ஆன்மிகம்

வாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும் + "||" + Watseka miracle and superior miracles

வாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும்

வாட்சேகா அதிசயமும், மேலான அற்புதங்களும்
‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரால் எழுதப்பட்ட விதம், அந்த காலத்தில் பல விமர்சனங்களை எழுப்பியது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார், “ஐசிஸ் தேவதை ஒவ்வொரு ரகசியமாக எனக்கு வெளிப்படுத்தினாள்.
ஒவ்வொரு திரையாக விலக்கிப் பல பேருண்மைகளை எனக்கு உணர்த்தினாள். அதனால் எழுதிய எதற்கும் நான் உரிமையோ, பெருமையோ கோரவில்லை. ஏனென்றால் எதுவும் என் அனுபவ ஞானமோ, பேரறிவோ அல்ல. எல்லாம் அவள் தந்த ஞானம். அதுவும் என் குருவின் ஆசியாலும் உதவியாலுமே சாத்தியமானது.” என்று வெளிப்படையாகச் சொல்லி இருந்த போதும், அந்த நூல் பலரது கூட்டு முயற்சியால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அந்த நூலின் ஆன்மிக ஆழங்களை அறிய முடியாத சிலரோ, அவர் உடலில் வேறு சிலரின் ஆவிகள் புகுந்து எழுதியிருக்கக்கூடும் என்று கூட நினைத்தார்கள். அதற்குக் காரணம் இருந்தது...

சில வருடங்களுக்கு முன் லண்டனின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பாதிரியாரின் மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான். சில மாதங்கள் கழிந்த பின் ஒரு நாள் அவன் தன் பெயர், குடும்பம், அனைத்தையும் திடீரென்று மறந்து, வேறு பெயர், வேறு குடும்ப விவரங்களைக் கூறுவதாகச் செய்திகள் வெளியாயின. அது மட்டுமல்லாமல் அதுநாள் வரை இசையில் பெரிய ஆர்வமோ, திறமையோ காட்டியிராத அவன், திடீரென்று இசையில் பாண்டித்தியம் காட்ட ஆரம்பித்ததையும் அனைவரும் கண்டார்கள்.

அதே போல் அமெரிக்காவிலும் இல்லினாய்ஸ் பகுதியில் இருக்கும் வாட்சேகா என்ற நகரில் கூட, 1848 வாக்கில் அதிசயமான ஒரு சம்பவம் நடந்து. அது பின் உலக அளவில் ‘வாட்சேகா அதிசயம்’ (Watseka Wonder) என்று அழைக்கப்பட்டுப் பரபரப்புடன் பேசப்பட்டது. வாட்சேகா நகரில் பிறந்து வளர்ந்த லூரன்சி என்ற பதிமூன்று வயதுச் சிறுமி கடுமையான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் திடீரென்று தன்னுடைய பெயர் மேரி ரோப் என்று கூற ஆரம்பித்தாள். சொந்தப் பெற்றோர்களை அடையாளம் காண முடியாத அவள், தன் பெற்றோர்களின் பெயர்களாக வேறு பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தாள். விசாரித்ததில் வேறு ஒரு ஊரில் மேரி ரோப் என்ற பெண்மணி இருந்தாள் என்றும், அவள் முப்பது வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள் என்றும் தெரியவந்தது. அந்த மேரி ரோபின் பெற்றோர் பெயர் லூரன்சி சொன்ன பெயர்கள்தான். லூரன்சி அந்த ஊருக்குப் போனவள் அல்ல. அவள் சொல்லும் மேரி ரோப் முப்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டிருந்ததால் லூரன்சி அவளை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவள் கூறிய விஷயங்கள் பொதுமக்களின் திகைப்பையும், ஆர்வத்தையும் அதிகப்படுத்தியது.

இந்தச் செய்தி மேரி ரோப் குடும்பத்தையும் எட்டியது. மேரி ரோபின் தாயும், சகோதரியும் ஆர்வத்துடன் லூரன்சியைக் காண வாட்சேகா நகருக்குப் பயணமாயினர். அவர்கள் லூரன்சியின் வீட்டை நெருங்குவதற்கு முன்பே தூரத்தில் இருந்து அவர்களைப் பார்த்த லூரன்சி “என் தாயும் சகோதரியும் வருகிறார்கள்” என்று சொல்லி இருக்கிறாள். சகோதரியின் பெயராக லூரன்சி தெரிவித்த பெயர், மேரி ரோபின் குடும்பத்தினர் மட்டுமே அழைத்த செல்லப்பெயராக இருந்தது. இந்தத் தகவல் அறிந்து மேரி ரோபின் தந்தையும் அங்கு வந்தார். அவள் சொன்ன விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தது அவரையும் வியக்க வைத்தது. அவர்களுடன் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக லூரன்சி அடம்பிடிக்கவே அவள் பெற்றோர்கள் மேரி ரோபின் பெற்றோருடன் தங்கள் மகளைச் சில காலம் இருந்து வர அனுப்பியும் வைத்தார்கள்.

அவர்களுடன் சென்ற பிறகு லூரன்சியின் உடல்நலம் தேற ஆரம்பித்தது. பின் நான்கு மாதங்கள் மேரி ரோப் ஆகவே லூரன்சி வாழ்ந்தாள் என்றே சொல்ல வேண்டும். மேரி ரோபின் உறவினர்களையும் நண்பர்களையும் அவள் அடையாளம் கண்டு மேரி ரோப் போலவே அவர்களிடம் பழகினாள். அவர்கள் எல்லோரும் வியக்கும்படியாக அவள் பல பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தாள். இடையிடையே லூரன்சிக்கு தற்போதைய நினைவுகளும் வந்து சென்றன. பின் ஒரு காலத்தில் முழுமையாக மேரி ரோப் நினைவு அவளிடமிருந்து அகன்று விட்டது. பிறகு லூரன்சி திரும்பவும் தன் ஊருக்கே வந்து குடும்பத்துடன் இணைந்தாள். திருமணமாகி வேறு ஊருக்குச் சென்ற பின் அவளுக்கு மேரி ரோப் நினைவோ, பழைய மாற்றங்களோ வரவேயில்லை. அவள் குடும்பத்தினரும் அது குறித்துப் பேசுவதையோ, நினைவுபடுத்துவதையோ தவிர்த்தார்கள். லூரன்சி இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். ஆனால் அந்த நான்கு மாத காலங்களில் நடந்தேறிய மாற்றங்களுக்கான காரணமும், விளக்கமும் யாருக்கும் கிடைக்கவில்லை.

இந்த வாட்சேகா அதிசயம் உலக அளவில் பேசப்பட்டதுடன், அமெரிக்க உளவியல் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் எழுதிய ஒரு நூலிலும் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. 2009-ல் வாட்சேகா அதிசயம் சம்பவத்தைத் தழுவி ‘The Possessed’ என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்தக் காரணங்களால் ‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூலும், அப்படி வேறு ஆவி அல்லது ஆத்மா ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடலில் புகுந்து எழுதப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதினார்கள். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் இருந்து அந்த நூலை எழுதிய கர்னல் ஓல்காட் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பாரதத்தின் ஆன்மிக நூல்களைப் படித்து அந்தத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், ‘மாயையின் திரை விலகும் போதெல்லாம் ஆன்மிக உச்சங்களையும் ஆழமான கருத்துக்களையும், உண்மையான தேடலுடன் இருக்கும் ஒருவன் அறிய முடியும்’ என்று உறுதியாக நம்பினார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்திருந்தது போல, குருவருளால் அது சாத்தியமாகி இருக்கலாம் என்றே நினைத்தார். மகாத்மாக்களின் செயல்பாடுகளாக அவருக்குத் தோன்றிய சம்பவங்களையும் அவரால் மறுக்க முடியவில்லை. அவரும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் தியோசொபிகல் சொசைட்டி இயக்கத்தை ஆரம்பித்தது ஆன்மிகத்தையும், மானுட சகோதரத்துவத்தையும் வளர்க்கத்தானே? அதனால் வாட்சேகா அதிசயம் போன்ற சம்பவத்திற்கு, ‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூல் எழுதப்பட்ட சம்பவத்தை இணையாகப் பேசுவதை பொருளற்றதாக அவர் நினைத்தார்.

மேலும் அவருடைய நியூயார்க் விலாசத்திற்கு அனுப்பப்பட்ட தபால்கள் நியூயார்க் செல்லாமலேயே அவர் இருக்கும் பிலடெல்பியாவுக்கு வந்த விதம், அவர் புதிதாக வாங்கிய நோட்டுப்புத்தகத்தைப் பிரிப்பதற்கு முன்பே எழுதப்பட்டிருந்த விஷயங்கள், இறந்துபோன ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரவழைத்த விதம், எல்லா வற்றுக்கும் மேலாக கர்னல் ஓல்காட் சரிபார்க்க ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தரத்திலிருந்து வரவழைத்துக் கொடுத்த புத்தகங்கள் என எத்தனையோ அற்புதங்கள் அவர் மனதில் பசுமையாக இன்னமும் இருந்தன.

அது மட்டுமல்லாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் பரிட்சயமான பிறகு, மகாத்மாக்களின் சக்திகளை அவரும் பல முறை கண்டார். அமெரிக்காவில் அவர் கண்ட சில மகாத்மாக்களைப் பிற்காலத்தில் இந்தியாவிலும் அவர் கண்டிருக் கிறார். அவர்கள் இந்தியாவில் உயிரோடு வாழும் மகாத்மாக்கள் என்றும், அவர்கள் தங்கள் உடலோடு இந்தியாவை விட்டுச் சென்றதில்லை என்பதும் அவருக்குப் பின்னர்தான் தெரிந்தது. அவர்களை அமெரிக்காவில் அவர் கண்டது சூட்சும சரீரங்களில் என்பதையும் அவர் பிற்காலத்தில் தான் அறிந்துகொண்டார். யோகிகளும், சித்தர்களும் செய்ய முடிந்த அற்புதங்களுக்கு இணையே இல்லை என்பதும், அவற்றைச் சில்லறை வித்தைகளுடனும், தற்செயலான அமானுஷ்ய நிகழ்வுகளுடனும் ஒப்பிடுவது அறியாமையே என்பதும் அவர் அபிப்பிராயமாக இருந்தது.

(இப்படி ஒரே ஆளை இரு இடங்களில் பரமஹம்ச யோகானந்தரும் கண்டது, அவருடைய பிரபலமான ‘ஒரு யோகியின் சுயசரிதை’ நூலைப் படித்தவர் களுக்கு நினைவிருக்கலாம்)

-தொடரும்.