதை பின்வரும் வான்மறை வசனம் மிகத்துல்லியமாக சொல்லி எச்சரிக்கிறது:

‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’. (திருக்குர்ஆன் 2:177)

இறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத்தௌிவாகக் கூறுகிறதல்லவா?

நாம் பெருஞ்செலவு செய்து பூசும் அழகு சாதனங்களில் முகஅழகும், வசீகரமும் இல்லை; நாம் வௌிப்படுத்தும் நமது நற்குணங்களில் தான் இருக்கின்றது. நமது அகம் அழகு பெற்றுவிட்டால் நிச்சயம் நமது முகமும் பேரழகு பெற்றுவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

இதனால் தான் நமது நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:

“நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்”.

பணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் குணம் என்பது அப்படியா? நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.

‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபிகளார் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது என்றால் நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வௌிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

முகங்களில் எத்தனையோ முகங்கள் உண்டு. அதில் இந்த பெருமை முகம் தான் பேராபத்திற்குரிய முகம் என்று அருள்மறை அறிமுகம் செய்கிறது இப்படி:

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)

நம் முகத்தில் அலங்காரம் இருக்கலாம், அகங்காரம், ஆணவம், அகம்பாவம், அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. குறிப்பாக, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் அறவே கூடாது. இது குறித்து நமக்கு மன்னிப்பின் மறுமுகத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுகிறது:

‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 5:45).

இன்றைக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்களே திரும்பும் திசையெல்லாம் திகைப்பூட்டுகின்றன. அவற்றை நாம் துல்லியமாக அடையாளம் காண்பதற்குள் நமது முகமே கூட வேறொரு முகமாக மாறிப்போய்விடக்கூடும்.

“பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.

உண்மைக்கு என்றைக்கும் ஒரே ஒரு முகம் தான். பொய்களுக்குத் தான் பலமுகங்கள்; பல முகமூடிகள் தேவைப்படுகின்றன.

எல்லோரும் ஒரே முகத்தோடு இன்முகமாய் இருக்க வேண்டும். மனித முகங்கள் மலரும் போது தானே மனித நேயமும் வளரும்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.