இன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர்


இன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 1:20 PM GMT)

அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அமிர்தம் வெளிப்பட்டதும், அதைப் பருகுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரச்சினை உருவானது. அப்போது மோகினி வடிவம் எடுத்த திருமால், அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்தார். இதனால் அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் கோபம் கொண்டனர்.

அமிர்தத்திற்கு இணையான, இறவா நிலையைத் தரும் ஒரு பானத்தை தயாரிக்க அசுரர்கள் முடிவு செய்தனர். இதற்காக சுக்ரன் தலைமையிலான அசுரர்கள் பூலோகத்தில் கருவைப் பதியில் களா வனத்தில் பால் தடாகத்தினை உருவாக்கினர். அந்த தடாகத்தில் உள்ள பாலை அசுரர்கள் குடித்தால் அவர்களை எவராலும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்படும். இதனை அறிந்த தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிடுகிறார்கள். சிவபெருமான் பால் தடாகத்தினை நீர் தடாகமாக மாற்றி அமைத்தார். இதனால் வேதனை அடைந்த அசுரர்கள், ‘இப்படி யார் செய்தது?’ என நிஷ்டையில் காணும் போது, சிவபெருமான் தெரிந்தார்.

உடனே அசுரர்கள் அனைவரும், “ஈசனே, தேவர்களை வெல்வதற்கு எங்களுக்கு வரம் கொடுங்கள்” என்று கேட்டனர். அதற்கு சிவபெருமான், “தேவர்கள் என்னை எப்போது மறக்கிறார்களோ, அப்போது நீங்கள் அவர்களை வெல்லலாம்” என வரம் கொடுத்தார். பால் தடாகத்தில் உருவாகிய சிவன் ‘பால் வண்ண நாதர்’ என்றும், சுக்ரன் உருவாக்கிய பால் தடாகம், ‘சுக்ரவ தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

உலகத்தை சமநிலைக்கு கொண்டுவருவதற்காக, அகத்திய பெருமானை தென்திசைக்கு அனுப்பி வைத்தார், சிவபெருமான். தென் திசை வந்த அகத்தியர், தன் ஒருவனால் பொதிகையில் நின்று உலகத்தை சமன் செய்ய இயலாது என்றும், தனக்கு தனி சக்தி வேண்டும் என்றும் கருதி, ஸ்ரீசக்கர பராசக்தி பீடம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

இந்தக் கோவிலில் சுக்ரன் உருவாக்கிய ‘சுக்ர தீர்த்தம்’, அக்னி தேவன் உருவாக்கி வழிபட்ட ‘அக்னி தீர்த்தம்’, அம்பாள் உருவாக்கிய ‘தேவி தீர்த்தம்’ ஆகிய தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத்தல இறைவனை, முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு சவுந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்று பெயரும் உண்டு. ஆலய தல விருட்சம் களா மரம். இந்தக் கோவிலை பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், காகபுஜண்டர், நாரதர், சூரியன், சந்திரன், லட்சுமணன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

ஆலய அமைப்பு

இந்த ஆலயமானது, மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கோவிலின் 125 அடி உயர ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே செல்கிறோம். மிகவும் பழையான தலம் என்பதை பறைசாற்றும் விதமாக கோவிலின் கூரையில் மூலிகை வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதைக் கடந்து உள்நுழைந்தால், அகத்தியர், சந்திரன், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களைத் தாண்டி சென்றால், கர்ப்பக் கிரகத்தில் பால்வண்ண நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தானே வளர்ந்த லிங்கமாக வெண்ணிறத்தில் காட்சி தரும் இவரைத் தேடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை தரும் நாயகனாக ஈசன் ஆட்சி செய்கிறார்.

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பால் வண்ணநாதரை வணங்கி வெளியே வந்தால், திருச்சுற்றில், துர்க்கை அம்மன், 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், பஞ்சலிங்கம் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். ஆவணி மாதம் அன்னையின் தபசுக்கு காட்சி தந்த லிங்கோத்பவர் கருவறையின் பின்புறம் இருந்து அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் இருக்கும் வீரசண்முகர் மிகவும் விசேஷமானவர். வைகாசி விசாகத் திருநாள் அன்று, இவரை காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் வழிபடுவார்கள். கேட்ட வரம் தரும் சண்முகராக இவர் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதி முன்பு திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் 16 வகையான பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது பலரது நம்பிக்கை. எனவே இங்கு நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேலும் ஆலயத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களின் சன்னிதிக்கு அடுத்தபடியாக தல விருட்சமான களா மரம் உள்ளது. தொடர்ந்து பைரவர் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு வர வேண்டும். அங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தியை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக உதயமார்த்தாண்டேஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கும், அவருக்கு நோ் எதிரில் சடையப்பர் உள்ளார். இவர் அமர்ந்திருக்கு இடத்தின் ஈசான மூலையில் புற்று ஒன்று மேல் இருந்து கீழ்நோக்கி இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. தனிச் சன்னிதியில் ஒப்பனையம்மாள் வீற்றிருக்கிறார். அழகு மிகுந்த இந்த அன்னையை தரிசனம் செய்வதே பேரானந்தம்தான். ஆவணி மாதம் தபசு ஏற்றிய அன்னை இவள். இந்த தேவியை வணங்கி, ஒரு மண்டலம் பூஜை நடத்தி வந்தால், மனம் குளிர்ந்த வாழ்க்கையும், அதன் மூலம் முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள்.

ராமாயணத்தில் இறுதிகட்ட போரின் போது, ராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, இத்தலம் வந்து ஈசனை வணங்கினான் லட்சுமணன். அதன் காரணமாக இத்தலத்தில் தனிச் சன்னிதியில் மேற்கு நோக்கி, ஈஸ்வரராகவே லட்சுமணன் வீற்றிருக்கிறான். இந்த மேற்கு பார்த்த சிவலிங்கத்தை வணங்கினால், 1000 சிவாலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள், மேற்கு பார்த்து உள்ளது. எனவே இக்கோவிலை வணங்கினால் 200 சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இது தவிர இந்த ஆலயத்தில் நவக்கிரகத்திற்கும், சாஸ்தாவிற்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயம் சங்கரன்கோவில் ஆலயத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.

இக்கோவிலில் சித்திரை தீர்த்தவாரி, வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருவம்மானை, ஆடிப்பூரம், ஆவணி தபசு 14 நாட்கள், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பத்ர தீபம், மாசி மகா சிவராத்திரி, பங்குனியில் 12 நாட்கள் பிரமோற்சவம், சபாபதி ஆறுகால அபிஷேக ஆராதனை, சமயகுரவர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் குருபூஜை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி, மாதாந்திர கார்த்திகை, பிரதி செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆவணி மற்றும் பங்குனியில் தேரோட்டமும் உண்டு.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ஸ்ரீவரதுங்கராம பாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பர நாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம் வந்த நல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் பாடி துதித்துள்ளனர்.

இந்தக் கோவிலில் உள்ள இறைவனை வேண்டி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒரு மண்டலம் பூஜை செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். இழந்த பொருட்களை மீட்க வேண்டும் என்பவர்கள், இத்தலம் வந்து இறைவனை வழிபடலாம். மனநோய் இருப்பவா்கள், வெற்றிக்காக போராடுபவா்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்லலாம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

இந்த ஆலயமானது, சங்கரன்கோவிலில் இருந்து ராஜ பாளையம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் கரிவலம் வந்த நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோ மூலமாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாம்.

முத்தாலங்குறிச்சி காமராசு

யானை வழிபட்ட திருத்தலம்

ஒரு காலத்தில் இந்திரனுக்கும், அவரது மகனுக்கும் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தின் காரணமாக அவர்கள் வேடர் களாக இருந்து, இத்தல இறைவனான, பால்வண்ண நாதரை பூசித்து வந்தனர். காலையில் வேடர்கள் இருவரும் ஈசனை பூசிக்க, இரவு நேரத்தில் யானை ஒன்று பால்வண்ணநாதரை பூசித்தது. மறுநாள் ஆலயத்திற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடப்பதைக் கண்ட வேடர்கள் கோபம் கொண்டனர். இரவு நேரத்தில் வரும் யானைதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அறிந்த அவர்கள், மறுநாள் இரவு யானை வந்தபோது, அதை அம்பு எய்து கொல்ல முயற்சி செய்தனர். அப்போது அந்த யானை வெள்ளை யானையாக உருவெடுத்தது. அதே நேரத்தில் வேடர்களாக இருந்த இந்திரனும், அவரது மகனும் சாப விமோசனம் பெற்றனர். இந்திரன் மற்றும் அவரது மகன் சாபம் தீர்ந்ததாலும், கரி (யானை) வலம் வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு ‘கரி வலம் வந்த நல்லூர்’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முத்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் போன்ற பெயர்கள் உண்டு.

Next Story