தருமதேவனுக்கு அருள்புரிந்த சந்திரசூடேஸ்வரர்
சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வந்தாலும், அவர் விரும்புவது என்னவோ ‘ரிஷபம்’ என்னும் காளை வாகனத்தைத் தான். அந்தளவுக்கு நந்தியம்பெருமான், சிவனின் நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் உரியவர் ஆவார்.
தன்னை நம்பும் அடியார்களுக்கு எல்லாம் அருள்பாலிக்கும் சிவபெருமானை, எருதுவாக மாறி தாங்கி சுமக்கலாமே என்ற எண்ணம், தருமதேவன், நான்முகம், திருமால் ஆகியோருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக காளை வாகனமாக மாறி, ஈசனை தாங்கிச் சுமக்கும் பேறினைப் பெற்றனர்.
முதலில் தருமதேவனே காளை வடிவத்திற்கு மாறி, சிவனை சுமக்கும் பேறு பெற்றார். எவரும் செய்திராத செயலை செய்ததால், தருமதேவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் நான்முகனும், திருமாலும் கூட, காளை வடிவம் எடுத்து சிவபெருமானைச் சுமந்தனர். அதனால் தருமதேவன் மகிழ்ச்சியை இழந்தார்.
மீண்டும் ஒரு தன்னிகரற்ற சேவையை இறைவனுக்கு செய்ய விரும்பிய தருமதேவன், சிவனை நோக்கி தவம் இருந்தார். அந்த தவத்தின் இறுதியில் சிவபெருமானின் அருளால் குன்றாக மாறி, அவரை தாங்கும் பேறினைப் பெற்றார். அந்தக் குன்றின் பெயர் ‘எருதுமலை.’ குன்றின் மேல் குடிகொண்ட இறைவன் பெயர் சந்திரசூடேஸ்வரர். இந்தக் குன்றானது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ளது. இத்தல இறைவன் ‘செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டவர்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி உமையவள் மற்றும் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தராக காட்சி தருகிறார். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன. தல விருட்சம் வில்வம், தல தீர்த்தம் மரகதசரோவம் எனப்படும் பச்சைக் குளம்.
தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தலவரலாறு
இந்த ஆலயத்தைப் பற்றிய முழுமையான வரலாறு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஒரு தொண்மக் கதையின் அடிப்டையில் கூறப்படும் வரலாறு வழக்கில் உள்ளது.
முன்னொரு காலத்தில் தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக தனக்கு காட்சியளித்த இறைவனிடம், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி தருமதேவன் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே தருமதேவனை, தன்னுடைய வாகனமாக, காளையாக மாற்றிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தருமதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி, அதில் உமையுடன் எழுந்தருள வேண்டும் என்று சிவனைப் பணிந்தார். சிவபெருமானும், ரிஷப வடிவில் ‘விருஷபாசலம்’ என்னும் மலையை உருவாக்கி, அங்கு தங்கினார்.
தான் தங்கிய இடத்திற்கு தேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார், ஈசன். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.
இதற்கிடையில் பார்வதியுடன் வந்த தோழிகள், அவரைப் பிரிந்து கானகம் முழுவதும் அலைந்தனர். தாகம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கு எந்த ஆறோ, குளமோ தென்படவில்லை. அவர்கள் பார்வதியை நினைத்து தங்கள் தாகத்தைத் தீர்க்க வேண்டினர். உடனே பார்வதி தேவி, ஒரு குளத்தை உருவாக்கினாள். அதில் தன் தோழிகளுடன் பார்வதி இறங்கி நீராடினாள். அப்போது அந்தக் குளமே பச்சை நிறமாக மாறியது.
பார்வதி நீராடியபோது அவள் கண்களை விட்டு மறைந்த உடும்பானது, அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி, அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். மலை உச்சியில் இருந்த செண்பக மரத்தில் உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முத்கலன் என்ற முனிவர் உடும்பைப் பார்த்தார். அவர் சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணனை கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் உடும்பை பிடிக்க முயன்றபோது அது மறைந்தது. அதனால் பார்வதி திகைத்தாள்.
பொன்னிற உடும்பு மறைந்ததற்கு, முனிவர்கள் இருவர்தான் காரணம் என்று நினைத்த பார்வதிதேவி, அவர்கள் மீது கோபம் கொண்டாள். உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், சத்தம் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவர்கள் இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டாள். அதைக் கேட்டு முனிவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பார்வதி தேவியிடம் தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்.
பார்வதியும் கோபத்தில் சிவ பக்தர்களை சபித்ததை எண்ணி வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தாள். அப்போது ஈசன் அங்கு தோன்றி, “தருமதேவனுக்கு அளித்த வாக்கின்படி, சில காலம் தங்கி இருக்கவே நான் உடும்பு வடிவில் வந்தேன். அதோடு தேவியும் என்னோடு இங்கு தங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருவிளையாடல் நடத்தினேன். நீங்கள் சாபம் பெற்றாலும், வேடுவ குலத்தில் பிறந்து வேட்டையாடிவரும் போது, உடும்பாக என்னைக் காணும்போது சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று முனிவர்களுக்கு அருளினார்.
அதன்படி வேடுவர்களாக பிறந்த அந்த இரண்டு முனிவர்களும், அதே மலை மீது உடும்பைக் கண்டு, சாபத்தில் இருந்து மீண்டனர். பின்னர் அவர்கள் ஈசனுக்காக அங்கு ஆலயத்தை எழுப்பினார்கள்.
ஆலய அமைப்பு
ஆலயம் மலைமீது இருந்தாலும், மூன்று ஏக்கர் பரப்பளவில் இரண்டு திருச்சுற்றுக்களுடன் விஸ்தாரமாக அமையப்பெற்றிருக்கிறது. இக்கோவிலானது, கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், உற்சவர் மண்டபம், மரகதாம்பிகை கருவறை, ஏழு கலசங்களைக் கொண்ட ஐந்துநிலை ராஜகோபுரம் ஆகியவற்றைக் கொண்டு கம்பீரமாக திகழ்கிறது.
தெற்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக முதல் திருச்சுற்றுக்குச் சென்றால், வலதுபுறம் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்கலாம். முதல் பிரகாரத்தை இடமாகச் சுற்றி மேற்கு வாசல் வழியாக இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால், பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமானை வழிபடலாம். இவர்களைத் தொடர்ந்து அர்த்த மண்டபத்தின் இருபுறத்திலும் விநாயகர், முருகன் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக கருவறைக்குள் மூலவர் சந்திரசூடேஸ்வரர் சூரிய- சந்திர பிரகாசத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கருவறைக் கோட்டத்தில் மகாகணபதி, ஸ்ரீகணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். திருமாளப்பத்தி மண்டபத்தில் கிழக்கில் சந்திரன், இந்திரன், அக்னி, தெற்கில் சப்தமாதா, எமன், அறுபத்துநால்வர் ஆகியோரும், மேற்கில் உற்சவர், ராஜகணபதி, வருணன், சரஸ்வதி, கஜலட்சுமி, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதியில் இருந்து அருள்கிறார்கள்.
மூலவர் கருவறைக்கு இடதுபுறம் மரகதாம்பிகை உட்கோவில் அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்பாக ஸ்ரீசக்கரம் இடம்பெற்றுள்ளது. திருமாளப்பத்தி மண்டபத்தின் வடக்குப் பகுதியில் குபேரர், 16 லிங்கங்கள், ஈசானியர், உற்சவர், பஞ்சலிங்கங்கள், காலபைரவி, வீரபத்திரர், சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளன. ஆலயத்திற்குச் செல்லும் மலைப்பாதையில், இந்த ஆலயத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காளிகாம்பாள் சமேத காமாட்சீஸ்வரர் கோவில் இருக்கிறது.
சந்திரசூடேஸ்வரர் ஆலயத்தில், சிவாலயங்களுக்கே உரித்தான அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. தவிர ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி அன்று தேர்த் திருவிழா நடக்கிறது. அம்பாள் முன்பாக உள்ள ஸ்ரீசக்கரத்துக்கு, ஆடி மாதம் நவசண்டி யாகம் நடத்தப்படுகிறது. முதல் பிரகாரத்திலுள்ள ஜலகண்டேஸ்வரர், தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் உள்ளே இருக்கிறார். மழை இல்லா காலங்களில் தண்ணீர்தொட்டி போன்ற அமைப்பில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி நிரப்பப்படுகிறது. இப்படி தொடர்ந்து பதினாறு நாட்கள் செய்து, பின்னர் கற்பூரம் காட்டி பிரார்த்தனை செய்கின்றனர். தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீர் குறையாமல் இருந்தால் அடுத்த சில தினங்களில் மழை வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 49 கிலோமீட்டர் தொலைவிலும், ஓசூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது சனசந்திரம் என்ற கிராமம். இங்குள்ள மலை மீதுதான் சந்திரசூடேஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார்.
- நெய்வாசல் நெடுஞ்செழியன்
Related Tags :
Next Story