நல்வாழ்வு அருளும் நவராத்திரி வழிபாடு - 29-9-2019 நவராத்திரி வழிபாடு ஆரம்பம்


நல்வாழ்வு அருளும் நவராத்திரி வழிபாடு - 29-9-2019 நவராத்திரி வழிபாடு ஆரம்பம்
x
தினத்தந்தி 24 Sep 2019 9:59 AM GMT (Updated: 24 Sep 2019 9:59 AM GMT)

‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி.

‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி. பெண்மைக்கு முக்கியத்துவம் தந்து, ‘தீமையை அழிக்கும் வலிமை கொண்டது பெண் சக்தி’ என்று உலகத்தாரை உணரவைத்த மகாசக்தி பொருந்திய பெண் தெய்வத்தின் யுத்த வரலாறுதான் இந்த நவராத்திரி விழாவின் அடிப்படை.

புராணங்களின்படி தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பெருங்கொடுமைகள் புரிந்தவன் மகிஷன் என்னும் அசுரன். எருமை தலை கொண்டதால் மகிஷன் என்று பெயர் பெற்றார். இவனை அழிக்க மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்களின் சக்திகளில் இருந்து தோற்றுவித்த மகாசக்தி, தொடர்ந்து ஒன்பது நாட்கள் இரவு பகலாக அவனை எதிர்த்துப் போராடி பத்தாம் நாள் அவனை வெற்றி கொண்டு மகிஷாசுரமர்த்தினியாக அருள்புரிந்த நிகழ்வே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

இந்த நவராத்திரி விழாவானது, புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் விரதங்கள், இரவு நேர பூஜை வழிபாடுகளோடு நடைபெறும். பத்தாம் திதியான அம்பிகை, அசுரனை வெற்றிகொண்ட தசமி திதியுடன் இந்த விழா நிறைவு பெறும்.

நம்மால் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளின் பின்னணியிலும், மகத்தான காரணம் ஒன்றை நம் ஆன்மிகம் வைத்திருக்கும். அதன்படி நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி சக்தியின்றி இயங்காத வாழ்வின் சத்தியத்தை நமக்கு புரியவைக்கிறது.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இதன் முதல் மூன்று நாட்கள் வணங்கப்படும் துர்க்காதேவி, இச்சாசக்தியாக நமக்குள் மறைந் திருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல மனிதனாகும் வல்லமையை அருள்கிறாள். அடுத்து வரும் மூன்று நாட்கள் மனித வாழ்விற்குத் தேவையான எல்லா செல்வங்களையும் தந்து நம்மை கவலைகள் அற்ற முழு மனிதனாக்கும் கிரியாசக்தியாக அன்னை மகாலட்சுமி வணங்கப்படுகிறாள். கடைசி மூன்று நாட்கள் மனித வாழ்வின் அனைத்தும் உணர்ந்து ஞானம் பெற்று மோட்சம் அடைய வழிகாட்டும் ஞானசக்தியான சரஸ்வதியை வணங்கி இம்மை வாழ்விலேயே நற்பேறு பெறுகிறோம்.

கொலுவின் தத்துவம்

நவராத்திரி வந்துவிட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கொண்டாட்டம்தான். பலவிதமான பொம்மைகளை தங்கள் கற்பனைக்கேற்ப வடிவமைத்து வருபவரின் பாராட்டைப் பெறலாமே. பொம்மைகள் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அம்பிகைக்கும்தான். எப்படி என்கிறீர்களா?

சுரதா எனும் அரசர், தன் எதிரிகளை அழிக்க தன் அரசவை குருவிடம் ஆலோசனை கேட்டார். குரு சொன்னபடி, தூய களிமண்ணால் காளி ரூபம் வடித்து, அதை ஆவாகனம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு, அன்னையின் அருளால் பகைவர்களை அழித்தான் என்பது புராணக்கதை.

தேவி புராணத்தில் அம்பிகை கூறிய “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜிப்போருக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்” என்ற வாக்கின்படி சுரதா அரசர் செயல்பட்டு தன் பகைவர்களை வென்றார்.

எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அம்மன் அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப்படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன. குறிப்பாக அன்னை பராசக்தியின் அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கிய கொலு, அன்னையின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். ஒரு செல் உயிர்கள் முதல் பல்வேறு நிலை கொண்ட பரிணாம வளர்ச்சி உயிர்கள் வரை அனைத்தும் அந்த அன்னையின் படைப்பே என்பதையும் உணர்த்தும் கொலு இது.

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்துள்ளனர் ஆன்மிக நெறியாளர்கள். பெண்களை மையப்படுத்தி கொண்டாடப்படும் நவராத்திரிக்கும், அற்புதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. இந்த 9 நாட்களும் வழிபட வேண்டிய சக்திகள், அவர்களுக்கு ஏற்ற மலர்கள், கோலங்கள், ராகம், நிவேதனம், இசைக்கருவி என அனைத்து பற்றியும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி முதல் மூன்று நாட்கள் துர்க்காதேவியின் அம்சங்களான மகேஸ்வரி, கவுமாரி, வராகி ஆகிய சக்தி களையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சங்களான மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி ஆகிய சக்திகளையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சங்களான பிரம்மி, சாம்பவி, நரசிம்மி ஆகிய சக்தி களையும் வழிபட்டு வாழ்விற்குத் தேவையான வீரம், செல்வம், ஞானம் ஆகியவற்றைப் பெறுகிறோம். நவராத்திரியின் ஒன்பது தேவதைகளுள் ஏழு தேவதைகள் சப்தமாதாக்கள் எனப்படும் சப்தகன்னியர். இன்னொருவர் மகாலட்சுமி. இவர்களுடன் சேர்ந்து நரசிம்மியையும் வழிபடுகிறோம்.

தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட முறைப்படி பூஜைகளும், பாராயணமும் செய்யவேண்டும் என முறைபடுத்தப்பட்டுள்ளது. அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைக்க வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து தேவியை துதிக்க வேண்டும். வயது வாரியான கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும்.

பெண்களால் பெண் சக்திகளை ஆராதிக்கும் தெய்வீக பண்டிகையான நவராத்திரியில், வீட்டில் சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து தங்களால் முடிந்த அளவில் கொலுப்படிகள் அமைத்து அலங்கரித்து, முழு சிந்தையையும் அந்த மகாசக்தியின் மீது செலுத்தி, அனைவரையும் வீட்டுக்கு வரவேற்று, அவர்களை சக்திகளாக பாவித்து உபசரிக்க வேண்டும். அவர்களின் மனமும், வயிறும் நிறைந்தாலே, முப்பெரும்தேவிகளின் அகம் குளிர்ந்து வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

‘வசதி உள்ளவர்கள் அனைத்து வழிபாடுகளையும் முறையே செய்ய முடியும். நமக்கு செய்ய வசதியில்லையே’ எனும் மனக்குறையை தவிர்த்திடுங்கள். குத்துவிளக்கையே தேவியின் வடிவமாக பாவித்து முடிந்ததை பிரசாதம் செய்து ஒரு பெண்ணை அழைத்து அவர் களுக்கு மனதார தாம்பூலம் தந்து உபசரித்தாலே இந்த பூஜையின் முழுப்பலனையும் அன்னை உங்களுக்கு அருள்வாள். அன்னைக்கு தேவை தூய அன்பு மட்டுமே. அதை அப்பழுக்கின்றி தந்தாலே, அனைத்து செல்வங்களையும் அவள் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பாள்.

மனங்களின் வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நவராத்திரியில், நவதேவியரை வழிபட்டு நல்வளங்கள் பெறுவோம்.

Next Story