‘ஸதகா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘தர்மம்’ என்று பொருள்


‘ஸதகா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘தர்மம்’ என்று பொருள்
x
தினத்தந்தி 17 May 2019 7:04 AM GMT (Updated: 17 May 2019 7:04 AM GMT)

தர்மத்தை, தர்ம சிந்தனையை அனைத்து மதங்களும் வலியுறுத்தவே செய்கின்றன

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு நற்காரியமும் எழுபது மடங்கு கூடுதல் நன்மையைப் பெறுகிறது. எனவே, இம்மாதத்தில் அதிகமதிகம் தர்மம் செய்கிறபோது, நாம் கொடுப்பது குறைவாக இருந்தாலும் கூடுதலான பல நன்மைகளைப் பெற்றுத்தரும்.

இதுகுறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பதை பார்ப்போம்:

‘நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சம்பாதித்தவற்றில் இருந்தும், பூமியில் இருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக்கொண்டே அல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திலும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 2:267)

‘(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும்) என்று உங்களை சைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்’. (திருக்குர்ஆன் 2:268)

‘தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்ய பிறரையும் அது தூண்டும்); எனினும் அவற்றை மறைத்து ஏழை எளியோருக்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை (யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:271)

‘யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 2:274)

மேற்கண்ட இறைவசனங்கள் ஒவ்வொன்றுமே நாம் எப்படி தர்மம் செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டும், யாருக்குச் செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெள்ளத்தௌிவாக சொல்லிக் காட்டுகின்றன.

நமக்குள் தர்ம சிந்தனை பெருக வேண்டும். அப்பொழுது தான் நாம் வைக்கும் அந்த நோன்புக்கு ஓர் அர்த்தம் இருக்கும். இல்லையெனில் சும்மா பசித்திருப்பதில் எந்தவிதப் புண்ணியமும் இல்லை.

ரமலானில் நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் ஜகாத். ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லிற்கு சுத்தம், தூய்மை என்று பொருள். அதாவது கடன்கள் போக நாம் சம்பாதித்து, சேமித்து வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க, வௌ்ளி ஆபரணங்களுக்கு ஒரு வருடம் பரிபூரணமாகி விட்டால் அவற்றில் நாற்பதில் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து விடவேண்டும். இந்தச் செயலுக்கு ஜகாத் என்று பெயர்.

ஜகாத்தைக் குறித்து பேசும் வசனங்கள் சில...

‘இன்னும் தொழுகையை முறையாக கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:110)

‘யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 2:277)

மேற்கண்ட இறைவசனங்கள் ஜகாத் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் ஜகாத் கொடுக்கும் விஷயத்தில் பெரிதும் அலட்சியமாக இருக்கிறார்கள். செல்வந்தர்கள் தம் சொத்துக்களுக்கு கொடுக்க வேண்டிய ஜகாத்தை மிகச்சரியாக கணக்கிட்டுக் கொடுத்தாலே போதும் நமது சமுதாயத்தில் நிலவும் ஏழ்மையையும், வறுமையையும் முழுமையாக ஒழித்து விடமுடியும்.

ஜகாத் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது:

‘இறைநம்பிக்கையாளர்களே, (வேதம் வழங்கப்பட்டவர் களைச்சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக’. (திருக்குர்ஆன் 9:34)

“(நபியே, அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)”. (திருக்குர்ஆன் 9:35)

பணத்தையும், சொத்தையும் சம்பாதிப்பது பெரிதல்ல அதை முறைப்படி இறைவனுக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான வழிகளில் செலவு செய்வது தான் ரொம்பவும் முக்கியம். இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் பிரச்சினையே எப்படி செலவு செய்கிறோம் என்பது தான். இதனால் தான் இஸ்லாம், புனித ரமலானில் நீங்கள் அதிகமதிகம் தர்மம் செய்யுங்கள், ஜகாத் கொடுங்கள் என்று வலியுறுத்திக் கூறுகிறது.

நிறைவாக, நீங்கள் செலவளிக்கும் எந்த ஒன்றும் நிச்சயம் அது மீண்டும் உங்களுக்கே திருப்பி வழங்கப்படும் என்று குர்ஆன் உறுதியளிக்கிறது. இதைத் தான் பின்வரும் வான்மறை வசனம் வாசித்துக் காட்டுகிறது இப்படி:

‘இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப் பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே தவிர (வீண் பெருமைக்காக) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; கொஞ்சமும் நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்’. (திருக்குர்ஆன் 2:272)

வாருங்கள் தர்மங்களை வாரி வழங்குவோம், இறையருள் பெறுவோம்.

- மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3


Next Story