மேன்மையான இதயமும், மேலான சக்திகளும்


மேன்மையான இதயமும், மேலான சக்திகளும்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:17 AM GMT (Updated: 29 Oct 2019 10:17 AM GMT)

உண்மையாக ஒருவன் ஆன்மிகப் பயணத்தில் ஈடுபடும் போது, அவன் போக வேண்டிய வழிகளையும், அடைய வேண்டிய நிலைகளையும் அவன் மன ஆர்வமும், இறைசக்தியும் சேர்ந்து முடிவெடுக்கின்றன.

மேற்போக்கான எண்ணங்களும், ஆர்வமும் இருக்குமானால் அவன் அடைகின்ற முன்னேற்றமும் மேற்போக்காகவே இருக்கும். அதற்கான இறை ஆசீர்வாதமும் அந்த அளவிலேயே இருக்கும். அவனுடைய நோக்கமும், மன உறுதியும் மிக உயர்ந்த அளவில் இருக்குமானால், அதற்கான இறை சக்தி ஆசீர்வாதமும் உன்னதமாகவே இருக்கும். கர்னல் ஓல்காட்டின் ஆன்மிக ஆர்வமும், சேவை மனப்பான்மையும் அவரை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிக்க வைத்து, அங்கேயும் சில அனுபவங்களைத் தந்தன.

கர்னல் ஓல்காட் இலங்கைக்குப் போயிருந்த வேளையில் இலங்கையில் புத்த மதத்தின் ஒரு பிரிவு, நிறைய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த மாற்றத்திற்கான தேவையை உணர ஆரம்பித்தவர்கள் பழைய, தேக்கமான ஆன்மிக முறைகளில் இருந்து, உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான முன்னேற்றங்களுக்குப் போக முயன்று கொண்டிருந்தார்கள்.

கர்னல் ஓல்காட் எந்த மத நம்பிக்கையிலும் தங்கி, ‘அந்த முறையே சிறந்தது’ என்று நம்புபவர் அல்ல. அவர் புத்த மத நூல்களில் ஆர்வம் காட்டிப் படித்தறிந்து அவற்றின் சாராம்சத்தை ஒரு நூலாக வெளியிடுவது என்று முடிவெடுத்தார். அதற்கு அங்கே பலர் ஆதரவு தெரிவித்தனர்.

‘ஒரு அமெரிக்கர், தியோசபிகல் சொசைட்டி என்ற புதியதொரு அமைப்பை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உருவாக்கியவர், நம்முடைய மதத்தைக் குறித்தும் ஆர்வம் காட்டு கிறாரே, அதற்கு நாம் கண்டிப்பாக அவருக்கு ஆதரவு காட்ட வேண்டும்’ என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் கர்னல் ஓல்காட் இலங்கையில் பல இடங்களில் பேச ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதற்குக் கட்டணம் வசூலித்து அந்த வசூல் தொகையை புத்தக அச்சடிப்புக்கு என ஒதுக்கி வைத்தார்கள். கர்னல் ஓல்காட்டின் பேச்சுகள் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் ஆனது. அந்த தொகையைக் கொண்டு, எளிமையான, பல ஆழமான விஷயங்கள் அடங்கிய ஒரு நூல் இலங்கையில் வெளியானது. அது பலரும் பாராட்டும் நூலாக அமைந்தது.

அடுத்ததாக கர்னல் ஓல்காட் சிறையில் இருக்கும் குற்றவாளிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தி, அவர்களை ஆன்மிகத்திற்குத் திருப்பும் நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதற்குச் சாதாரண பொதுமக்களிடம் அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுடைய சமூகக் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது என்ற உயர்ந்த நோக்கத்தைச் சொல்லி, பணம் வசூலித்தார்கள்.

அப்போது ஒரு ஏழை மூதாட்டி வீட்டுக்குள் சென்று ஒரு ரூபாய் எடுத்து வந்து நன்கொடை அளித்தார். ஆடைகள் நைந்திருந்தன. ஆங்காங்கே கிழிசல்கள் தைக்கப்பட்டிருந்தன. அவர் கண்ணீர் மல்க சொன்னார். “இத்தனை குறைவான தொகை தருகிறேன் என்று தயவுசெய்து தவறாக நினைத்து விடாதீர்கள். நான் மாவரைத்து சம்பாதித்து வருகிறேன். என் கணவர் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார். இந்த ஒரு ரூபாய் எனக்குப் புதிய ஆடை வாங்க நான் சிறுகச் சிறுகச் சேமித்தது. எனக்கு ஆடை வாங்குவதை விட சமூக இளம் குற்றவாளிகளைத் திருத்தும் பணி உயர்வானது. அதில் நான் பங்களிக்க விரும்புகிறேன். இனி ஒரு ஆறு மாதம் பணம் சேமித்து பிறகு எனக்கு ஒரு ஆடை வாங்கிக் கொள்கிறேன்”

கர்னல் ஓல்காட் நெகிழ்ந்து போனார். அந்த ஒரு ரூபாய் பல லட்ச ரூபாயைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது என்று அவர் நினைத்து, அங்கேயே ஒரு துணியை விரித்து அதில் அந்த மூதாட்டியின் ஒரு ரூபாயைப் போட்டு விட்டுச் சொன்னார். “இந்த ஒரு ரூபாயை இத்தனை வறுமைக்கு நடுவில் தந்த இந்த மூதாட்டியின் கர்மா மிக உயர்ந்தது. இதற்கு எதுவும் ஈடு இணை இல்லை. இது போன்ற மேலான இதயங்களாலேயே உலகம் சிறக்க முடியும். இந்த ஏழைத்தாயின் மிக உயர்ந்த கர்மாவுக்கு உங்களால் முடிந்த நன்கொடை தாருங்கள். நான் நிதி கேட்டு வந்திருக்கும் நோக்கம் மிக உயர்ந்ததுதான் என்றாலும் இந்தத் தாயிற்கு நம்மால் உதவ முடிவது அதற்கு இணையான உயர்ந்த செயல் என்று நான் கருதுகிறேன்”

உடனடியாக அந்தத் துணியில் பலர் தங்களால் முடிந்த நாணயங்களைப் போட்டார்கள். ஐந்து நிமிடத்தில் முப்பது ரூபாய் சேர்ந்து விட்டது. சம்பவம் நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி என்பதால், அந்த முப்பது ரூபாயும் சிறிய தொகை அல்ல என்றே சொல்ல வேண்டும். அந்த ஏழை மூதாட்டியிடம் அந்த முப்பது ரூபாயை வழங்கிய போது புதையலே கிடைத்தது போல அவர் உணர்ந்து நன்றியுடன் கண்ணீர் விட்டார். நல்ல கர்மாக்களுக்கு நல்ல பலன்களே விளையும் என்றாலும் மனிதர்கள் தங்கள் முயற்சிகளால் அதற்கு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்த கர்னல் ஓல்காட் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசச் சென்ற போது அந்த மூதாட்டியை வரவழைத்து மேலும் ஒரு நல்ல தொகையைத் தந்து கவுரவித்தார்.

இந்தியா திரும்பிய கர்னல் ஓல்காட் இந்தச் சம்பவத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார்.

“கடுமையான வறுமையிலும் தர்ம சிந்தனை குறையாமல் இருப்பது, மானுடத்தின் மேன்மை எக்காலத்திலும் அழிந்து விடுவதில்லை என்பதற்கான உதாரணமாக இருக்கிறது” என்று அம்மையார் சொன்னார்.

மறுபடியும் இந்தியாவில் அவர்களது ஆன்மிகப்பணிகள் தொடர்ந்தன. அவர்களிடம் வேலையாளாகவும், தியோசபிகல் சொசைட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவனாகவும் தாமோதர் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் அவன் நிறைய தபால்களைக் கொண்டு வந்தான். அந்தத் தபால்களில் நான்கு மகாத்மாக்களின் கடிதங்கள் இருந்தன. வேறு வேறு விலாசங்களில் இருந்து அவை வந்திருந்தன. அந்தத் தபால் ஆபீசுகளின் முத்திரைகளும் அவற்றில் இருந்தன.

அப்போது அவர்களுடன் ஸ்மித் என்ற பேராசிரியர் இருந்தார். அவரிடம் கர்னல் ஓல்காட் இதற்கு முன் இந்தத் தபால்களில் கூட நிறைய அற்புதங்கள் நடந்திருக்கின்றன என்பதை விவரித்தார். இவற்றில் மகாத்மாக்களும் இடையிடையே தங்களுடைய கருத்துகளைச் சேர்த்து விடுவதுண்டு என்றும் சொன்னார்.

அவர் சொன்னதெல்லாம் அந்தப் பேராசிரியரை பெருவியப்பில் ஆழ்த்தியது. “எழுதி ஒட்டப்பட்டு தபாலில் அனுப்பிய பின்பு அந்தத் தபால்களில் எப்படி மகாத்மாக்கள் எழுத முடியும்” என்று திகைப்புடன் கேட்டார்.

“அது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ முறை அப்படிச் சில தபால்களில் மகாத்மாக்களின் கட்டளையையும், செய்திகளையும் பெற்றிருக்கிறோம்” என்று கர்னல் ஓல்காட் சொன்னார்.

அந்தப் பேராசிரியர் நம்ப முடியாமல் எல்லாத் தபால்களையும் வாங்கிப் பார்த்தார். எல்லாத் தபால்களும் சரியாக ஒட்டப்பட்டிருந்தன. வேறு வேறு இடங்களிலிருந்து அவை வந்திருந்தன. அந்தந்த தபால் ஆபீசுகளின் முத்திரைகளும் இருந்தன.

பேராசிரியர் ஸ்மித் கேட்டார். “இந்தத் தபால்களில் எதிலாவது மகாத்மாக்களின் கட்டளை இருக்க வாய்ப்பிருக்கிறதா?”

கர்னல் ஓல்காட் சொன்னார். “இருக்கலாம்”

“எதிலிருக்கிறது என்று பிரிக்காமலேயே தெரியுமா? பிரித்தால் தான் தெரியுமா?” என்று பேராசிரியர் கேட்டார்.

கர்னல் ஓல்காட் வேண்டுமென்றே “எனக்குப் பிரித்துப் படித்தால் தான் தெரியும். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குப் பிரிக்காமலேயே தெரிய வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார்.

அதைக் கேட்ட பின் பேராசிரியர் ஸ்மித் சும்மா இருக்க முடியாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு நச்சரித்தார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கடைசியில் ஒத்துக் கொண்டு எல்லா தபால்களையும் பார்த்து, அவற்றில் இரண்டு தபால்களில் மகாத்மாக்களின் செய்திகள் இருக்கின்றன என்றார். அதோடு நிற்காமல் அந்த இரண்டு தபால்களையும் தன் நெற்றியில் சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்து விட்டு அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் சொன்னார்.

பேராசிரியர் ஸ்மித் பரபரப்புடன் அந்த இரண்டு தபால்களைப் பிரித்துப் பார்த்தார். அந்த இரண்டு தபால்களிலும் மகாத்மாக்களின் செய்திகள் இருந்தன என்பது மட்டுமல்ல அதிலிருந்த தகவல்களும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னதாகவே இருந்தன என்பது தான் பேராச்சரியம்!

- என்.கணேசன்

-தொடரும்.


Next Story