பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்


பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்
x
தினத்தந்தி 30 April 2019 4:34 AM GMT (Updated: 30 April 2019 4:34 AM GMT)

ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம்

ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி இந்தத் தொடரின் மூலமாக அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் தசரதனின் மனைவியும், ராமனின் தாயுமான கவுசல்யாவைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தர்மத்தைத் தவிர வேறு எது
உன்னைக் காப்பாற்ற இயலும்.
அந்த தர்மமே உனக்கு வெற்றியைத்
தேடித் தந்துள்ளது.
எல்லோரிடமும், அன்பு, பிரியம்,
நேர்மை, சத்தியம்
தவறாத உன்னைப் பெற்ற
என் வயிறு குளிர்ந்தது

“ராமா, என் மணி வயிறு உதித்த மாமணியே”
நெஞ்சம் நெகிழ, வயிறு குழைய அரியாசனத்தில் வீற்றிருந்த ராமனைக் கண் குளிரப் பார்த்தாள் கவுசல்யா.
அவளது நெஞ்சம் குளிர்ந்து, மனம் பூரித்தது.

விண்ணில் பற்பல முரசங்களும் பறைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. கந்தர்வர்களும், கின்னரர்களும் பாடல்கள் இசைக்க, தேவகன்னியர் நாட்டியமாட, ராமனைச் சுற்றிலும் தம்பியர் நால்வர், விபீஷணன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் முதலானோர் வெண்கொற்றக் கொடை, சாமரம், விசிறி, வில், வாள், கேடயம், சக்தி ஆயுதம் தாங்கி நின்றிருந்தனர். சீதையுடன் பேரழகனாய் வீற்றிருக்கும் ஸ்ரீராமனை கண்கொட்டாமல் பார்த்தாள் கவுசல்யா.

‘போதும் இந்தப் பிறவிக்கு’ என்று துள்ளியது உள்ளம். தாமரை போன்ற கண்களையும், அகன்ற மார்பையும், நீண்ட புயங்களையும் கொண்ட ராமரை, ‘என் மகன்’ என்ற பூரிப்புடன் தரிசனம் செய்தாள் கோசலை என்னும் கவுசல்யா. எங்கும் “வாழ்க, வாழ்க” என்ற கோஷம் பரவியது.

“போதும் கவுசல்யா. தாயின் கண்தான் படும்.” - அருகில் நாரதர் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். “கவுசல்யா உன் மணி வயிறு செய்த தவப் பயன். இதோ நான்கு வேதங்களும், நான்கு சாரணர் வடிவம் கொண்டு வந்து அவரை தரிசித்துச் செல்கின்றன. தேவர்கள் அனை வரும் தனித் தனியாக வந்து அவரை தரிசிக்கின்றனர்.”

“ஆம் மகரிஷியே. இங்கு மண்டபத்தில் காணப்படும் அழகையும், நிலவும் இன்பத்தையும் என்னால் வர்ணிக்க இயலாது. என் உண்மையான ஆனந்தத்தை அந்த இறைவனே அறிவார்.”

‘அந்த இறைவனே ஸ்ரீராமன்தானே’ - நாரதர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். கவுசல்யா பூரிப்பில் உடல் தள்ளாட, மெதுவாக தன் அந்தபுரத்தில் வந்து அமர்ந்தாள். கடந்த கால நிகழ்வுகளை ஏக்கத்துடன் நினைவுகூர்ந்தாள். மன்னன் தசரதனின் நினைவு எழும்புவதை அவளால் தடுக்க முடியவில்லை.

“கோசலை தேவியே, கலங்க வேண்டாம். அதோ வானில் சூட்சும ரூபமாக நின்று தசரத மகராஜா மகனின் முடிசூட்டு வைபவத்தை ரசிப்பதைப் பார்” - நாரதர் ஒரு நிமிஷம் அவளுக்கு ஞானக் கண் அளித்தார்.

முகம் முழுவதும் பூரிப்பில் மின்ன கண்ணீர் மல்க தசரதர் வானில் நின்று ஆசீர்வாதம் செய்வதை அவளால் காண முடிந்தது. “இறைவா நன்றி.” உள்ளம் உருக நன்றி கூறினாள்.

எத்தனை நன்றி கூறுவது? காட்டுக்குச் சென்ற ராமன் பத்திரமாகத் திரும்பியதையா? அயோத்தி திரும்பிய ராமன், எவ்வித மனவேறுபாடும் காட்டாமல் கைகேயியை வணங்கி அவளுக்கு முன்போலவே அன்னை என்ற மரியாதை தருவதையா? “செயற்கரிய செயல் புரிந்துள்ளான் என் மகன்.” - பெருமையுடன் கூறினாள்.

“இல்லை தாயே. செயற்கரிய செயல்புரிந்தது நம் லட்சு மணன். இந்தப் போரின் வெற்றிக்குக் காரணம் அவனே.”- ராமன் பணிவுடன் அவள் அருகில் வந்தார்.

“என்ன சொல்கிறாய் ராமா? ராவணனை அழித்தது நீ அல்லவா?” “இல்லை தாயே. நான் என்ற ஆணவமே அவனை அழித்தது. இந்தப் போரில் மிக முக்கியமானது இந்திரஜித் வதம். அதை செவ்வனே செய்து முடித்தது லட்சுமணன்.”

“எப்படிச் சொல்கிறாய்?” - வியப்புடன் கேட்டாள் கவுசல்யா. “தாயே, பதினான்கு வருடங்கள் தூக்கம் இன்றி, அன்ன ஆகாரம் இன்றி எவன் இருக்கிறானோ, அவனே என்னைக் கொல்ல முடியும் என்று வரம் வாங்கியிருந்தான், இந்திரஜித். எனவேதான் இளவல் அவனை வதம் செய்ய முடிந்தது.”

“அப்படியா? இது எப்படி சாத்தியமாயிற்று?” “தாயே, என்னை நித்ரா ஆட்கொள்ள வந்தபோது, அவளை என் மனைவி ஊர்மிளாவிடம் அனுப்பி விட்டேன். விஸ்வாமித்திரருடன் சென்றபோது அவர் எங்களுக்கு பலா, அதிபலா என்ற மந்திரத்தை உபதேசித்தார். நான் அதை உச்சரித்து பசி எடுக்காமல் பார்த்திருந்தேன். சிறிது கண் அசந்தாலும் அண்ணாவுக்கு ஆபத்து என்று நான் அந்த வரங்களைப் பயன் படுத்தினேன்.” இளவல் பணிவுடன் கூற கவுசல்யா அதிசயத்துப் போனாள்.

“தாயே, இதில் மிகப் பெரிய தியாகம் செய்தவள் ஊர்மிளா. கணவன் கானகத்தில் அன்ன ஆகாரமின்றி, உறக்கம் இன்றி காவல் புரிகிறான். இங்கு அவன் மனைவி தன் சுக துக்கம் மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரின் தியாகம் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை” - கனிவுடன் பேசினார் ஸ்ரீராமன்.

“லட்சுமணா, நீ போய் உன் மனைவியைப் பார்.” அன்புடன் அவனை அனுப்பி வைத்தார் ராமன். கவுசல்யாவின் பார்வையில் பெருமை இன்னும் கூடியது.

“அன்னையே, வெற்றி என்பது ஒருவரால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய விஷயம் இல்லை. பலரின் தியாகம், உழைப்பு அதில் கலந் திருக்கிறது. இதனால் இது நடக்க வேண்டும் என்று காலம் கணக்குப் போட்டு அதன் திட்டப்படி புள்ளி பிசகாமல் நடந்திருக்கிறது. ராவண வதம் என்பது காரணம். அதை நோக்கி ஒவ்வொரு காயாக நகர்த்தப்பட்டிருக்கிறது. இதில் யாரும் யாரையும் நோகவோ, பாராட்டவோ அவசியமில்லை” - ஸ்ரீராமன் தாயுடன் கனிவாகப் பேசினார்.

“எவ்வளவு பராக்கிரமம் வாய்ந்தவனாக இருந்தாலும், பிறர் மனைவியை விரும்பியவன், பிறருக்குத் துன்பம் தருபவன் அழிவான். இதுதான் இந்த பிரபஞ்சத்தின் விதி. பிறர் நலன் பேணுதலைப் போன்ற உயர்ந்த அறம் எதுவும் இல்லை. அதுவே தர்மம். பிறருக்கு துன்பம் தருவதைப் போன்ற பாவம் வேறு இல்லை.

மானிடனாகப் பிறப்பது என்பது தேவர்களுக்கும் கிடைக்காத ஒன்று. இதற்கு மாபெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். முக்தியை அடைவதற்கு உரிய சாதனம் இதுவே. இதில் பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமல், ஆணவம், கர்வம் இன்றி மனித குலத்துக்கு நன்மை செய்ய வேண்டும்.”

கவுசல்யா ராமனை இரு கரம் கூப்பி வணங்கினாள்.

“கவுசல்யா, அந்தப் பரம்பொருள் உலகில் தர்மம், சத்தியம், நேர்மை, அன்பு, அனைவரையும் நேசித்து அனைத்து உயிர் களுக்கும் நல்லது செய்ய வேண்டும். அதுவே மானிடப் பிறப்புக்கு அர்த்தம் என்று உணர்த்தவே மனித வடிவம் எடுத்து வந்திருக்கிறது. உன் மணி வயிற்றில் பிறந்திருக்கிறது.” - நாரதர் மெதுவாகப் பேசினார்.

“எவருடைய நாமம், ஜனனம், மரணம் ஆகிய பிறவிப் பிணிக்கு மருந்தோ, இம்மை மறுமை பாவங்களைப் போக்க வல்லதோ, மூன்று விதத் துன்பங்களை நீக்குமோ, அந்த ஸ்ரீராமபிரானின் பாதங்களைப் பற்றிக் கொள். இவரை வழிபடாமல் கடைத்தேற முடியாது” -நாரதர் அவளின் மாயையை சிறிது நேரம் நீக்கினார். அவளுக்கு ஸ்ரீராமன் வைகுண்ட வாசனாகக் காட்சி அளித்தார்.

“இறைவா என்னே என் பாக்கியம்? என் அய்யனே, எத்தனை யுகங்களானாலும், நான் எத்தனைப் பிறவி எடுத்தாலும், உன் நாமத்தை மறக்காத பாக்கியத்தை நீ அளிக்க வேண்டும். அற்பமானவர்களையும் புனிதமாக்குபவன் நீ. நான் என்றும் இந்தப் பூமியில் வாழ்ந்து உன் கதைகளைக் கேட்க வேண்டும். உன் புகழ் பாட வேண்டும். உன் நாமத்தில் அன் பெனும் புனித நீரும், மங்கலங்களை அளிக்கவல்ல சக்தியும் இருக்கிறது. அதை என்றும் உச்சரிக்க வேண்டும் நான்.”

கண்ணீர் மல்க இறைவனுடன் இறைஞ்சினார் கவுசல்யா. புன்னகையுடன் தாயாரின் தலை மீது கை வைத்து ஆசீர் வதித்தார் ஸ்ரீராமர்.

அவள் இறந்த பின்னர், அவள் ஆத்மா காற்றில் கலந்து பிரபஞ்சம் எங்கும் பரவியது. அற்புதமான ஒரு மகனை ஈன்ற பெருமிதத்துடன், எங்கெல்லாம் ராமகாதை சொல்லப்படு கிறதோ, ராம நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் இனிய நறுமணத்துடன் தென்றலாக வீசி உள்ளம் குளிர, குளிர்விக்கிறாள் கவுசல்யா.

- ஜி.ஏ.பிரபா


Next Story