நன்மை தரும் நாமக்கல் ஆஞ்சநேயர்


நன்மை தரும் நாமக்கல் ஆஞ்சநேயர்
x
தினத்தந்தி 23 April 2019 8:53 AM GMT (Updated: 23 April 2019 8:53 AM GMT)

நாமக்கல் நகரில் இருக்கும் சிறப்புமிகு தெய்வம்.

புராணங்களில் நாமகிரி என்று குறிப்பிடப்படும் புண்ணிய நகரம், நாமக்கல். இந்த நகரின் மத்தியில் ஒரே கல்லால் ஆன குன்று நடுநாயகமாக இருக்கிறது. நகரத்தை பேட்டை, கோட்டை என்று இரு பிரிவுகளாக பிரிக்கிறது இந்தக் குன்று. இந்த நாமக்கல் நகரில் இருக்கும் சிறப்புமிகு தெய்வங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த நகரில் வீற்றிருக்கும் நாமகிரி அம்மனின் மகிமையும், குடவரைக் கோவில்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளின் அழகும், கார்கோடசாமியாக அருள்புரியும் ரங்கநாதர் திருமேனியும், வானளாவ உயர்ந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரமும், நகரின் மையத்தில் அமைந்துள்ள சாளகிராமக் குன்றின் பெருமையும் அளவிடற்கரியது.

கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.

நரசிம்மர் ஆலயத்தின் வெளிப்புறம், கிழக்குப் பார்த்த நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த நாமகிரித் தாயாரின் சன்னிதி உள்ளது. மலைக் குகையில் குடவரைக் கோவிலில் ரங்கநாதர், கார்கோடகன் எனும் பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்ட பெருமாளாக காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நரசிம்மர், ரங்கநாதர், ஆஞ்சநேயர் என்று இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கும் பல சிறப்புகள் இருந்தாலும், நாமகிரி அம்மனின் பெருமை அளவிட முடியாதது. காரணம், இந்த அன்னை கமலாலய புஷ்கரணியில் அமர்ந்து நரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்து, பல சக்திகளைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. எனவே முறைப்படி அவளைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாகர்களின் அரசனான கார்கோடகன் என்னும் நாகம், தினமும் இங்குள்ள கமலாலயத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து ரங்கநாதருக்கு பூஜை செய்வதாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சான்றாக மலைப் பாறையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு ஊர்ந்து சென்ற தடங்கள் காணப்படுகின்றன.

இங்கு சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வடை மாலை சாத்துதல், நல்லெண்ணெய் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் , சீயக்காய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், சொர்ண அபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், முத்தங்கி அலங்காரம் போன்றவை செய்யப்படுகின்றன.

நரசிம்ம மூர்த்தியின் ஆணைப்படி, நேபாள தேசத்தில் இருந்து எடுத்து வந்த சாளகிராமத்தை இங்கு ஸ்தாபித்து, நாமகிரி என்னும் பெயரை உலகறியச் செய்த பெருமை ஆஞ்சநேயரையேச் சாரும். இதற்கு சான்றாகவே நரசிம்மரை கைகூப்பி தொழுதபடி, விஸ்வரூப தரிசனம் தருகிறார் அனுமன். இவரது திருமேனி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. எனவேதான் மேல்கூரை விமானம் கட்டப்படவில்லை.

இங்குள்ள தீர்த்தக் குளங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை. பலராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு நீர்நிலை உருவாக்கி வழிபட்டிருக்கிறார். அந்த தீர்த்தம் பலராம தீர்த்தமாக இருக்கிறது. அனந்தன் எனும் வேதியர் ஒரு தீர்த்தம் உருவாக்கி தாயாரை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளார். அந்த தீர்த்தம் அனந்த தீர்த்தம் எனப்படுகிறது. தாயார் உருவாக்கிய மகிமை மிகு தீர்த்தம் கமலாலய தீர்த்தம் ஆகும். தேவர்கள் இத்தலத்து தெய்வங்களை வழிபட உருவாக்கிய தீர்த்தம் தேவதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அசுரனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நரசிம்மருக்கு, பக்தர் ஒருவர் உருவாக்கி வழிபட்ட தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.

சேலம் சுபா


Next Story