பைபிள் கூறும் வரலாறு : நெகேமியா


பைபிள் கூறும் வரலாறு : நெகேமியா
x
தினத்தந்தி 16 April 2019 5:49 PM IST (Updated: 16 April 2019 5:49 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரயேல் மக்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்தும், யூதா நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்படுகின்றனர். இஸ்ரேல் நாடு அசீரியர்களிடமும், யூதா பாபிலோனியர்களிடமும் சிக்கிக் கொள்கிறது.

வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள் மீண்டும் யூதாவுக்குத் திரும்பும் நிகழ்ச்சியே எஸ்ரா, நெகேமியா நூல்களின் அடிப்படை சிந்தனை.

வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.

வரலாறுகள் கடந்த காலத்தின் சுவடுகள். அவற்றிலிருந்து வெறும் தகவல்களை அல்ல, வாழ்வியல் நெறிகளையும் கற்றுக்கொள்ள முடியும். இறைவனின் மாறாக் கருணையையும் புரிந்து கொள்ள முடியும்.

நெகேமியா நூலும் எஸ்ராவைப் போலவே எபிரேயம் மற்றும் அராமிக் மொழிகளில் எழுதப்பட்ட நூல். அன்றைய காலத்தில் அராமிக் மொழி மிகவும் பரவலாய்ப் பேசப்பட்ட மொழி. இயேசுவும் அந்த மொழியைத் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ரா நூலைப் போலவே நெகேமியா நூலையும் நான்காகப் பிரிக்கலாம். நாடு திரும்புதல், கட்டி எழுப்புதல், புதுப்பித்தல், சீர்திருத்துதல் என அதை வகைப்படுத்தலாம். நெகேமியா நூல் 13 அதிகாரங்களையும், 406 வசனங்களையும், 10483 வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது.

எருசலேமில் வாழ்ந்த காலத்தில் 14 ஆண்டு காலம் ஆளுநராக இருந்தவர் நெகேமியா. இப்போது பாபிலோனில் நிர்ப்பந்த வாழ்க்கை வாழும் அவர் பாபிலோனிய மன்னனுக்கு பானம் பரிமாறும் வேலை செய்து வந்தார். அதாவது மன்னர் அருந்தும் பானத்தை முதலில் அருந்திப் பார்த்து, விஷம் ஏதும் இல்லை என ஊர்ஜிதப்படுத்தும் வேலை.

அப்போது தான் அந்த செய்தி வருகிறது. எருசலேமின் மதில்கள் தகர்க்கப்படுகின்றன, வாயில்கதவுகள் தீக்கிரையாகின்றன என்று. செய்தியைக் கேட்ட நெகேமியா கலங்கிப் புலம்புகிறார். இறைவனை வேண்டுகிறார். பாபிலோனிய மன்னன் நெகேமியாவை ஊருக்கு அனுப்புகிறான், உதவிகளையும் செய்கிறான்.

நெகேமியா உடனே வேலையை ஆரம்பிக்கவில்லை. முதலில் ரகசியமாய் நாட்டுக்கு வந்து எருசலேம் மதில்களின் பாதிப்பு என்ன, எப்படி கட்டியெழுப்பலாம், என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் ஆய்ந்து அறிகிறார். ஒரு வேலையைத் தொடங்கும் முன் கவனமாக திட்டமிடுகிறார்.

அதன்படி மக்கள் அவரவர் வீட்டுக்கு எதிரே இருக்கும் மதில் பகுதியை செப்பனிடவும், கட்டியெழுப்பவும் செய்யவேண்டுமென சொல்கிறார். கடவுளின் அருள் அவர் மீதும் அவரது திட்டத்தின் மீதும் இருந்தது. வெறும் 52 நாட்களில் மதில்சுவர் முழுமையாகக் கட்டியெழுப்பப்பட்டது. கதவுகள் பொருத்தப்பட்டன. நாடு பாதுகாப்பானது.

இரண்டு சவால்களை நெகேமியா எதிர்கொள்கிறார். ஒன்று எருசலேமுக்கு வெளியே இருந்து வருகிறது. சமாரியர்கள் வேலையைக் கெடுக்க முயல்கிறார்கள். அவர்களுடைய மன உறுதியைக் குலைக்கப் பார்க்கின்றனர். நெகேமியாவை எப்படியாவது பின்வாங்க வைக்க முயல்கின்றனர்.

இரண்டாவது சவால், உள்ளேயிருந்து எழுகிறது. நாட்டில் ஏழை பணக்காரர் பாகுபாடு அதிகரிக்கிறது. செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வம் குவிக்க, ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றனர் இரண்டு சவால்களையுமே நெகேமியா மிகத்திறமையாக எதிர்கொண்டார்.

பிற இனத்தினரோடு கலந்து திருமணம் செய்வதை எதிர்த்தார். மக்கள் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டுமென வற்புறுத்தினார். பணத்தை சரியாகக் கையாளாத மக்களை கண்டித்தார். பண விஷயத்தில் மிகச்சரியாய் இருக்க வேண்டுமென விரும்பினார். ஓய்வு நாளை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் என மக்களை நெறிப்படுத்தினார். ஆலயத்தில் குருக்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.

நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் செபத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்த ஒரு மனிதர். எந்த செயலைச் செய்யும் முன் செபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு எதார்த்தமான மனிதர். வானத்தில் பறப்பவருமல்ல, பூமியில் புதைபவருமல்ல, சக மனிதனோடு இணைந்து பயணிப்பவர்.

நெகேமியா உணர்வுப்பூர்வமான மனிதர். மக்களுடைய மகிழ்ச்சியோடும் சோகத்தோடும் கலந்து வாழ்ந்தவர். அவர்கள் கடவுளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஊக்கப்படுத்தியவர். அதே நேரத்தில் அவர்களைக் கண்டித்து திருத்தவும் தயங்கியதில்லை.

இந்த நூல் முழுவதும் கடவுள் வித்தியாசமான முறையில் செயலாற்றுகிறார். அற்புதங்கள் இல்லை, அதிசயங்கள் இல்லை, ஆனால் திட்டங்களெல்லாம் வெற்றிகரமாய் நிகழ்ந்தேறுகின்றன. இருந்தாலும் மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கையை நாடுபவர்களாக இருந்தார்கள் என்பதையும் இந்த நூல் வேதனையுடன் பதிவு செய்கிறது. எனவே நெகேமியாவின் வேலை மனிதர்களைக் கட்டியெழுப்புவதும் எனும் சிந்தனைக்குள்ளும் செல்கிறது.

எஸ்ரே, நெகேமியா காலகட்டத்துக்குப் பின் சுமார் 400 ஆண்டுகள் இறைவன் அமைதிகாத்தார். இறைவாக்கினர்கள் யாரும் தரப்படவில்லை. அதற்குப் பிறகு வந்தது தான் இறைமகன் இயேசுவின் காலம்.

பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையே பாலம் போடும் காலம் இது. வரலாற்று சுவாரசியங்களும், நெகேமியா எனும் மனிதரின் குணாதிசயங்களும், இறைவன் மறைந்திருந்து ஆற்றும் செயல்களும் இந்த நூலை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

-சேவியர்

Next Story