நம்பகத்தன்மை


நம்பகத்தன்மை
x
தினத்தந்தி 12 Nov 2019 5:33 PM IST (Updated: 12 Nov 2019 5:33 PM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நம்பகத்தன்மை’ குறித்த தகவல்களை காண்போம்.

நம்பகத்தன்மை என்பது ஒரு சிறந்த பண்பு. மக்களை வெகுவாக கவர்ந் திழுக்கும் பண்புகளில் இதுவும் ஒன்று. நம்பகத்தன்மை என்பது பேச்சில் மட்டும் இருந்துவிடக் கூடாது.

நம்பகத்தன்மை என்பது நாவு சார்ந்த விஷயமோ, உள்ளம் சார்ந்த விஷயமோ கிடையாது. அது உடல் சார்ந்த, உடல் அமைப்பு சார்ந்த, உடல் இயக்கம் சார்ந்த, செயல் சார்ந்த விஷயமாக அமைந்துள்ளது. அதனால்தான் அதை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.

நம்பகத்தன்மையின் உண்மையான நோக்கம், ‘நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை சேதாரமின்றி, பாதகமின்றி திருப்பிச் செலுத்துவது’ ஆகும். நம்பி ஒப்படைக்கப்பட்டவை பொருள், பொறுப்பு, கடன், கடமை, பணம், பதவி என எதுவாகவும் இருக்கலாம். நம்மை நம்பி யார் எதை ஒப்படைத்தாலும், அவர் அதை திருப்பிக் கேட்கும் போது திருப்திகரமாக செலுத்திட வேண்டும்.

இந்த தன்மை உள்ளவரிடம் இயற்கையாகவே இறைநம்பிக்கை குடி கொண்டிருக்கும். இந்த தன்மையற்றவரிடம் ஒருபோதும் இறைநம்பிக்கை இணைந்திருக்க வாய்ப்பில்லை. இது நபி (ஸல்) அவர்களின் கருத்து ஆகும்.

‘எவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் பரிபூரண இறைநம்பிக்கை இல்லை. எவரிடம் உடன்படிக்கையை நிறைவேற்றுதல் இல்லையோ, அவரிடம் பரிபூரண மார்க்கப்பற்று இல்லை என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

இறை நம்பிக்கையின் அடையாளம்

‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதி அளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவ மதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ, அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

‘உன்னிடம் நான்கு அம்சங்கள் இருந்தால், நீ உலக வாழ்வில் தவறவிட்ட எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அவை: உண்மை பேசுவது, நம்பி ஒப்படைக்கப்பட்டதை பாதுகாப்பது, நற்குணத்துடன் நடந்து கொள்வது, தூய்மையான உணவை உண்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது).

நபி (ஸல்) அவர்களின் இயற்கை குணமாக நம்பகத்தன்மை இருந்துள்ளது. இதனால்தான் நபியவர்கள் ‘அல்அமீன்’ (நம்பகத்தன்மையாளர்) என்றும், ‘அஸ்ஸாதிக்’ (வாய்மையாளர்) என்று ம் அழைக்கப்பட்டார்கள்.

மக்காவாசிகளின் தொல்லைகள் காரணமாக நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு அகதிகளாக செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த நிலையிலும் தமது மருமகன் அலி (ரலி) அவர்களிடம், ‘என்னை நம்பி குறைஷிகள் ஒப்படைத்த பொருட்களை மக்காவில் தங்கி, நீர் ஒப்படைத்து விட்டு வாரும்’, என நபி (ஸல்) அவர்கள் கூறியது மெய் சிலிர்க்க வைக்கிறது.

இறைவன் நம்மிடம் ஒப்படைத்த மார்க்கமும், மார்க்க கடமைகளும், பகுத்தறிவும், உடல் சார்ந்த உறுப்புகளும், நமது பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அனைத்தும் ‘அமானிதம்’ எனும் அடைக்கலப் பொருட்களேயாகும். நாம் இவற்றில் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவற்றில் எதிலும் நாம் நம்பிக்கை மோசடி செய்யக்கூடாது.

இறைவனின் விசாரணை

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நமது பெற்றோரும், நம்மை நம்பி வந்த மனைவியும், குழந்தைகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிறரின் பொருட்களும் அமானிதங்களே. இவற்றை நாம் பாழ்படுத்தி விடக்கூடாது. இது குறித்து இறைவன் நாளை மறுஉலகில் விசாரிப்பான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:

‘நினைவில் கொள்க, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் (குடும்பத்தலைவன்) தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் (குடும்பத்தலைவி) தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

இறைவன் நமக்கு வழங்கிய உறுப்புகள் அமானிதமே. இறைகோபத்திற்கு ஆளாகாத வண்ணம் அவற்றை பாதுகாப்பது அவசியமே. இது குறித்து திருக்குர்ஆன் (17:36) குறிப்பிடும்போது, ‘(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர். (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது’ என்று தெரிவிக்கிறது.

இரவல் பொருட்களை ஒப்படைப்பதும், நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களும் அமானிதங்களே. இவற்றை வாங்கியது போன்று, கொடுத்தது போன்று திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப் படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ (திருக்குர்ஆன் 4:58)

ரகசியத்தை பாதுகாப்பதும் அமானிதமே

‘ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால், அந்தச் செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)

ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆயினும் அவரது செய்கை அதை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விதத்தில் இருந்தால், அதுவும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித செய்தியாகும். பொருளைப் போன்று அதையும் பாதுகாப்பது அவசியமாகும்.

நம்பகத்தன்மை குறைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். நம்பகத்தன்மையை பாழ்படுத்தினால் நரகம், அதை பாதுகாத்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதை பின்வரும் நபி மொழிகள் விளக்குகின்றன:

“நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் உலக அழிவு நாளை நீ எதிர்பார்க்கலாம்’ என்றார்கள். அவர் ‘இறைத்தூதரே, அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு, ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக் கொள்’ என நபி (ஸல்) பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘என்னிடம் உங்களில் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்பவருக்கு நான் உங்களுக்கு சொர்க்கத்தை பிணையாக பெற்றுத் தருகிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், நீங்கள் வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள், உங்களது மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்களது கரங்களை தீங்கிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மது)

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story