ஆன்மிகம்

அன்பின் வெளிப்பாடே இரக்கம் + "||" + Expression of love and compassion

அன்பின் வெளிப்பாடே இரக்கம்

அன்பின் வெளிப்பாடே இரக்கம்
‘அன்பின்றி அமையாது உலகு’ என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே. இவ்வுலகில் அன்பில்லை என்றால் வாழ்வதற்கு ஒரு சுவராசியமும் இருக்காது.
‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.

உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அன்பின் வெளிப்பாடு இல்லையேல் ஒரு பயனும் இல்லை. அயலானிடம் இரக்கம் காட்டுபவன் தான் உண்மையான அன்புடையவன். அன்பின் வெளிப்பாடே இரக்கம். அதை நாம் அறிந்துகொள்ளவும் உணரவும் முடியும்.

“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்று அன்னை தெரசா தனது வார்த்தையின் படி வாழ்ந்து காட்டியவர். உலகமெங்கும் இரக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர். மரணப் படுக்கையில் இருக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களை கட்டியணைத்து புன்னகை யோடு அவர்களுக்கு வேண்டியதை செய்தவர். இயேசுவின் வாழ்க்கையே, அன்னை தெரசாவுக்கு ஏழை பணி தான் தன் வாழ்வின் முதல் பணி என்று தேர்ந்தெடுக்க வைத்தது.

நீதிமொழிகள் 21:21 வசனத்தில் “நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்” என சொல்லப்பட்டுள்ளது. தன்னை தான் தாழ்த்தி தன்னலம் துறந்து வாழும் மனிதனால் தான் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட முடியும். அதுவே உண்மையான இறைபணி.

முதலாவதாக தயை உடையவர்கள் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பார்கள். வேதம் தெளிவாக சொல்கிறது “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரை சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” (பிலிப்பியர் 2:4). தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக வாழும் வாழ்க்கையையே கடவுள் விரும்புகிறார்.

குறைந்தபட்சம் நாம் சந்திக்கும் மக்களிடம் ஒரு புன்னகையாவது கொடுத்து விட்டுச் செல்லலாமே. நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லி சொந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட தயவாக பேச நேரம் செலவிட மக்கள் மறந்து விடுகிறார்கள். தினமும் வீட்டில் குடும்ப ஜெபமும் அன்றைய தினத்தை பற்றிய ஒரு சின்ன பகிர்தலும் இருப்பது மிகவும் நல்லது. அது குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்ப உதவும்.

தயையுடையவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க தயங்க மாட்டார்கள். பல நேரங்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னாலே போதும், கவலையில் வாழும் மக்களுக்கு அந்த நிலையிலிருந்து மீண்டு வர அதுவே ஒரு வாய்ப்பாக அமையும். நம் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப உதவுகிறதா? இல்லை உடைத்து விழ செய்கிறதா என்று ஆராய வேண்டும்.

நம் கடவுள் நமக்கு எப்போதும் ஆறுதலாக இருப்பவர். அவரை பின்பற்றும் நாமும் அதை போல தான் மற்றவர்களுக்கு ஆதரவாக வாழ வேண்டும்.

2 சாமுவேல் 22:19 இப்படி கூறுகிறது: “என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்”.

சற்று சிந்தித்து பார்ப்போம், கடைசியாக எப்போது பெற்றோரிடம் ஆறுதலாய்ப் பேசினோம்?, அவர்களுடைய தேவைகளை அவர்கள் கேட்கும் முன்பே நிறைவேற்றியிருக்கிறோமா?, நம்முடன் பணி புரிபவர்களின் துயரங்களைக் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? இல்லையேல் இனிமேலாவது நம் அயலாருக்கு ஆறுதலாக கர்த்தர் கற்பித்தபடி நடப்போமா?

இரக்கமுள்ளவர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் வாழ்வார்கள். மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்து விட்டு அவருக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாக அறிந்தால் அப்படியே விட்டு விடுவதில்லை. நோயாளிக்கு வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யாமல் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதில்லை. எப்படியாவது அவரை குணப்படுத்த வேண்டும் என்று பிரயாசப்படுவார்.

அதேபோல, நல்ல நண்பர்கள் சில சமயங்களில் நம் தீய செயல்களைக் கண்டு அப்படியே விட்டு விடாமல் கடிந்து கொள்வதுண்டு. அதுவும் இரக்கத்தின் வெளிப்பாடே.

இரக்கம் என்பது எப்போதும் பணிந்து போவதல்ல, மாறாக தவறுகளை தட்டிக்கேட்டு திருத்துவது அதன் முக்கியமான சிறப்பம்சமாகும். உண்மையான நண்பன் நம் வாழ்வின் நன்மைக்காக ஏற்படுத்தும் காயங்கள் கூட நல்லது தான், ஒரு எதிரியின் முத்தத்தை விட.

காலம் தாழ்த்தாமல் பிறருடைய தேவையை அறிந்து உடனே செயல்படுவதே முக்கியம். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு. தாமதித்தால் அந்த வாய்ப்பு கைவிட்டு போகும். இப்படி நீங்கள் இழந்த வாய்ப்புக்கள் எத்தனை?

இயேசு நம்மை பார்த்து பசியாயிருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், தாகத்தை தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், ஏற்றுக்கொண்டீர்கள்; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக்கொண்டீர்கள் என்று சொல்லும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்வோம். எல்லோரையும் நேசிப்போம், இரக்கம் காட்டுவோம்.

“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்ற அன்னை தெரசாவின் வாழ்க்கை நமக்கு ஊக்கமூட்டட்டும்.

துலீப் தாமஸ், சென்னை.