கோடி சிற்பங்கள் கொஞ்சும் ஆலயம்


கோடி சிற்பங்கள் கொஞ்சும் ஆலயம்
x
தினத்தந்தி 21 May 2019 9:32 AM GMT (Updated: 2019-05-21T15:02:29+05:30)

முதல் ராஜராஜ சோழனின் பேரனுக்குப் பேரன்தான் இரண்டாம் ராஜராஜன்

தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து, பெரிய கோவிலை நிர்மாணித்த முதல் ராஜராஜ சோழனின் பேரனுக்குப் பேரன்தான் இரண்டாம் ராஜராஜன். இவர் இரண்டாம் குலோத்துங்கனின் மகன் ஆவார். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த தலைநகரை, தமது முன்னோர்களின் வாழ்விடமான குடந்தைக்கு அருகில் உள்ள பழையறை நகருக்கு மாற்றியவர். அதோடு அவ்விடத்தை ராஜராஜேஸ்வரம் என்று பதிவு செய்தவர்.

பெயரில் மட்டும் ராஜராஜன் என்று இருந்தால் போதுமா.. தனது முப்பாட்டன் முதலாம் ராஜராஜன் போலவே, அவரைவிடவும் ஏதேனும் ஒரு சிறப்பை உள்வைத்து ஓர் ஆலயத்தை உருவாக்க வேண்டும் என்று இரண்டாம் ராஜராஜன் முடிவு செய்தான். அதன் விளைவுதான் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் திருக்கோவில். ஆன்மிகச் சிறப்பைவிட, சிற்பச் சிறப்பு அதிகம் பொங்கும் கலைக்கூடம்.

இந்திய தொல்பொருள் ஆய்வு துறையால், சுற்றிலும் புல்வெளிகளுடன் தூய்மையாகப் பராமரிக்கப்படும் இந்த ஆலயத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தை கடந்ததும் நந்தி மண்டபமும் அதன் முன்னே பலி பீடமும், கல் படிக்கட்டுகளும் இருக்கின்றன. ‘இவையெல்லாம் அனைத்து தலங்களிலும் இருப்பவை தானே’ என்று நினைத்தால் அது தவறு. கற்படிகளை வரிசையாகத் தட்டினால் ‘சரிகமபதநி’ என்ற ஏழு சுரங்களும் இன்னிசையாக எழுவது எங்கும் இல்லாத அற்புதம்.

ராஜகோபுரத்தைக் கடந்தால் யானையும் குதிரையும் இழுத்துச் செல்லும் தேர் போல வடிவமைக்கப்பட்ட பெரிய மண்டபம், படிகளில் ஏறிச் செல்லும்படியான உயரத்தில் அமைந்துள்ள மாடக்கோவில். “ராஜ கம்பீரன்” என்று பெயர் பெற்ற அந்த மண்டபத்தில் 108 தூண்கள் அழகாக அணிவகுத்து நிற்கின்றன. எல்லா தூண்களிலும் நான்கு புறங்களிலும் கீழ் இருந்து மேலாக சின்னச் சின்ன நுண் சிற்பங்கள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. அப்படியானால் 108 தூண்களிலும் எவ்வளவு சிற்பங்கள் இருக்கும் என்பதை கணக்குப் போட்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அதனால் தான் இந்த ஆலயத்திற்கு, “கோடி சிற்பங்கள் கொண்ட கோவில்” என்ற சிறப்பும் கொண்டு விளங்குகிறது.

108 நடன பாவங்களும், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராண நிகழ்வு களும் அச்சில் வடித்தெடுத்த அழகுப் பதுமைகளாக கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன.

உதாரணமாக ஒரு தூணில் 2 அங்குல உயரமேயுள்ள, நர்த்தன கணபதியின் சிற்பத்தை உருப்பெருக்கி மூலம் பார்த்தால், சோழனின் கலை நுணுக்கம் நம்மைச் சொக்க வைக்கிறது. கணபதியின் சிறுஉருவம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

இங்கே மேற்குப்பகுதிச் சுவரில் கிழக்கு நோக்கிய, யோக சரஸ்வதி மகாலட்சுமி, கங்காதேவி, அதிகார நந்தி சிற்பங்கள் உள்ளன. தட்டையான ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்ட சாளரங்கள் (ஜன்னல்கள்), கலையழகையும், காற்றசைவையும் உணர வைக்கின்றன.

இங்கே தெற்கு பார்த்த சன்னிதியில் நின்று பெரிய நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.

ராஜ கம்பீர மண்டபத்தைக் கடந்தால், பம்பரம் போல் உள்ள 58 தூண்களுடன் மகா மண்டபம் உள்ளது. அங்கும் சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அர்த்த மண்டபத்திற்குள் நுழையும் முன் துவாரபாலகர்கள் வழவழப்பான கல்லில் மெருகுடன் காட்சி தருகின்றனர். வலப்புறம் விநாயகரும், இடதுபுறம் ஆறுமுகப்பெருமானும் இருக்கின்றனர். ஆறுமுகப்பெருமானுக்கு, உச்சியில் ஆறாவது தலை இருப்பது எங்கும் காணக்கிடைக்காத சிறப்பாகும். மகாமண்டபத்தின் அடியில் மன்னனது அந்தரங்க ஆலோசனைக்கூடம் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். இரண்டாம் ராஜராஜனின் அவைக்களப் புலவராக கவிச் சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் இருந்திருக்கிறார். அவரது ‘தக்கையாகப் பரணி’ எனும் நூல் புகழ் பெற்றது. அந்தக் கதைகளின் அடிப்படையிலும் இங்கே சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருக்கோவிலை வெளிப்பிரகாரத்தில் வலம் வரும் போது, தேவ கோட்டத்தில் நரசிம்மரின் உக்ரம் தணித்த சரபேஸ்வரர் தெற்கு பார்த்த சன்னிதியிலும், அதனை அடுத்து தட்சிணாமூர்த்தி ஒரு சன்னிதியிலும் அருளாட்சி செய்கின்றனர். மூலவரின் மேலே உள்ள விமானம் தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானத்தைச் சுற்றிலும் 63 நாயன்மார்கள் உள்ளிட்ட திருத்தொண்டர் தொகையில் வரும் 72 பக்தர்களின் வரலாற்று நிகழ்வுகள் சிற்பங்களாக விளங்குகின்றன. வடபுறத்தில் தல விருட்சமான வில்வமரம் பசுமையுடன் நிற்கிறது. அருகே உள்ள சுவரில் யானையும் காளையும் தலை இணைந்த சிற்பம் பலராலும் பாராட்டப்படுகிறது. ராஜகம்பீர மண்டபத்தின் வடக்குச் சுவர்களில், அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் சிலைகளாக அமர்ந்துள்ளனர்.

தல வரலாறு

ஒரு சமயம் துர்வாச முனிவர் தேவலோகம் சென்றார். சிவபெருமானிடம் சமர்ப்பிக்க வேண்டி ஒரு தெய்வ மலரை இந்திரனிடம் கொடுத்தார். தனது வெள்ளை யானையான ஐராவதத்தின் மேல் அமர்ந்து வந்து கொண்டிருந்த இந்திரன், துர்வாசர் தந்த மலரை வாங்கி யானையின் மத்தகத்தின் (தலைப்பகுதி) மீது வைத்தார். யானை துதிக்கையால் அதை எடுத்து கீழே போட்டு மிதித்து விட்டது.

இதனைக் கண்டு கொதித்துப் போன துர்வாசர், இந்திரனுக்கும், ஐராவத யானைக்கும் சாபமிட்டார். அந்த சாபத்தால் ஐராவதம் யானை, வெள்ளை நிறம் மாறி கருமையானது. இந்திரனும் செல்வங்களை இழந்து விட்டான்.

தனது சாப நிவர்த்திக்காக ஐராவதம் இத்தலத்திற்கு வந்து நீராடி, சிவலிங்கத்தை தினமும் அபிஷேகித்தது. சாப விமோசனம் அடைந்த யானை, தனது பழைய வெள்ளை நிறத்தை மீண்டும் பெற்றது. எனவே மூலவரான முக்கண் முதல்வர் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார் என்பது தலபுராணக்கதை.

தாராசுரம் கோவில், காணும் இடமெங்கும் எழில் கொஞ்சும் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்களுடன் கலைக் கருவூலமாகக் காட்சித் தருகிறது. கல்லிலே கலை வண்ணம் கண்ட சோழனின் பெருமையைப் பறை சாற்றும் இக்கோவில், யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்குகிறது என்பது தமிழனுக்குப் பெருமை.

- டாக்டர்.ச.தமிழரசன்


Next Story