தமிழில் பூஜை நடைபெறும் கேரள ஆலயம்


தமிழில் பூஜை நடைபெறும் கேரள ஆலயம்
x
தினத்தந்தி 28 May 2019 7:21 AM GMT (Updated: 28 May 2019 7:21 AM GMT)

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு என்ற இடத்தில் அமைந்திருக்கும் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

தல வரலாறு

செங்குந்த முதலியார் குடும்பத்தினர் சிலர், காஞ்சிபுரத்தில் இருந்து பாலக்காடு அருகிலுள்ள கொடும்பு என்ற இடத்திற்குச் சென்று நெசவுத் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள், நெசவு செய்த துணிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள அவினாசியில் விற்றுவிட்டு, அங்கிருந்து நெசவுக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

ஒரு முறை அவர்கள் அவினாசி வந்து விட்டு ஊர் திரும்பிய போது, கோழிமாம்பட்டி என்ற இடத்திற்கு அருகில், திடீரென்று “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டுக் கீழே இறங்கிய அவர்கள், சுற்றிலும் பார்த்தனர். அங்கு ஒருவரையும் காணவில்லை. பின்னர், அவர்கள் மீண்டும் வண்டியில் ஏறிப் புறப்படத் தயாரானார்கள்.

ஆனால், அந்த மாட்டு வண்டி அங்கிருந்து முன்னோக்கிச் செல்லாமல் நின்றது. அவர்கள், எவ்வளவோ முயற்சித்தும், மாடு முன்னோக்கிச் செல்ல மறுத்தது. அப்போது மீண்டும், “நானும் வருகிறேன், நானும் வருகிறேன்” என்ற குரல் தெளிவாகக் கேட்டது. அவர்கள் குரல் வந்த திசையில் சென்று பார்த்தனர். அங்கேயிருந்த புதரில் கல் ஒன்று மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஒளிமயமான அந்தக் கல்லைக் கண்டு திகைத்த அவர்கள், அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வந்து, தங்களுடைய நூல் மூட்டை ஒன்றில் பாதுகாப்பாக வைத்தனர். அடுத்த நிமிடம், அந்த மாடு முன்னோக்கி நகரத் தொடங்கியது.

கொடும்பு திரும்பிய அவர்கள், அங்கிருந்த சிவன் கோவிலில் தனிச்சன்னிதி ஒன்று அமைத்து, அந்தக் கல்லை வைத்து, அதனுடன் ஒரு வேலையும் நிறுவி, சுப்பிரமணிய சுவாமியாக வழிபடத் தொடங்கினர். அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் பூஜைப் பணிகளைச் செய்து வந்த குரூர் மனை அச்சுதன் நம்பூதிரி என்பவர், சிவபெருமானுக்குச் செய்து வரும் கேரள முறையிலான பூஜையைப் போன்றே, சுப்பிரமணிய சுவாமிக்கும் தானே பூஜை செய்வதாகச் சொன்னார்.

ஆனால், அதைச் செங்குந்த முதலியார் குடும்பத்தினர் ஏற்கவில்லை, தமிழ்நாட்டில் இருந்து வந்த முருகப்பெருமானுக்குத் தமிழ் முறையிலான பூஜையே செய்ய வேண்டும் என்றனர். அதற்கு நம்பூதிரி ஒப்புக் கொள்ளவில்லை. அந்த நம்பூதிரி, பாலக்காடு அரசரிடம் சென்று முறையீடு செய்தார்.

பாலக்காடு அரசர் அவ்விடத்திற்கு வந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பார்த்தார். இருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ‘கோவிலின் வடக்கு வாசலில் இரண்டு பிரிவினரும் கும்பங்களை வைக்க வேண்டும். அந்தக் கும்பத்தை யார் எடுக்கிறார்களோ, அவர்கள் முறைப்படியே முருகப்பெருமானுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று மன்னன் உத்தரவிட்டார்.

செங்குந்த முதலியார் சார்பில் மதுரையில் இருந்து மாணிக்கவாசகர் வரவழைக்கப்பட்டார். அவர் தமிழில் பாடி ஒரு கும்பத்தை வைத்தார். நம்பூதிரி சில மந்திரங்களைச் சொல்லி ஒரு கும்பத்தை வைத்தார். மாணிக்கவாசகர் வைத்த கும்பத்தை நம்பூதிரியால் எடுக்க முடியவில்லை. ஆனால், நம்பூதிரி வைத்த கும்பத்தை மாணிக்கவாசகர் எடுத்து விட்டார். அதனைக் கண்ட அரசர், கோவிலில் தமிழ் முறைப்படியே பூஜை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

தோல்வியடைந்த நம்பூதிரி தனது நிலத்தின் ஒரு பகுதியை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தானமாக எழுதிக் கொடுத்தார். அவர் அளித்த தானத்திற்கு ஈடாக, தைப்பூசம், சூரசம்ஹாரம், கோவிலில் முருகப்பெருமான் நிறுவப்பட்ட நாள் மற்றும் நவராத்திரி என்று ஆண்டுக்கு நான்கு முறை சுப்பிர மணிய சுவாமியின் திருமஞ்சனக் கலசம் அச்சுதன் நம்பூதிரியின் குரூர் மனையைச் சுற்றி வருவதற்குச் செங்குந்த முதலியார்கள் ஒப்புதல் அளித்தனர். இவ்வாறு ஆலயம் அமைந்த தல வரலாறும், அதன் வழிபாட்டு முறைக்கான வரலாறும் சொல்லப்படுகின்றன.

கோவில் அமைப்பு

இக்கோவில் கோபுரம், தேர்கள், தேர்கள் நிறுத்தி வைக்கப்படும் மண்டபங்கள் போன்றவை தமிழ்நாடு கட்டுமான முறையில் அமைந்திருக்கின்றன. இக்கோவிலுக்கான கருவறையில் சுப்பிரமணிய சுவாமி, இரு மனைவிகளான வள்ளி, தெய்வானை ஆகியோருடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், உமாதேவி, பரசு ராமர், கிருஷ்ணர், சாஸ்தா, கால பைரவர் சன்னிதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. செண்பக மரம், ஆலய தலவிருட்சமாக இருக்கிறது.

இத்தலத்தில் முருகப்பெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தை மாதம் பரணி நட்சத்திர நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரையிலான ஆண்டு விழாவாகத் தைப்பூசம் விழா கொண்டாடப்படுகிறது. இதே போல் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் தொடங்கி கந்தசஷ்டி வரையிலான சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும். மாதம் தோறும் வரும் சஷ்டி, கிருத்திகை நாட்களும், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் போன்றவைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. பழனி முருகன் கோவிலில் நடைபெறும் விழாக்கள், தேரோட்டம் போன்றவை இக்கோவிலிலும் நடைபெறுவதால், இந்த ஆலயத்தை ‘பழனியில் பாதி கொடும்பு’ என்று போற்றி மகிழ்கின்றனர்.

கருவறையிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி- தெய்வானை சிலைகள் ஒரே சிலையில் செதுக்கப்பட்டவை. இங்கு திருமணம் செய்து கொள்வது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால் இத்தல இறைவனை ‘கல்யாண சுப்பிர மணிய சுவாமி’ என்றே அழைக்கின்றனர். திருமணம் செய்த தம்பதியர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நிலையில், இக்கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால், அவர்களின் மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் அருகே ஓடும் நதியை ‘சோகநாசினி’ என்று அழைக்கின்றனர். இந்நதியில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை வழிபடுபவர்களின் சோகங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கின்றனர். இந்த நதியில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. கும்பகோணத்தில் நடக்கும் மகாமக நாளிலேயே, இங்கும் மகாமகத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொடும்பு எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பாலக்காடு நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

- தேனி மு.சுப்பிரமணி

Next Story