ஆன்மிகம்

மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி + "||" + Good Friday for salvation

மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி

மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

“அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகின்றோம்” (எசாயா 53:5) என்ற நம்பிக்கையே அது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக பல விலங்குகள் கடவுளுக்குப் பலியாக கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், மனிதராகத் தோன்றிய ‘இறைமகன்’ தம்மையே பலியாக செலுத்தினார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

“திருச்சட்டத்தின்படி, ரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. யூத தலைமைக்குரு, பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” என்று எபிரேயருக்கு எழுதியத் திருமுகத்தில் (9:22-28) வாசிக்கிறோம்.

கடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தை களைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத் தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர் களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

“பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” (எபிரேயர் 1:1&2) என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

இயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.

இதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

உலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.

ஆகவேதான், “மானிடமகன் (இயேசு) தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற்கு 10:45) என்று தமது வருகையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

யூத சமயத் தலைவர்கள் தம்மை ரோமானியரிடம் கையளித்து, சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்பதையும் இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை முன்னறிவித்தார் என்பதும் நமக்குத் தெரியும்.

யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முன்பாக இயேசுவைக் கொலை செய்துவிட வேண்டும் என்று சமயத் தலைவர்கள் உறுதியேற்றனர். அவரை இரவோடு இரவாக ரகசியமாகக் கைது செய்து, ஆளுநர் பிலாத்து முன்னிலையில் அரசியல் குற்றவாளியாக நிறுத்தினர்.

இயேசுவிடம் குற்றம் காணாத பிலாத்து, அவரை விடுவிக்க வழிதேடினான். “இயேசுவை விடுவித்தால், நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது” என்று யூத சமயத் தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல கையளித்துவிட்டு, தனது கைகளைக் கழுவினான் பிலாத்து.

இயேசுவின் தோளில் சிலுவை மரத்தை சுமத்தி, அவரை ‘கொல்கொதா’ என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார்கள் படைவீரர்கள். அங்கே இரண்டு கள்வர்கள் நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

“உன்னை ‘இறைமகன்’ என்று கூறிக்கொண்டாயே, இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வா, பார்ப்போம்” என சமயத் தலைவர்கள் கேலி செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை எங்கும் இருள் சூழ்ந்தது. மூன்று மணிக்கு இயேசு, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று கூறி உயிர் நீத்தார். அது பாஸ்கா விழாவுக்கான ஆட்டுக்குட்டியைப் பலியிடும் நேரம்.

அப்போது எருசலேம் கோவிலின் திரை நடுவில் இரண்டாகக் கிழிந்து, மக்களின் பாவப்பரிகாரம் நிறைவேறிவிட்டது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேஇருந்த தடை விலகி விட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.

“இறுதியாகத் தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு, அவரை அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது அவர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்’ வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்’ என்று அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்” (மத்தேயு 21:37-39) என்று இயேசு உவமையாகக் கூறியது அவரில் நிறைவேறியது.

“தந்தையாம் கடவுள் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசுவே நமது செயல்களுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அவர் தம்மையே பலியாகக் கையளித்ததால், நமக்கு தண்டனை வழங்கும் கடவுளின் சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், அவர் நமக்கு நிலைவாழ்வுக்கான மீட்பை வழங்குவார்.

சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.

“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவான் 10:18) என்று அவர் கூறினார்.

தாம் சொன்னபடியே இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால், இயேசு கிறிஸ்துவை ‘இறை மகன்’ என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.

டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.