கேட்ட வரம் அருளும் அருணாசலேஸ்வரர்


கேட்ட வரம் அருளும் அருணாசலேஸ்வரர்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:05 AM GMT (Updated: 29 Oct 2019 10:05 AM GMT)

எதுமலை - அழகு தாலாட்டும் இந்தக் கிராமத்தில் நடுநாயகமாய் அமைந்துள்ளது ஒரு சிவாலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருணாசலேஸ்வரர். இறைவின் பெயர் உண்ணாமுலையம்மன். பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது.

விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அங்கு எதுர்மலை, பாலைமலை என இரண்டு ஊர்கள் இருந்தன. இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பெரிய குளம். அந்த இரண்டு ஊர்களிலும் இரண்டு பெருமாள் ஆலயங்களும், சிவாலயமும் இருந்தன.

அங்கிருந்து இந்தப் பக்கம் குடியேறிய ராயர் வம்சத்தினர் அதே அமைப்பில் இரண்டு கிராமங்களை அமைத்தனர். அதே பெயர்களில் இங்கு அமைக்கப்பட்ட ‘எதிர்மலை’ திரிந்து ‘எதுமலை’ என தற்போது அழைக்கப்படுகிறது. பாலைமலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கிராமம் தற்போது ‘பாலையூர்’ என வழங்கப்படுகிறது. இந்த ஊர் எதுமலைக்கு அருகிலேயே உள்ளது.

அங்கு உள்ளது போல் தம் வம்சத்தினர் வழிபட பாலையூரில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தையும், எதுமலையில் வரதராஜப்பெருமாள் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆலயங்களையும் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார்.

இது செவி வழி தல வரலாறு. பின்னர் வந்த மன்னர்கள் இந்த ஆலயங்களை புனரமைப்பு செய்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த சிவாலய முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான திருச்சுற்று உள்ளது. வலதுபுறம் பல்லாண்டுகளைக் கடந்த தல விருட்சம் வில்வம் தழைத் தோங்கி காட்சி தருகிறது. அடுத்துள்ளது மகா மண்டபம். அதை அடுத்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அடுத்தாற்போல் உள்ள கருவறையில், மூலவர் அருணாசலேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் சன்னிதியை அடுத்து இறைவி உண்ணாமலை அம்மனின் தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தல அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியிருக்க, கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அன்னை நின்ற கோலத்தில் இளநகை தவழ கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயர்களும், கிழக்கில் கால பைரவரும், சூரியனும் அருள் பாலிக்கின்றனர். தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தில், சிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி 30 நாட்கள், தைப் பொங்கல், ஆண்டு பிறப்பு முதலிய நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை ஏற்றும் வைபவமும், ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இங்கு மேற்கு திருச்சுற்றில் பாலமுருகன் என்ற திருநாமத்தில், நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே கோஷ்டத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

வேண்டிய வரத்தை வேண்டியபடி அருளும் இத்தல இறைவன், இறைவியை நாமும் ஒரு முறை தரிசிக்க எதுமலை சென்று வரலாமே.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருச்சி மாட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எதுமலை கிராமம். திருச்சியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.

குடும்ப சகிதமாக நந்தீஸ்வரர்

பொதுவாக சிவாலய கருவறைக்கு எதிரில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார். இங்கும் நந்தியம் பெருமான் இருக்கிறார். அது மூன்று நந்தியாக இருக்கிறது. அதாவது தாய், தந்தை, கன்று என்ற அமைப்பில் மூன்று நந்திகள் இறைவனின் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ளன. அந்தக் காலத்தில் இந்த கிராமம் மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் நிறைய காட்டு எருமைகள் மனம் போல் திரிந்து கொண்டிருந்தன. ஊரில் இருந்த விளை நிலங்களையும், வாழை மற்றும் தென்னை மரங்களையும் இந்த காட்டு எருமைகள் கூட்டமாக வந்து துவம்சம் செய்து கொண்டிருந்தன. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

அவர்கள் இத்தல இறைவன் அருணாசலேஸ்வரரின் சன்னிதியின் எதிரே நந்தி பகவானை குடும்ப சகதிமாய் பிரதிஷ்டை செய்து தங்கள் வேதனைகளை சொல்லி கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து அவர்களுக்கு நந்தி பகவானின் அருள் பரிபூரணமாகக் கிடைத்தது. அதன் பின் காட்டு எருமைகள், விளைச்சல் நிலங்களின் பக்கமே வருவது இல்லையாம். இன்னும் தங்கள் நிலங்களில் விளையும் பயிர்கள் சேதாரம் இன்றி வீட்டிற்கு வந்து சேர, பக்தர்கள் நந்தியின் குடும்பத்தை ஆராதனை செய்ய தவறுவதில்லை.

- ஜெயவண்ணன்

Next Story